அநீதியை எதிர்த்து குரல் கொடுப்பதில் இருந்து பின்வாங்கமாட்டேன்: சச்சின் பைலட் !

அநீதியை எதிர்த்து குரல் கொடுப்பதில் இருந்து பின்வாங்கமாட்டேன்: சச்சின் பைலட் !

அநீதியை எதிர்த்து தொடர்ந்து குரல் கொடுப்பேன். அதிலிருந்து பின்வாங்க மாட்டேன். பதவிக்காக நான் போராடவில்லை. அநீதியை எதிர்த்தே போராடி வருகிறேன் என்று காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலட் கூறினார். எவருடைய புகழையும் கெடுக்கும் நோக்கில் நான் போராடவில்லை (மறைமுகமாக அவர் முதல்வர் அசோக் கெலோட்டை குறிப்பிட்டார்), மக்களுக்காக நீதி கேட்டு போராடுகிறேன் என்றார்.

ராஜஸ்தான் மாநிலம் டோங்க் தொகுதி எம்.எல்.ஏ.வான சச்சின் பைலட், ஞாயிற்றுக்கிழமை டெளஸா தொகுதியில் தமது தந்தையின் நினைவுநாளையொட்டி நடைபெற்ற பேரணி, பொதுக்கூட்டத்தில் பேசினார். அப்போது அவர் கூறுகையில், ஊழல் மற்றும் அநீதிக்கு எதிரான என்னுடைய போராட்டம் தொடரும். பிரதமர்கள், முதல்வர்கள் இன்று வருவார்கள் போவார்கள். ஆனால், அரசியலில் மக்களின் நம்பிக்கையை பெறுவதுதான் முக்கியம். மக்களுக்கு அளித்த உறுதிமொழியிலிருந்து நான் பின்வாங்கமாட்டேன்.

நான் பதவிக்காக போராடவில்லை. மக்களின் நம்பிக்கைதான் முக்கியம் என்று கூறிய அவர், எந்த புதிய அறிவிப்பையும் வெளியிடவில்லை.(அவர் புதிய அரசியல்க ட்சியை அறிவிக்கலாம் என வதந்திகள் உலாவந்தன )

வசுந்தரா ராஜே தலைமையிலான முந்தைய பா.ஜ.க. அரசின் ஊழல்கள் குறித்து விசாரணை நடத்த வேண்டும், ராஜஸ்தான் மாநில பணியாளர் தேர்வாணயத்தை திருத்தி அமைத்து புதிய நியமனங்களை மேற்கொள்ள வேண்டும், தேர்வு ரத்தானதால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்டஈடு வழங்க வேண்டும் என்பதுதான் அவரது மூன்று கோரிக்கைகள். (வசுந்தரா ராஜே மீது கெலோட் நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்கு அவருடன் ரகசிய பேரம் நடத்தியுள்ளதாக பைலட் குற்றஞ்சாட்டுகிறார்.)

கடந்த ஏப்ரல் மாதம் தமது கோரிக்கைகளை வலியுறுத்தி பைலட் ஒருநாள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினார். மேலும் கோரிக்கைகள் மீது முதல்வர் நடவடிக்கை எடுக்காவிட்டால் ஜூன் மாத இறுதியில் தொடர் போராட்டம் நடத்தப்போவதாகவும் அச்சுறுத்தியிருந்தார்.

நான் யாரையும் சிறுமைப்படுத்த விரும்பவில்லை. ஆனால், நிர்வாகத்தில் குளறுபடிகள் இருந்தால் மற்றவர்கள்மீது பழியைப் போடாமல் அதை திருத்திக் கொள்ள முன்வர வேண்டும். அநீதியை எதிர்த்து குரல் கொடுப்பது அரசியலில் முக்கியமானது என்றும் அவர் குறிப்பிட்டார்.

நான் கடந்த காலங்களில் மத்திய அமைச்சராகவும், மாநில அமைச்சராகவும் பதவி வகித்திருக்கிறேன். எனக்கு பதவி முக்கிமல்ல. மக்களின் நம்பிக்கையை பெற வேண்டும் என்பதுதான் முக்கியம்.

எனது தந்தை ராஜேஷ் பைலட், ஏழைகள் மற்றும் விவசாயிகள் நலனுக்காக போராடி வந்தார். இன்று உண்மை பேசும் அரசியல்வாதிகளை காண்பதே அரிதாக இருக்கிறது என்றார் பைலட். (ராஜேஷ் பைலட் டெளஸா தொகுதி எம்.பி.யாக இருந்தவர். 2000 ஆம் ஆண்டு ஜூன் 11 இல் கார் விபத்தில் அவர் உயிரிழந்தார்.).

கடந்த 2018 ஆம் ஆண்டு ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்தது. அதுமுதலே அசோக் கெலோட், பைலட் இருவரிடையே மோதல் தொடங்கிவிட்டது. 2020 ஆம் ஆண்டு ச்ச்சின் பைலட் கெலோட் அரசுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தினார். இதையடுத்து அவர் கட்சியின் மாநிலத் தலைவர் பதவியிலிருந்தும், துணை முதல்வர் பதவியிலிருந்தும் நீக்கப்பட்டார். கடந்த ஆண்டு தலைமையில் மாற்றம் கொண்டுவர காங்கிரஸ் மேலிடம் முயற்சித்தது. ஆனால், அது தோல்வியில் முடிந்தது.

மாநிலத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், கட்சி மேலிடம் கடந்த வாரம் அவர்கள்

இருவரையும் தில்லிக்கு அழைத்தது. கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் ராகுல் காந்தி முன்னிலையில் சமரச பேச்சுவார்த்தை நடந்தது. தேர்தலில் காங்கிரஸ் வெற்றிக்கு கருத்து வேறுபாடுகளை மறந்து இருவரும் ஒன்றுபட்டு உழைக்குமாறும் பிரச்னைகளை அதன் பின் பார்த்துக் கொள்ளலாம் என அறிவுரை கூறியது.

கெலோட், பைலட் இருவரும் மேலிடத் தலைவர்களை சந்தித்து பேசிவிட்டு வந்தாலும் அவர்களுக்குள் புகைச்சல் நீடிக்கிறது என்பதே உண்மை.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com