நானே களத்தில் இறங்கி அவர்களுக்கு எதிராகப் பிரச்சாரம் செய்வேன்.

நானே களத்தில் இறங்கி அவர்களுக்கு எதிராகப் பிரச்சாரம் செய்வேன்.
Published on

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட உடன் அதிமுக இரு அணிகளும் தேர்தல் களத்தில் பரபரப்பாக ஆட்டத்தை தொடங்கின. ஓபிஎஸ் - ஒருங்கிணைப்பாளர் அதிகாரத்தையும், இபிஎஸ் - இடைக்கால பொதுச்செயலாளர் அதிகாரத்தையும் காட்ட இருவரும் வியூகம் அமைத்து தேர்தல் பணிகளை கவனித்து வந்தனர்.

இந்நிலையில் யாரும் எதிர்பாக்காத நிலையில் ஓபிஎஸ் தம் அணி வேட்பாளர் செந்தில் முருகனை வாபஸ் பெற்று இபிஎஸ் அணிக்கு கொஞ்சம் விட்டுக்கொடுத்துள்ளார். அதற்குக் காரணம், தங்கள் அணியால் இரட்டை இலை சின்னத்துக்கு எந்தவித பாதிப்பும் வந்துவிடக்கூடாது என்பதில் நாங்கள் மிகத் தெளிவாக இருக்கிறோம் என்று ஓபிஎஸ் அணியின் செய்தி தொடர்பாளர் புகழேந்தி செய்தியாளரிடம் தெரிவித்துள்ளார்.

அவரது பேட்டியிலிருந்து........

ஓபிஎஸ் தரப்பு தங்கள் வேட்பாளரை வாபஸ் பெற உண்மையில் என்ன காரணம்?

எங்கள் அணி வேட்பாளராக செந்தில் முருகனை நிறுத்தினோம். வேட்பாளரை வாபஸ் பெறமாட்டோம் என்றும் சொன்னோம். ஆனால் உச்ச நீதிமன்ற தீர்ப்பு இப்படி வரும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. எந்த பொதுக்குழுவை எதிர்த்தோமோ, யாரை அவைத் தலைவராக ஏற்க மாட்டோம் என்று சொல்லி வந்தோமோ அவரிடமே பொறுப்பைக் கொடுத்து, அவரையே வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று சொன்னால் எப்படி? தேர்தலை நடுநிலையாக நடத்த வேண்டியவர், யாரெல்லாம் வேட்பு மனு தாக்கல் செய்திருக்கிறார்கள் என்று பார்த்து, அவர்களின் பெயரையும் பொதுக்குழுவிடம் அறிவித்து வாக்கெடுப்பை நடத்தியிருக்க வேண்டும். உச்ச நீதிமன்றம் சொன்ன எதையும் மதிக்காமல் செயல்பட்டிருக்கிறார் அவைத்தலைவர்.

நடுநிலைமையோடு செயல்பட வேண்டிய தமிழ் மகன் உசேன், தேர்தல் ஆணையத்துக்கு செல்லும்போது எங்கள் அணிக்கு அரசியல் எதிரியாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் சி.வி.சண்முகத்தை டெல்லிக்கு கூடவே அழைத்துக்கொண்டு செல்கிறார். இது என்ன நியாயம்.

உச்ச நீதிமன்ற தீர்ப்பை மதிக்காமல் அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன் இப்படி நடந்து கொள்கிறார். இதை எதிர்த்து நாங்கள் உச்ச நீதிமன்றம் சென்றாலும், வேட்பு மனு தாக்கல் செய்யவேண்டிய நேரம் நெருங்கிவிட்டதால், அதற்கு மேல் எதுவும் செய்ய முடியாது. இப்போது நாங்கள் போராடி, இரட்டை இலை சின்னம் முடங்கிவிட்டால் எங்களுக்குத்தான் அந்த அவப்பெயர் வந்து சேரும்.

இது இடையீட்டு மனுவில் வந்த இடைக்கால உத்தரவுதான். முக்கிய வழக்கில் விரைவில் தீர்ப்பு விரைவில் வரப்போகிறது. எதற்காக இந்த தேர்தலில் மல்லுக்கட்டி, இரட்டை இலை சின்னத்தை சின்னாபின்னப்படுத்திய பழிக்கு ஆளாக வேண்டும் என்று எண்ணத்தில்தான் வேட்பாளரை வாபஸ் பெறும் முடிவை எடுத்தார் ஓ.பன்னீர்செல்வம்.

 ஓ.பன்னீர்செல்வம், அதிமுகவில் தனக்கு இருந்த கடைசி உரிமையையும் இழந்துவிட்டாரா?

பதில் : அப்படி சொல்லமுடியாது. உச்ச நீதிமன்ற இறுதித் தீர்ப்பும் தான் எதிர்காலத்தில் அதிமுகவை யார் வழிநடத்தப் போகிறார்கள், யாருக்கு அதிகாரம் என்றெல்லாம் வழிகாட்டப் போகிறது.

இவ்வளவு போராட்டங்களுக்கு மத்தியில் இபிஎஸ். அணி வேட்பாளர் கே.எஸ். தென்னரசு வெற்றி பெறுகிறாரா என்பதை அந்த உச்ச நீதிமன்றமும் கவனிக்கத்தான் போகிறது. விட்டுக் கொடுத்திருக்கிறோம், கெட்டுப்போக மாட்டோம். ஆனால், திரும்பத் திரும்ப தொல்லை கொடுத்துக் கொண்டிருந்தால், அடுத்து வரப்போகும் தீர்ப்பு கூட அவர்களுக்கு குந்தகமாக அமைந்துவிடும்.

 இபிஎஸ் அணியைச் சேர்ந்த செம்மலை, ஆதரவு கொடுக்கிறோம் என்ற பெயரில் சிலர் குழப்பத்தை ஏற்படுத்த பார்க்கிறார்கள், ஈரோடு கிழக்கு தொகுதிக்குள் ஓபிஎஸ் வரவேண்டும் என்றால் எடப்பாடி பழனிசாமிதான் முடிவு செய்ய வேண்டும் என்கிறாரே?

அதிமுக தொண்டர்கள் சுயமரியாதை மிக்கவர்கள். தன்மான உணர்வு கொண்டவர்கள். இனி அதுபோன்ற வார்த்தைகளை அவர்கள் பயன்படுத்தினால், நான் யாரிடமும் கேட்க வேண்டிய அவசியமில்லை. நானே களத்தில் இறங்கி அவர்களுக்கு எதிராகப் பிரச்சாரம் செய்வேன்.

நாங்கள் விட்டுக்கொடுத்ததை ஏற்றுக்கொண்டு ஓபிஎஸ்ஸை சந்தித்து நன்றி தெரிவித்து, பிரச்சாரம் செய்ய அழைத்திருந்தால் அது அரசியல் நாகரிகம். அதற்கு மாறாக எங்களுக்கு சவால் விட்டால் அப்புறம் புகழேந்தி களத்தில் இறங்க வேண்டியிருக்கும். பிறகு வேறு மாதிரி சென்று முடிந்துவிடும். என்னை யாரும் தடுக்கவே முடியாது. யார் சொன்னாலும் ஓபிஎஸ்ஸே சொன்னாலும் என்னை தடுத்து நிறுத்த முடியாது. நம்பிக்கை துரோகிகளை பிரச்சாரக் களத்தில் விளாசுவேன். பிறகு தேர்தல் முடிவு ரொம்பக் கேவலமாகப் போய்விடும்.

இவ்வாறு புகழேந்தி பேசினார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com