
மக்கள்தொகையை கட்டுப்படுத்த வேண்டுமானால் பெண்கள் கல்வி கற்க வேண்டும் என்று பேசி சர்ச்சை ஏற்படுத்திய பிகார் முதல்வர் நிதிஷ்குமார் புதன்கிழமை அதற்காக மன்னிப்பு கேட்பதாக கூறினார்.
முன்னதாக, பிகார் சட்டபேரவையில் செவ்வாய்கிழமை பேசிய முதல்வர் நிதிஷ்குமார், மக்கள்தொகையைக் கட்டுப்படுத்துவதில் பெண் கல்வியின் முக்கியத்துவம் குறித்து தெரிவித்த கருத்து சர்ச்சைக்கு வழிவகுத்தது. பெண்கள் கற்றவர்களாக இருந்தால் கணவனை கட்டுப்படுத்தலாம் என்று பேசிய அவர், "கணவனின் செயல்கள் அதிக பிறப்பு விகிதத்துக்கு வழிவகுக்கின்றன. கல்வியறிவு பெற்ற பெண் இதனை எப்படி கட்டுப்படுத்தலாம் என்பதை நன்கு அறிவாள். இந்தக் காரணங்களினால் குழந்தை பிறக்கும் எண்ணிக்கை குறைந்துள்ளது. பிகாரில் முன்பு 4.3 சதவீதமாக இருந்த பிறப்பு விகிதம் தற்போது 2.9 சதவீதமாக குறைந்துள்ளது. விரைவில் அது 2 சதவீதமாக குறையும்" என்று கூறினார்.
அவரது பேச்சுக்கு பா.ஜ.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. அவரின் பேச்சு பெண்களை ஆபாசமாகவும் பெண்களை இழிவுபடுத்துவது போல இருப்பதாகவும் கூறினர். நிதிஷ்குமார் தமது பதவியை ராஜிநாமாச் செய்ய வேண்டும் என்றும் கோரினர்.
மத்திய இணையமைச்சர் அஸ்வின் குமார் செளபே கூறுகையில், "பேரவையில் இவ்வாறு பேசுவது வெட்கக்கேடானது. அவர் மனநிலை பாதிக்கப்பட்டுள்ளார் என்று தெரிகிறது. முதல்வர் தனது பதவியை ராஜிநாமா செய்துவிட்டு உடனடியாக ஒரு மருத்துவரைச் சந்திக்க வேண்டும் " என்று தெரிவித்தார்.
பாஜகவின் தேசிய செய்தித் தொடர்பாளர் ஷெஹாத் பூனாவாலா கூறுகையில், "சட்டப்பேரவைக்குள் நிதிஷ்குமார் பயன்படுத்திய வார்த்தை மிகவும் மோசமானவை என்று தெரிவித்துள்ளார்.
இதனிடையே, நிதிஷ் குமாரின் பேச்சு தரக்குறைவானதாக இருந்ததாக தேசிய மகளிர் ஆணையத்தின் தலைவி ரேகா ஷர்மா கண்டனம் தெரிவித்துள்ளார். அவர், "பிகார் முதல்வரின் கருத்து மிகவும் கவலையை அளிக்கிறது. பெண் எம்எல்ஏக்களின் முன்னிலையில் அவர் பேசிய விதம் மூன்றாம் தர சினிமா வசனம் போல இருந்தது. இதைவிட மோசமானது அவருக்கு பின்னால் இருந்த ஆண்கள் அதற்காக சிரித்ததுதான். முதல்வரின் செயல்களும் சைகைகளும் ஆபாசமான நகைச்சுவைப் போலவே இருந்தது. அவரது கருத்தை அவைக்குறிப்பிலிருந்து நீக்காத பேரவைத் தலைவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.
இந்த நிலையில் பிகார் முதல்வர் நிதிஷ்குமார் புதன்கிழமை சட்டப்பேரவைக்கு வந்த போது பா.ஜ.க. உறுப்பினர்கள் பிரதான நுழைவாயிலில் நின்று கொண்டு அவரைத் தடுத்தனர். இதனைத் தொடர்ந்து நேராக செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய முதல்வர், "எனது வார்த்தைகள் புண்படுத்தியிருந்தால் அதற்காக நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். யாரையும் புண்படுத்துவது எனது நோக்கமில்லை. மக்கள் தொகையைக் கட்டுப்படுத்துவதில் கல்வியின் முக்கியத்துவத்தை நான் எப்போதும் வலியுறுத்தி வந்துள்ளேன். பெண்களுக்கான அதிகாரம் மற்றும் முன்னேற்றத்திற்காக நான் எப்போதும் துணை நின்றுள்ளேன்" என்று தெரிவித்தார்.
இதனிடையே முதல்வர் நிதிஷ் குமார் பாலியல் கல்வி பற்றியே பேசியுள்ளார். அவரது பேச்சு தவறாக அர்த்தப்படுத்தப்பட்டுள்ளது என்று பிகார் துணைமுதல்வர் தேஜஸ்வியாதவ் கூறியுள்ளார். அவர் கூறுகையில், "முதல்வர் பாலியல் கல்வியைப் பற்றிதான் பேசினார். மக்கள் தொகையைக் கட்டுப்படுத்த நடைமுறையில் என்ன செய்யவேண்டும் என்றே அவர் கூறினார். அது தவறாக எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது" என்றார்.
எனினும் பா.ஜ.க. உறுப்பினர்கள் நிதிஷ்குமார் மன்னிப்புக் கேட்டால் போதாது அவர் முதல்வர் பதவியை ராஜிநாமா செய்ய வேண்டும் என்று கோஷங்கள் போட்டனர்.