‘உயிரையும் கொடுப்பேன்; நாட்டை பிளவுபடுத்த அனுமதிக்க மாட்டேன்’ மம்தா பானர்ஜி உருக்கம்!

‘உயிரையும் கொடுப்பேன்; நாட்டை பிளவுபடுத்த அனுமதிக்க மாட்டேன்’ மம்தா பானர்ஜி உருக்கம்!
Published on

ம்ஜான் பண்டிகையை முன்னிட்டு இன்று கொல்கத்தாவில் நடைபெற்ற சிறப்புத் தொழுகைக் கூட்டத்தில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கலந்து கொண்டார். அந்தக் கூட்டத்தில் அவர் பேசியபோது, "வங்கத்தில் நாம் அமைதியையே விரும்புகிறோம்; கலவரங்கள் தேவையில்லை. சிலர் வெறுப்பு அரசியலை நடத்துவதன் மூலம் நாட்டைப் பிளவுபடுத்த விரும்புகிறார்கள். ஆனால், ஒருபோதும் நாட்டைப் பிளவுபடுத்த நான் அனுமதிக்க மாட்டேன். அதற்காக எனது உயிரையும் கொடுக்கத் தயாராக இருக்கிறேன். பண பலம் மற்றும் மத்தியப் புலனாய்வு அமைப்புகளுக்கு எதிராக நான் போராடத் தயாராக இருக்கிறேன். ஆனால், ஒருபோதும் அவர்களுக்கு அடிபணிய மாட்டேன்.

பாஜகவிடம் பணம் பெற்றுக்கொண்டு மேற்கு வங்கத்தில் யாரே ஒருவர் முஸ்லிம் ஓட்டுகளைப் பிரிப்பதாகக் கூறுகிறார்கள். நான் அவருக்குச் சொல்லுகிறேன், பாஜகவுக்காக யாராலும் முஸ்லிம் வாக்குகளை பிரிக்க முடியாது. இன்னும் ஒரு வருடத்தில் யார் ஆட்சிக்கு வரவேண்டும் என்று தீர்மானிப்பதற்கான தேர்தல் நடைபெற உள்ளது. நாம் அனைவரும் ஒன்றிணைந்து நாட்டைப் பிரிக்கும் சக்திகளுக்கு எதிராகப் போராட வேண்டும் என்று உறுதி எடுத்துக்கொள்வோம். வரும் தேர்தலில் அந்தப் பிரிவினை சக்திக்கு எதிராக வாக்களிப்பதில் நாம் உறுதியாக இருக்க வேண்டும். ஜனநாயகத்தைக் காப்பாற்றத் தவறினால் நாம் உறுதியாக அனைத்தையும் இழந்துவிடுவோம்" என்று அவர் பேசி இருக்கிறார்.

இந்தக் கூட்டத்தில் யாரையும் குறிப்பிடாமல் பேசிய மம்தா பானர்ஜி, தனது பேச்சின் மத்தியில் பாஜக மற்றும் அசாசுதீன் ஓவைசியின் கட்சியைக் கடுமையாகச் சாடினார். பாஜகவிடம் பணம் பெற்றுக்கொண்டு அசாசுதீன் ஓவைசி கட்சி முஸ்லிம் வாக்குகளைப் பிரிப்பதாகவும் அவர் குற்றம் சாட்டினார். நாட்டின் அமைதிக்காக உயிரையும் கொடுப்பேன் என்று உருக்கமாகப் பேசிய மம்தாவின் பேச்சு அவரது ஆதரவாளர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com