ஜோஷிமத் நகர கொள்கைத் திட்டம் வகுப்பவர்களால் உத்தரகண்ட், இமயமலை ஆகிய பகுதிகள் ஒரு நாள் இல்லாமல் போய்விடுமோ என்று அஞ்சுவதாக முன்னாள் மத்திய அமைச்சரும், மத்திய பிரதேசத்தின் முன்னாள் முதல்வருமான உமா பாரதி தெரிவித்துள்ளார்.
பா.ஜ.க.வைச் சேர்ந்தவரான உமா பாரதி, நிலவெடிப்பு, நிலச்சரிவு காரணமாக மண்ணில் புதைந்து வரும் ஜோஷிமத் நகருக்கு சென்று பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், தில்லியில் உள்ள கொள்கை வகுப்பாளர்கள் இதுபோன்ற திட்டங்களுக்கு புதிய பெயர்களை சூட்டியுள்ளனர். இவர்கள் உத்தரகண்டை ஒருநாள் இல்லாமல் செய்து விடுவார்களோ என்று எனக்கு அச்சமாக இருக்கிறது.
நான் கடந்த 2017 ஆம் ஆண்டே என்.டி.பி.சி. திட்டத்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தேன். இந்த திட்டத்தால் மீளமுடியாத இழப்பு ஏற்படும் என்றும் தெரிவித்திருந்தேன். அப்போது அதற்கு மத்திய அரசின் ஆதரவு கிடைக்கவில்லை. அப்போது ரெனிகான் சம்பவம் நிகழ்ந்தது. ஜோஷிமத்தும் இதே போன்ற சம்பவத்தை சந்திக்கும் என்று நான் தெரிவித்தேன். பின்னர் அது தொடர்பாக பிரதமர் அலுவலகத்திலிருந்து அழுத்தம் தரப்பட்டது. அப்போது ஜோஷிமத் புதையவில்லை.
பின்னர் புதிய நிபுணர்கள் குழு அமைக்கப்பட்டது. அது திட்டங்களுக்கு மீண்டும் அனுமதி அளித்தது. ஜோஷிமத் புதையும் விவகாரத்தில் என்.டி.பி.சி.க்கு பங்கு இருக்குமா என்பது தெரியவில்லை.
வளர்ச்சி, மனித வாழ்க்கை, சுற்றுச்சூழல் ஆகியவை ஒன்றாகயிருக்கும். ஆனால், வளர்ச்சியும் அழிவும் ஒன்றாக இருக்க முடியாது. எனினும் மோடியின் ஆட்சியில் உத்தரகண்ட் எதிர்கொண்டுள்ள சவால்கள் அனைத்தும் கடந்துபோகும் என்று தெரிவித்துள்ளார்.
எனினும் இந்த பிரச்னைக்கு என்.டி.பி.சியின் விஷ்ணுகாட் நீர்மின்திட்டமே காரணம் என்று சொல்லப்படுகிறது. ஆனால், ஜோஷிமத் நகரம் புதையுண்டதற்கு நாங்கள் காரணமல்ல என்று என்.டி.பி.சி. தெரிவித்துள்ளது. எந்த சுரங்கப்பாதையும் ஜோஷிமத் வழியாகச் செல்லவில்லை என்று என்.டி.பி.சி. தெளிவு படுத்தியுள்ளது.
அதிக அளவிலான சுற்றுலாப் பயணிகள் வருகை, பருவலைநிலை மாற்றம், மலைப்பகுதிகளில் தொடர்ச்சியான கட்டுமானப் பணிகள் நடைபெறுவதே நிலச்சரிவுக்கு காரணம் என்று உள்ளூர் மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.