
தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டால் சிறையிலிருந்து ஆட்சி நடத்துவார் என்று ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது. தில்லி மதுபானக் கொள்கை தொடர்பான வழக்கில் அமலாக்கத்துறை இயக்குநகரம் கெஜ்ரிவாலுக்கு சம்மன் அனுப்பியுள்ள நிலையில் இந்த தகவலை ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது.
தற்போது செயல்பாட்டில் இல்லாத மதுபானக் கொள்கையுடன் தொடர்புடைய பணமோசடி வழக்கில் விசாரணைக்கு ஆஜராகுமாறு கெஜ்ரிவாலுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இது தில்லி முதல்வர் கெஜ்ரிவாலை சிறையில் அடைக்க மோடி அரசின் சதித்திட்டமாகும் என்றும் ஆம் ஆத்மி தெரிவித்துள்ளது.
ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை சந்தித்துப் பேசிய பிறகு, அமைச்சர் அதிஷி செய்தியாளர்களிடம் பேசுகையில், அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ள போதிலும் முதல்வர் பதவியை ராஜிநாமா செய்ய வேண்டாம் என அனைத்து எம்.எல்.ஏ.க்களும் கெஜ்ரிவாலிடம் கேட்டுக் கொண்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
தில்லி மக்கள் கெஜ்ரிவாலுக்குத்தான் வாக்களித்துள்ளனர். எனவே ராஜிநாமா செய்ய வேண்டும் என்று அவரிடம் கேட்டுக் கொண்டுள்ளோம். கெஜ்ரிவால் சிறைக்கு சென்றாலும் தில்லி முதல்வராக தொடர்வார் என்று அதிஷி கூறினார். சிறையிலேயே அமைச்சரவைக் கூட்டத்தை நடத்துவதற்கு நீதிமன்றத்தின் அனுமதி கோரப்படும் என்றும் அதிஷி மேலும் கூறினார்.
தில்லி அரசு சிறையிலிருந்தபடியே நிர்வகிக்கப்பட்டு செயல்படும் என்றும் அதிஷி கூறினார். அரவிந்த் கெஜ்ரிவால் விரைவில் ஆம் ஆத்மி கட்சி கவுன்சிலர்கள் கூட்டத்தை நடத்துவார் என்று செளரவ் பரத்வாஜ் மற்றும் அதிஷி இருவரும் கூறினர்.
மதுபானக் கொள்கை ஊழல் தொடர்பான பணமோசடி வழக்கு தொடர்பாக விசாரணைக்கு வருமாறு அமலாக்கத்துறை கடந்த நவம்பர் 2 ஆம் தேதி அமலாக்கத்துறை கெஜ்ரிவாலுக்கு அழைப்பு விடுத்திருந்தது.
எனினும் தமக்கு அனுப்பப்பட்ட சம்மன் சட்டவிரோதமானது, அரசியல் உள்நோக்கம் கொண்டது என்று கூறி ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் அதை தவிர்த்துவிட்டார். மேலும் பா.ஜ.க.வின் நிர்பந்தத்தின் பேரிலேயே தமக்கு சம்மன் அனுப்பியுள்ளதாகத் தெரிவித்திருந்தார்.
இந்த ஆண்டு பிப்ரவரில் தில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவும் ஆம் ஆத்மி மாநிலங்களவை உறுப்பினர் சஞ்சய் சிங் கடந்த அக். 4 ஆம் தேதியும் கைது செய்யப்பட்ட அதே வழக்கில் இப்போது கெஜ்ரிவாலுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் தில்லி மதுபானக் கொள்கை தொடர்புடைய ஊழல் வழக்கில் கெஜ்ரிவாலிடம் மத்திய புலனாய்வுத்துறை (சிபிஐ) ஏறக்குறைய ஒன்பது மணி நேரம் விசாரணை நடத்தியது குறிப்பிடத்தக்கது.
2024 மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக இந்தியா எதிர்க்கட்சி கூட்டணியின் முக்கிய தலைவர்களை குறிவைக்கும் பா.ஜ.க. திட்டத்தின் ஒருபகுதியாக தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்படலாம் என்று ஆம் ஆத்மி கட்சி கடந்த நம்பர் 1 ஆம் தேதி தெரிவித்திருந்தது.
தில்லி அரசால் இப்போது கைவிடப்பட்ட 2021-22 ஆம் ஆண்டுக்கான மதுபானக் கொள்கை சில மதுபான வியாபாரிகளுக்கு சாதமாக இருப்பதான குற்றச்சாட்டின் பேரில் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறது. எனினும இந்த குற்றச்சாட்டை கெஜ்ரிவால் மற்றும் அவரது கட்சியினர் மறுத்து வருகின்றனர். புதிய கொள்கை அரசுக்கு கூடுதல் வருவாய் கிடைக்கவே வழிவகுக்கும் என்று கூறிவருகின்றனர்.