‘ஒரு மசோதாவுக்கு ஒப்புதல் இல்லையென்றால் அது நிராகரிக்கப்பட்டதாகவே பொருள்:’ ஆளுநர் ஆர்.என்.ரவி பரபரப்பு!

‘ஒரு மசோதாவுக்கு ஒப்புதல் இல்லையென்றால் அது நிராகரிக்கப்பட்டதாகவே பொருள்:’ ஆளுநர் ஆர்.என்.ரவி பரபரப்பு!

ந்திய குடிமைப்பணித் தேர்வுகளுக்கு தயாராகிவரும் மாணவர்களுடன் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, ‘எண்ணித் துணிக’ நிகழ்ச்சிக்காக சென்னை ராஜ்பவனில் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மாணவர்களுடன் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, ‘நாட்டின் வளர்ச்சிக்கு எதிராக வெளிநாடுகளில் இருந்து திட்டங்கள் தீட்டப்பட்டு இந்தியாவின் வளர்ச்சியை தடுக்கும் நோக்கில் பல செயல்கள் நடைபெறுகின்றன. இதற்காக பல கோடி ரூபாய் நிதி நம் நாட்டுக்குள் அனுப்பி வைக்கப்படுகிறது. இதுபோன்று நாட்டின் வளர்ச்சியை தடுக்கவும் பயங்கரவாதத்தை ஊக்குவிக்கவும் கொண்டுவரப்படும் நிதியை கட்டுப்படுத்த மத்திய அரசு எப்.சி.ஐ. முறைப்படுத்தப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல், மனித உரிமை, காலநிலை என பல்வேறு காரணிகளைக் கூறி நாட்டின் வளர்ச்சிக்கு எதிராக பல தடைகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன.

வெளிநாடுகளில் இருந்து கொண்டுவரப்படும் நிதிகள் பலவும் இதுபோன்ற வளர்ச்சிக்கு எதிராகப் பயன்படுத்தப்பட்டுள்ளன. போராட்டங்கள் செய்யவும் அந்த நித பயன்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக, வடகிழக்கு மாநிலங்களில் ஆண்டுக்கு 250 கோடி ரூபாய் வரையில் வெளிநாட்டு நிதிகள் நாட்டுக்கு எதிராக பயன்படுத்தப்பட்டு உள்ளது. கேரள மாநிலம், விளிஞ்சம் துறைமுகம் கொண்டு வரும்பொழுது அதற்கு எதிராக மக்களை தூண்ட நிதி பயன்படுத்தப்பட்டுள்ளது. அந்த துறைமுகம் வந்தால் மீன் வளம் பாதிக்கப்படாது என்று வல்லுனர்கள், உச்ச நீதிமன்றம் உள்ளிட்டவை கூறியதை மக்கள் ஏற்கவில்லை. அதேபோல், கூடங்குளம், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின்போது கூட வெளிநாட்டு நிதி பயன்படுத்தப்பட்டுள்ளது. ஸ்டெர்லைட் ஆலை போராட்டத்தின்போது நடைபெற்ற துப்பாக்கி சூடு சம்பவம் மிகவும் வருத்தமானது. ஆனால், ஸ்டெர்லைட் தொழிற்சாலையால் நாட்டின் மொத்த காப்பர் உற்பத்தியில் 40 சதவீதம் அளவுக்கு பூர்த்தி செய்யப்பட்டு வந்தது எவ்வளவு முக்கியத்துவமானது என்று தெரியும்.

ஆளுநர் ஒரு தீர்மானத்துக்கு ஒப்புதல் அளிக்காமல் நிலுவையில் வைத்திருந்தால், அது நிராகரிக்கப்பட்டதாகவே பொருள். அரசியல் அமைப்பின்படி அரசியல் அமைப்பை பாதுக்காப்பதே ஆளுநரின் கடமை. நாட்டின் வளர்ச்சிக்கு எதிராக வெளிநாட்டு நிதி உதவிகள் இருந்துள்ளன. ‘பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா’ அமைப்புக்கு பெரும்பாலும் வெளிநாடுகளில் இருந்தே நிதிகள் வந்துள்ளன. நாட்டில் பல பயங்கரவாத செயல்களுக்கு அந்தப் பணம் பயன்படுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாடு, கேரளா போன்ற மாநிலங்களில் இருந்து ISIS அமைப்புக்கு சென்றவர்களில் 90 நபர்களை இந்த அமைப்பு அனுப்பியுள்ளது.

தமிழ்நாடு அமைதியான மாநிலம். இங்கு பணியாற்றுவது மகிழ்ச்சியாக உள்ளது. தமிழ் மொழியின் தொன்மை, தமிழரின் கலாச்சாரம் மிகுந்த மகிழ்ச்சியையும் வரவேற்பையும் வழங்குகிறது' என்று அவர் தெரிவித்து உள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com