
இந்தியாவில் நாய்கள் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் , நாய்கடிக்கு ஆளாகும் மக்கள் எண்ணிக்கையும் அதிகமாக உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் பல ஆயிரம் பேர் இந்தியாவில் நாய்க்கடியினால் ரேபிஸ் தொற்று ஏற்பட்டு பலியாகின்றனர். ரேபிஸ் தொற்றினால் ஏற்படும் இறப்புகளை முற்றிலும் களைவதற்காக மத்திய சுகாதார நிறுவனம் இலக்கு வைத்துள்ளது.
சென்னையில் இந்திய மருத்துவ கவுன்சில் ஆராய்ச்சி நிறுவனத்தின், தேசிய தொற்றுநோயியல் நிறுவனம் (ICMR- NIE) நடத்திய ஆய்வின் முடிவில், ரேபிஸ் நோயினால் மனிதர்களுக்கு ஏற்படும் பாதிப்பும், அதனால் ஏற்படும் உயிரிழைப்பை தடுக்கும் வகையில் செயல்பட வேண்டிய அவசியமும் உணர்த்தப்பட்டது. ரேபிஸ் நோயிலிருந்து தற்காத்து கொள்ள முதலில் தேவை, விழிப்புணர்வு மற்றும் சரியாக நேரத்தில் சிகிச்சை எடுத்துக் கொள்வது.
வெளிவந்த ஆய்வின் தரவுகளின் படி ஒவ்வொரு வருடமும் இந்தியாவில் சுமார் 5700 பேர் ரேபிஸ் நோயினால் உயிரிழந்துள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 90 லட்சத்திற்கும் அதிகமான விலங்குகளின் கடித்தல் சம்பவம் நடைபெறுகிறது. இந்த கடித்தல் சம்பவங்களில் மூன்றில் இரண்டு பங்கு நாய்கடியினால் ஏற்படுகிறது. விலங்குகளால் கடிதாக்குதலுக்கு ஆளாகும் நபர்கள் பெரும்பாலும் சரியான நேரத்தில் அதற்கு உரிய சிகிச்சை அளிப்பதில்லை.
விலங்குகளின் கடி சம்பவங்களில் மனிதர்கள் பெரும்பாலும் அதை அலட்சியமாக கருதி சிகிச்சை பெறாமல் விட்டுவிடுகின்றனர். மேலும் சிலர் சிகிச்சை செய்வதை தாமதப் படுத்துகின்றனர். இது போன்ற அலட்சியங்கள் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு ரேபிஸ் பாதிப்பை ஏற்படுத்துகிறது.
ரேபிஸ் நோய் தொற்று முற்றினால் உயிர் பலியினை ஏற்படுத்தும். பெரும்பாலும் இந்த உயிர்பலிகள் கிராமப்புற பகுதிகளில் நடைபெறுகிறது. கிராமப்புற மக்கள் சரியான விழிப்புணர்ச்சி இல்லாத காரணத்தினாலும், சரியான நேரத்தில் சிகிச்சை எடுத்துக் கொள்ளாமல் அலட்சியமாக இருந்த காரணத்தினாலும் உயிர்பலிகள் இங்கு அதிகம் ஏற்பட்டுள்ளன.
சென்னையில் உள்ள தேசிய தொற்றுநோயியல் நிறுவனத்தின் இயக்குநர் டாக்டர் மனோஜ் " ரேபிஸ் என்பது 100% தடுக்க கூடிய நோய், இதை சரியான நேரத்தில் கண்டறிந்து சிகிச்சை செய்ய வேண்டும். மக்களிடம் போதிய விழிப்பணர்ச்சி இல்லாததாலும் அலட்சியம் காரணமாகவும் ரேபிஸ் இன்னும் ஆபத்தான நோயாகவே இந்தியாவில் உள்ளது. நாய் மற்றும் மற்ற விலங்குகள் கடித்தால், உடனடியாக அந்த இடத்தை சோப்பு போட்டு நன்கு கழுவி விட்டு, விரைவாக மருத்துவ மனைக்குச் சென்று ரேபிஸ் தடுப்பு ஊசியை போட்டுக் கொள்ள வேண்டும்" என்று கூறினார்.
2030 ஆம் ஆண்டுக்குள் ரேபிஸ் தொற்றால் ஏற்படும் இறப்புகளை பூஜ்ஜியமாக குறைக்க வேண்டும் என்று அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக இந்திய அரசாங்கம் உலக சுகாதார அமைப்புடன் (WHO) இணைந்து, 2030 ஆம் ஆண்டுக்குள் ரேபிஸ் நோய் மரணங்களை முற்றிலும் பூஜ்ஜியமாக ஒழிக்க முடிவு எடுத்துள்ளது.
இதற்காக சுகாதார அமைச்சகம், கால்நடை பராமரிப்புத் துறை மற்றும் பல தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து விழிப்புணர்வு பிரச்சாரங்கள் செய்து வருகின்றன. பள்ளிகள் மற்றும் முக்கிய பகுதிகளில் ரேபிஸ் குறித்து விழிப்புணர்வு பிரசுரங்கள் ஏற்படுத்துவது, மற்றவர்களுக்கு தகவல்களை வழங்குவது, வளர்ப்பு நாய் மற்றும் தெரு நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி போடுவது விழிப்புணர்வின் முக்கிய பகுதியாகும்.
நாய் அல்லது மற்ற விலங்குகள் கடித்தாலும் உடனடியாக தடுப்பூசி போட்டுக் கொள்ள, எச்சரிக்கை உணர்வினை ஏற்படுத்துதலும் இலக்கின் ஒரு பகுதியாகும். இதன் மூலம் ரேபிஸ் பாதிப்பினை முடிவுக்கு கொண்டு வரலாம்.