‘பிரதமர் மோடி சொன்ன வார்த்தைகளை நம்பி வங்கிக் கணக்கு தொடங்கியவர்களில் நானும் ஒருவன். பின்னர்தான் நான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து கொண்டேன்’ என்று ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவரும் பிகார் முன்னாள் முதல்வருமான லாலு பிரசாத் யாதவ் தெரிவித்துள்ளார்.
மும்பையில், ‘இந்தியா’ எதிர்க்கட்சி கூட்டணி சார்பில் நடைபெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பில் லாலு பிரசாத் யாதவ்வும் கலந்து கொண்டு தனக்கே உரித்தான பாணியில் நகைச்சுவையுடன் பேசினார்.
இஸ்ரோ சூரியனை ஆய்வு செய்வதற்காக விண்கலத்தை அனுப்ப உள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடியை விரைவில் சூரிய லோகத்துக்கு அனுப்புமாறு இஸ்ரோ விஞ்ஞானிகளை லாலு நகைச்சுவையாகக் கேட்டுக் கொண்டார். அவரது பேச்சில் நகைச்சுவை உணர்வு இருந்தாலும், சில அடிப்படை தகவல்களும் இருந்தது குறிப்பிடத்தக்கது. அரசியல் கட்சிகள் விரும்பியது கிடைக்காவிட்டாலும், ‘இந்தியா’ எதிர்க்கட்சி கூட்டணியில் தொகுதிப் பங்கீடு சுமூகமாக நடைபெறும் என்றும் அவர் உறுதிபட தெரிவித்தார்.
நாங்கள் இந்த முறை ஒற்றுமையுடன் போராடுவதில் உறுதியாக இருக்கிறோம். தொகுதிப் பங்கீட்டில் எந்த சச்சரவும் இருக்காது. எங்கள் எல்லோருடை ஒரே நோக்கமும் பிரதமர் மோடியை ஆட்சியிலிருந்து அகற்றி, நாட்டைக் காப்பாற்றுவதுதான் என்றும் அவர் குறிப்பிட்டார்.
லாலு, உட்கார்ந்திருந்த இடத்திலிருந்தே பேசுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டபோதும், அவர் தனது உடல்நிலையையும் பொருட்படுத்தாது நடந்து மேடைக்கு வந்து பேசினார். ‘‘நாங்கள் எல்லோரும் இதுவரை மோடியை தனித்தனியாகத்தான் எதிர்த்து வந்தோம். அது அவருக்கு செளகரியமாக இருந்தது. இப்போது எதிர்க்கட்சிகள் எல்லாம் ஒன்று சேர்ந்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. எங்களது ஒரே கோஷம் பாஜகவை ஆட்சியிலிருந்து அகற்றி நாட்டைக் காப்பாற்றுவதுதான். வதந்திகளைப் பரப்பியும், பொய்களைச் சொல்லியுமே பாஜக ஆட்சிக்கு வந்தது. லாலு உள்பட, பல தலைவர்களின் பணம் ஸ்விஸ் வங்கியில் உள்ளது. அந்தக் கறுப்பு பணத்தை நாங்கள் மீட்டு அனைவரது கணக்கிலும் தலா 15 லட்சம் ரூபாய் டெபாசிட் செய்வோம் என்று கூறினார்கள். இதை நம்பி நானும் வங்கிக் கணக்கை தொடங்கினேன். ஆனால், ஏமாந்ததுதான் மிச்சம்.
எனது குடும்பத்தில் 11 பேர் உள்ளனர். அனைவர் பெயரிலும் வங்கிக் கணக்கு தொடங்கினால் நிறைய பணம் கிடைக்கும் என்று நம்பினேன். ஆனால், எதுவும் நடக்கவில்லை. இது அவர்கள் பணம் போலும். சாதனை மேல் சாதனை புரிந்து வரும் இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு எனது பாராட்டுக்கள். விரைவில் மோடிஜியை சூரிய லோகத்துக்கு அனுப்புங்கள். அங்கு சென்றால் அவரது புகழ் உலகமெங்கும் பரவும்” என்று நகைச்சுவையாகக் குறிப்பிட்டார் லாலு.