தொழில் முனைவோர் மற்றும் பெரு நிறுவன தலைமை நிர்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று சென்னை ஆளுநர் மாளிகையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, அவர்களுக்குப் பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி. அப்போது பேசிய அவர், “தோல்வியைக் கண்டு யாரும் பயப்படாதீர்கள். அதிலிருந்து பாடத்தைக் கற்றுக்கொள்ளுங்கள். என் வாழ்வில் நான் ஒருமுறை, இருமுறையல்ல; பலமுறை தோல்வியைச் சந்தித்து இருக்கிறேன்.
உலக அரங்கில் இந்தியாவின் பொருளாதாரம் வெகு வேகமாக முன்னேறிக்கொண்டே வருகிறது. அதிக தொழில் முனைவோர்களைக் கொண்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா மூன்றாவது இடத்தில் இருக்கிறது. தொழில் முனைவோர்கள் ஒவ்வொருவரும் இந்த நாட்டின் மிகப்பெரிய சொத்து ஆகும். நாம் கல்வி, மருத்துவம் மற்றும் வேலைவாய்ப்பு ஆகியவற்றில் பெரிய வளர்ச்சியைப் பெற்று இருந்தாலும், வறுமை, இறப்பு விகிதம் மற்றும் வேலை வாய்ப்பின்மை நமக்கு பெரும் சவாலாகவே இருந்து வருகிறது.
மக்கள் தொகை 130 கோடியாக இருக்கும் ஒரு நாட்டில், அரசின் மூலம் மட்டுமே எல்லாவற்றையும் சாதிக்க முடியும் என்று எதிர்பார்க்க முடியாது. ஒரு நாடு வளர்ச்சி அடைய வேண்டும் என்றால், அந்த நாட்டின் ஒவ்வொரு மனிதரும் வளர்ச்சியை நோக்கி நகர்ந்துகொண்டே இருக்க வேண்டும். இதற்கு முன்பு கடந்த ஆட்சிக் காலத்தில் இருந்தவர்கள் நம்மை பின்னோக்கி அழைத்துச் சென்று விட்டனர். அதனால், ‘யாதும் ஊரே; யாவரும் கேளிர்’ என்ற எண்ணத்தை மனதில் நிறுத்தி இனி பயணம் செய்வோம்.
‘ஆளுநர் என்றால் அவருக்கு அதிகமாக வேலைகள் இருக்கும்’ என்று மக்கள் அனைவரின் முன்பும் ஒரு மாயை காணப்படுகிறது. ஆனால், என்னைப் பொறுத்தவரை எனக்கு அதிக வேலைகள் இல்லை. அதோடு, நாட்டின் வளர்ச்சியைத் தடுப்பவர்களை மட்டுமே நான் எனது எதிரியாகக் கருதுகிறேன்” என்று தொழில் முனைவோர் மற்றும் பெரு நிறுவன தலைமை நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பேசி உள்ளார்.