’அதானி குற்றவாளி என்றால் பிரதமர் நரேந்திர மோடியும் குற்றவாளிதான்’ ஆ.ராசா ஆவேசம்!

’அதானி குற்றவாளி என்றால் பிரதமர் நரேந்திர மோடியும் குற்றவாளிதான்’ ஆ.ராசா ஆவேசம்!

மிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி புதுக்கோட்டை மாவட்டம், திருக்கோகர்ணத்தில் நேற்று திமுக சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு திமுகவின் துணைப் பொதுச் செயலாளர் ஆ.ராசா பேசினார்.

அந்தக் கூட்டத்தில் அவர் பேசும்போது, ’’கருணாநிதிக்கு ஏன் 80 கோடி ரூபாய் செலவில் நினைவு சின்னம் என எடப்பாடி பழனிசாமி கேள்வி கேட்கிறார். தமிழகத்துக்கும், தமிழ் மொழிக்கும், தமிழக மக்களுக்கு பல நல்ல திட்டங்களுக்கு கையெழுத்திட்ட கருணாநிதிக்கு பேனா நினைவுச் சின்னம் வைக்கக் கூடாதா?

அதானி விவகாரத்தில் 10 லட்சம் கோடி ரூபாய் முறைகேடு நடந்து உள்ளது குறித்து நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடியிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் பதில் அளிக்காமல் மெளனம் காப்பது ஏன்? அமலாக்கத் துறை, சி.பி.ஐ., வருமான வரித்துறை போன்றவற்றுக்கு பயந்து மம்தா பானர்ஜி, சந்திரசேகரராவ், ஜெகன்மோகன் ரெட்டி, ஒடிசா, பஞ்சாப் முதலமைச்சர்கள் யாரும் பேசவில்லை. ஆனால், இவ்வளவு பெரிய ஊழலை தட்டிக்கேட்ட ஒரே இயக்கம் திராவிட முன்னேற்ற கழகம்தான். அதன் தலைவர் மு.க.ஸ்டாலின்தான்.

பத்து லட்சம் கோடி ரூபாய் முறைகேடு செய்த அதானி குற்றவாளி என்றால், பிரதமர் நரேந்திர மோடியும் குற்றவாளிதான். இதைக் கூறியதற்காக என் மீது வழக்கு தொடர்ந்து எனக்கு தண்டனை வாங்கிக் கொடுத்து, என்னுடைய பதவியைப் பறித்தாலும் பரவாயில்லை. நான் சிறைக்குச் செல்லத் தயாராக உள்ளேன்’’ என அவர் பேசி இருக்கிறார். பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில்தான் தமிழகத்துக்கு வந்து, முதல்வர் மு.க.ஸ்டாலினோடு இணைந்து பல்வேறு நலத்திட்டங்களை துவக்கி வைத்துவிட்டுச் சென்றிருக்கும் வேளையில் ஆ.ராசாவின் இந்தப் பேச்சு அரசியல் விமர்சகர்களிடையே பெரிதாகப் பார்க்கப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com