புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவை மக்களுடன் சேர்ந்து கொண்டாட விரும்புகிறேன்: கமல்ஹாசன்

புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவை மக்களுடன் சேர்ந்து கொண்டாட விரும்புகிறேன்: கமல்ஹாசன்
Published on

புதிய நாடாளுமன்ற கட்டடத் திறப்பு விழா நாளை (மே 28) கொண்டாடப்பட உள்ள நிலையில், நாட்டிற்கு பெருமைச் சேர்க்கும் இவ்விழாவை மக்களுடன் சேர்ந்து கொண்டாட விரும்புவதாக மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவை முழு நாடும் கொண்டாடவேண்டிய தருணமாகும். இதை நானும் மிகப் பெருமையான தருணமாக கருதுகிறேன். இந்த வரலாற்று சாதனைக்காக இந்திய அரசை வாழ்த்துகிறேன். தேசத்தின் நலன் கருதி புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவை உங்களுடன் (மக்களுடன்) சேர்ந்து கொண்டாடுகிறேன். அதேநேரம், நாட்டின் குடியரசு தலைவர், எதிர்கட்சிகளும் இந்த விழாவில் கலந்துக்கொள்ளும் வகையில் திட்டமிடாத மத்திய அரசுடன் கருத்துவேறுபடுகிறேன்.

நாட்டிற்கு பெருமைச் சேர்க்கும் இத்தருணம் அரசியல் ரீதியாக பிளவுப்பட்டிருக்கிறது. பிரதமரிடம் ஒரு எளிய கேள்வியைக் கேட்க விரும்புகிறேன். நமது நாட்டின் புதிய நாடாளுமன்றத்தின் திறப்பு விழாவில் நம் நாட்டின் முதல் குடிமகளும், குடியரசு தலைவருமான திரௌபதி முர்மு ஏன் கலந்துகொள்ளக்கூடாது என்பதை தயவு செய்து நாட்டு மக்களிடம் சொல்லுங்கள். இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வில் இந்திய குடியரசுத் தலைவர் ஏன் பங்கேற்க கூடாது என்பதற்கான காரணம் இதுவரை மத்திய அரசு தெளிவுப்படுத்தவில்லை.

நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் மசோதாக்கள் அனைத்துக்கும் குடியரசுத் தலைவர்தான் ஒப்புதல் அளிக்கவேண்டும். மேலும், நாடாளுமன்றத்தின் அமர்வுகளை கூட்டவோ அல்லது ஒத்திவைக்கவோ நாட்டின் முதல் குடிமகளான திரௌபதி முர்முவுக்குதான் அதிகாரம் உள்ளது. இந்நிலையில், குடியரசுத் தலைவர் நாடாளுமன்றத்தின் செயல்பாட்டிற்கு தவிர்க்கமுடியாதவர். எனவே சமரசம் செய்து குடியரசு தலைவரை புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவுக்கு அழைக்குமாறு பிரதமர் மோடியிடம் கேட்டுக்கொள்கிறேன்.

நாடாளுமன்றம் இந்திய ஜனநாயகத்தின் இலக்கணமாக உள்ளது. எனவே இந்த தருணத்தில் வரலாற்றில் பெரும் பிழையாக பதியப்படும் இந்த குறையை திருத்திக்கொள்ளுமாறு பிரதமரை நான் கேட்டுக்கொள்கிறேன். மக்கள் குடியரசின் புதிய வீட்டில் அதன் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் வசிக்கவேண்டும். கூட்டு ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்டவன் நான், அதனால் புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவை புறக்கணிக்கும் அனைத்து எதிர்க்கட்சிகளைளும் அந்த முடிவை மறுபரிசீலனை செய்யவேண்டும் என வலியுறுத்துகிறேன். இந்த விவகாரத்தில் கருத்துவேறுபாடு இருந்தால் அதனை பொது மன்றங்களிலும், நாடாளுமன்றத்திலும் கேள்வி எழுப்பலாம். நாம் பிரிந்திருப்பதைவிட ஒன்றிணைந்து இருப்பதுதான் தற்போது அவசியம். புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவை தேசிய ஒருமைப்பாட்டின் சந்தர்ப்பமாக மாற்றுவோம். நமது அரசியல் கருத்துவேறுபாடுகளை ஒருநாள் தள்ளிவைப்போம் என அவர் கூறியுள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com