அந்த டாக்டரோட கிட்னிதான் வேணும்! பெண்ணுக்கு நடந்த கொடூரம்!

அந்த டாக்டரோட கிட்னிதான் வேணும்! பெண்ணுக்கு நடந்த கொடூரம்!

வயிற்றுவலி காரணமாக மருத்துவமனைக்குச் சென்ற பெண்ணின் இரு கிட்னியும் திருடப்பட்ட சம்பவம் தற்போது நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நாம் இந்த உலகில் நோய் நொடியின்றி நெடுநாள் உயிர் வாழ வேண்டுமென்றால் அதற்கு உறுதுணையாக இருப்பது நம் உடலின் விலைமதிப்பில்லாத உடல் உறுப்புகள்தான். ஒவ்வொரு உறுப்பும் ஒவ்வொரு விதமான வேலைகளைச் செய்வதாலேயே நாமும் பிரச்சினைகள் இல்லாமல் அன்றாட வாழ்க்கையை வாழ்ந்து வருகிறோம். இந்த உறுப்புகளில் ஏதேனும் ஒன்று குறையும்போதுகூட நாம் ஒவ்வொரு நாளையும் கடந்துசெல்ல மிகவும் சிரமப்பட வேண்டிவரும்.

அப்படிப்பட்ட சூழ்நிலையில், பீகார் மாநிலம் முசாபர்பூர் நகரைச் சேர்ந்த 38 வயதான சுனிதா தேவியின் இரு கிட்னியும் திருடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சுனிதா தேவிக்கு கடந்த சில நாட்களாக வயிற்றுவலி இருந்து வந்துள்ளது. இதனால் அருகே இருக்கும் தனியார் மருத்துவமனைக்கு சென்று காண்பித்துள்ளார். சோதித்துப் பார்த்த டாக்டர், அவருக்கு கருப்பை தொற்று இருப்பதாக கூறி, அதற்கான சிகிச்சை எடுக்க வேண்டும் எனவும் கூறி உள்ளார்.

மூன்று குழந்தைகளுக்கு தாயான சுனிதா தேவி தினக்கூலியாக வேலை செய்து வருகிறார். அவரும் வேறு வழியில்லாமல் டாக்டர் கூறியதன் பேரில், கடந்த செப்டம்பர் மாதம் அறுவை சிகிச்சை மேற்கொண்டார். இருப்பினும் இவரது உடல்நிலை மேலும் மோசமாக காணப்பட்டதால், முசாபர்பூரில் உள்ள அரசின் SKMC மருத்துவமனையை அணுகியுள்ளார். அங்கு இவருக்கு ஸ்கேன் செய்து பார்த்தபோது இரண்டு கிட்னிகளும் திருடப்பட்டிருப்பதை அறிந்து அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இரண்டு கிட்னியும் இல்லாத பட்சத்தில் சுனிதா உயிர் வாழ்வது சிரமமான காரியம் என்று மருத்துவர்கள் கூறியதால் குடும்பத்தினர் அனைவரும் அதிர்ச்சியில் உறைந்துபோயினர்.

இது தொடர்பாக SKMC மருத்துவமனையின் மருத்துவர் பேசுகையில், சிகிச்சைக்காக பாட்னாவில் உள்ள இந்திராகாந்தி இன்ஸ்ட்டியூட் ஆஃப் மெடிக்கல் சயின்ஸ் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த பிறகு, மீண்டும் அவர் இங்கே அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். தினமும் அவருக்கு சிகிச்சை வழங்கி வருகிறோம். ஒரு நாள் டயாலிசிஸ் கொடுக்கத் தவறினாலும் சுனிதா உயிர் வாழ்வது கஷ்டம் என்று கூறியிருக்கிறார்.

இந்நிலையில் சுனிதா தேவியின் குடும்பத்தினர் போலீசிஸ் புகார் கொடுத்ததையடுத்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்க முற்பட்டனர். இதையறிந்து, கிட்னி திருட்டில் ஈடுபட்ட சுபகந்த் க்ளினிக் உரிமையாளர் பவன் குமார் மற்றும் அறுவை சிகிச்சை செய்த டாக்டர் ஆர்.கே.சிங் இருவரும் தலைமறைவாகினர். விசாரணையில் ஆர்.கே.சிங்கின் மருத்துவ சான்றிதழ் போலியானது என்ற விவரமும் தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அவர்களைத் தேடி வருகின்றனர். இந்த விஷயம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை கிளப்பியது.

சுனிதா உயிர் வாழ வேண்டுமானால் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்தாக வேண்டும் என்று டாக்டர்கள் கூறியுள்ள நிலையில், கிட்னி தானம் கேட்டு இந்திரா காந்தி மருத்துவமனையில் பதிவு செய்திருக்கிறார்கள்.

இரு கிட்னிகளையும் இழந்து பரிதவித்துக்கொண்டிருக்கும் சுனிதா தேவி, இப்படிப்பட்ட கொடூரத்தை செய்த அந்த டாக்டரை உடனடியாக காவல்துறை கைது செய்ய வேண்டும் என்று கூறியதோடு, அந்த டாக்டரின் கிட்னியையே தனக்கு பொருத்த வேண்டும் எனவும் வலியுறுத்தி உள்ளார்.

இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், மாநில சுகாதராத்துறை இதற்கு விளக்கம் கொடுக்க வேண்டும் என மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் விடுத்துள்ளது. அதைத் தொடர்ந்து, கிட்னியைத் திருடிய அங்கீகாரமில்லாத அந்த க்ளினிக்கை நடத்தி வந்த உரிமையாளரை போலீசார் நேற்று கைது செய்துள்ளனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com