நான் இந்தியாவுக்கு எதிராக எதுவும் பேசவில்லை: ராகுல் காந்தி எம்.பி.!

நான் இந்தியாவுக்கு எதிராக எதுவும் பேசவில்லை: ராகுல் காந்தி எம்.பி.!

ராகுல்காந்தி விவகாரத்தால் நாடாளுமன்றத்தில் ஆளும் பாஜகவினருக்கும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினருக்கும் மோதல் நீடித்து வருகிறது. நாடாளுமன்றம் செயல்படாமல் முடங்கிப் போயுள்ளது.

அதானி முறைகேடு விவகாரம் தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் மற்றும் இதர எதிர்க்கட்சியினர் வலியுறுத்தி வருகின்றனர். நாடாளுமன்றத்தையும், இந்திய ஜனநாயகத்தையும் வெளிநாட்டு மண்ணில் இழிவுபடுத்தி பேசிய ராகுல்காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பா.ஜ.க. கோரி வருகிறது.

ராகுல் எந்த மொழியில் பேசினாரோ அதே மொழியில்தான் இந்தியாவுக்கு எதிரானவர்கள் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பேசி வருகின்றனர் என்று மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு கூறினார். காங்கிரஸ் எம்.பி.யான ராகுல்காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற பா.ஜ.க.வினரின் கோரிக்கையை தாம் மீண்டும் வலியுறுத்துவதாக அவர் கூறினார்.

சமீபத்தில் லண்டன் சென்றிருந்த ராகுல்காந்தி, பிரிட்டிஷ் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் நடந்த உரையாடலின்போது இந்தியாவில் ஜனநாயகத்தின் மீதான தாக்குதல் நடந்து வருகிறது. எதிர்க்கட்சிகளின் குரல் ஒடுக்கப்படுகிறது. நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியினர் பேச அனுமதிக்கப்படுவதில்லை. பேச முற்பட்டாலும் மைக்குள் அணைக்கப்படுகின்றன என்று சரமாரியாக குற்றஞ்சாட்டியிருந்தார்.

ராகுல் பேச்சுக்கு பிரதமர் கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். ராகுல் காந்தியின் பெயரைக் குறிப்பிடாமல், சிலர் வெளிநாட்டில் இந்தியாவின் ஜனநாயகம் பற்றி கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்திய ஜனநாயகத்தை யாராலும் பலவீனப்படுத்த முடியாது. ஆனாலும் சிலர் இந்திய ஜனநாயகத்தை இழிவுபடுத்த முயற்சித்து வருகின்றனர் என்று பதில் கூறியிருந்தார்.

ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பா.ஜ.க.வினர் தொடர்ந்து கோரிக்கை எழுப்பி வந்தாலும் காங்கிரஸ் அதற்கு வளைந்துகொடுக்கத் தயாராக இல்லை. ராகுல் காந்தி ஒருபோதும் மன்னிப்பு கேட்க மாட்டார். அதானி விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை தேவை என்று எதிர்க்கட்சியினரான நாங்கள் வலியுறுத்தி வருகிறோம். ஆனால், இதை திசைத்திருப்பும் வகையில் ஒரு சதித்திட்டத்துடன் ஆளுங்கட்சியினர் நாடாளுமன்றத்தை செயல்படவிடாமல் முடக்கி வருகின்றனர். விலைவாசி உயர்வு, வேலையின்மை உள்ளிட்ட எந்த பிரச்னை குறித்தும் விவாதிக்க அவர்கள் தயாராக இல்லை. மோடி பலமுறை வெளிநாடுகளில் இந்தியத் தலைவர்களை விமர்சித்து பேசியிருக்கிறார்.

ஆனால், அவர் ஒருமுறைகூட மன்னிப்பு கேட்கவில்லை. எனவே ராகுல் மன்னிப்பு கேட்கும் பேச்சுக்கே இடமில்லை என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறினார்.

இதனிடையே காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி வியாழக்கிழமை பிற்பகலில் நாடாளுமன்றத்துக்கு வந்தார். இந்திய ஜனநாயகம் குறித்து லண்டனில் கேள்வி எழுப்பிய நீங்கள், ஜனநாயகத்தை இழிவுபடுத்தி விட்டதாக்க் கூறி மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று ஆளும் பா.ஜ.க.வின் கோரிவருகின்றரே அதுபற்றி உங்கள் கருத்து என்ன என்று கேட்டபோது, “நான் இந்தியாவுக்கு எதிராக எதுவும் பேசவில்லை. நாடாளுமன்றத்தில் என்னை பேச அனுமதித்தால் பேசுவதற்கு தயாராக இருக்கிறேன்” என்று புன்னகையுடன் கூறிவிட்டு நாடாளுமன்றத்தினுள் சென்றுவிட்டார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com