நடிகை ரோஜா, தென்னிந்திய மொழிகளில் குறுகிய காலத்தில் மிகப் பிரபலமாகி 100 படங்களில் கதாநாயகியாக நடித்தவர் என்ற பெருமையைப் பெற்றவர்.
ரோஜாவை தமிழ் சினிமாவில் 1992ல் வெளியான ‘செம்பருத்தி‘ திரைப்படம் மூலம் அறிமுகப்படுத்தியவர் ஆர்.கே.செல்வமணி.
ரோஜா ரஜினி, சிரஞ்சீவி, உள்பட தென்னிந்திய முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து நடித்து அதன் மூலம் ஏராளமான ரசிகர்களை ஏற்படுத்திக் கொண்டவர்.
ரோஜா ஆந்திராவை பூர்வீகமாகக் கொண்டவர். 2002 ஆம் ஆண்டு தன்னை அறிமுகப்படுத்திய இயக்குநர் ஆர்.கே. செல்வமணியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகளும் மகனும் உள்ளனர்,
அரசியலில் ஆர்வம் கொண்ட ரோஜா 1999-ல் தெலுங்கு தேச கட்சியில் இணைந்தார். 2009-ல் அக்கட்சியை விட்டு விலகி ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். அப்போது சட்டமன்ற தேர்தலில் நகரி தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டது. போட்டியில் வெற்றி பெற்றார்.
பிறகு மீண்டும் 2019ல் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டது. இம்முறையும் வெற்றி பெற்றார். இப்போது ஆந்திராவின் சுற்றுலாத் துறை அமைச்சராக உள்ளார்.
இந்நிலையில் சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில் இவரையும், இவரது குடும்பத்தைப் பற்றியும் சமூக வலைத்தளங்களில் ஒருசிலர் அவதூறு பரப்புவது மிகுந்த வேதனை அளிக்கிறது என்று தெரிவித்துள்ளார்.
நான் சினிமாவிலும் அரசியலிலும் எப்பேர்பட்ட போராட்டங்களையும் பிரச்னைகளையும் சந்தித்து, சமாளித்து வந்திருக்கிறேன். ஆனால் இப்போது சமூக வலைத்தளங்களில் என்னைப் பற்றியும் என் குடும்பத்தை பற்றியும் பல அவதூறு செய்திகள் பரப்பி வருவதை என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. என் சகோதரர் முத்தமிட்டதை கூட ஆபாசமாக்கி பரப்பி வருகின்றனர், என் மகளின் போட்டோவை மார்பிங் செய்து ஆபாசமாக சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளனர். இது எனக்கும் எனது மகளுக்கும் மிகுந்த வேதனை அளிக்கிறது. அவளுக்கு என்ன பதில் சொல்வது என்று எனக்கு தெரியவில்லை.
“அரசியலிலும், சினிமாவிலும் பிரபலமாக இருப்பவர்களுக்கு இது போன்ற விஷயங்கள் எல்லாம் சகஜம்தான், இவற்றை பெரிதுபடுத்தி அதில் கவனம் செலுத்தினால், நம்மால் வாழ்க்கையில் முன்னேற முடியாது, என என் குழந்தைகளுக்கு நானே சமாதானம் சொல்லி வருகிறேன்" என்றார் நடிகை ரோஜா.