அதிக ஒலி எழுப்பும் சைலன்சர் பொருத்தினால்... போக்குவரத்துக் காவலர்கள் எச்சரிக்கை.


அதிக ஒலி எழுப்பும் சைலன்சர் பொருத்தினால்... போக்குவரத்துக் காவலர்கள் எச்சரிக்கை.

ன்றைய இளைஞர்கள் பொறுப்புணர்ந்து அதிவேகமாக முன்னேறி வரும் அதே வேளையில் சில விசயங்களில் பொறுப்பைத் துறந்து மற்றவர்களுக்கு உபத்திரவங்களும் தருகின்றனர். அதில் ஒன்று போக்குவரத்து விதிகளை மீறுவது. இருசக்கர வாகனத்தில் செல்லும்போது அதிக வேகத்துடன் செல்வது, அதிக ஒலி எழுப்புவது போன்ற இவர்களின் செயல்கள் சாலைகளில் செல்வோரையும் அச்சுறுத்தி பி பியை எகிற வைக்கிறது. இதுபோன்ற ஒழுக்கமற்ற செயலுக்கு அபராதம் விதித்து எச்சரிக்கை செய்துள்ளது சேலம் போக்குவரத்து காவல்துறை.

சேலம் மாநகரில் இருசக்கர வாகனத்தில் அதிக ஒலி எழுப்பும் சைலென்சர் பொறுத்தி  இருந்தால் ரூபாய் பத்தாயிரம் வரை அபராதம் விதிக்கப்படும் என்று போக்குவரத்து காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். சேலம் மாநகரில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான இருசக்கர வாகனங்கள் சென்று வருகிறது. பெரும்பாலானவர்கள் விதிமுறைகளைப் பின்பற்றி வந்தாலும் ஒரு சில வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிமுறைகளை முற்றிலும் மதிக்காமல் வாகனத்தை இயக்கி வருகின்றனர்.

ஹெல்மெட் அணியாமலும் செல்போன் பேசிக்கொண்டும் வாகனத்தை இயக்குவதால் கவனமின்றி எதிரில் வரும் வாகனத்தின்  மீது மோதும் நிலை உள்ளது. இதனால் போக்குவரத்து விதிகளின்படி வாகனத்தை இயக்கும் வாகன ஓட்டிகளும் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். இது மட்டும் இல்லாமல் ஒரு சில வாகன ஓட்டிகள் வழக்கத்தைவிட மிக அதிக அளவு சத்ததுடன் கூடிய சைலன்சரை பொருத்துகின்றனர். இந்த அளவுக்கு அதிகமான ஒலி சாலையில் பயணிக்கும் குழந்தைகள் முதியவர்கள், நோயாளிகள் என அனைத்து தரப்பினரையும் கடுமையாக பாதித்து வருகிறது. இதனால் சிறு குழந்தைகளின் காதுகள் பாதிக்கப்படும் வாய்ப்பும் உள்ளது. திடீரென்று பயமுறுத்தும் ஒலிசப்தம் இருதய பலவீனம் கொண்டவர்களை அதிகம் பாதிக்கும் என்றும் சொல்கின்றனர்.

இது குறித்து பொதுமக்கள் புகார் தெரிவித்து வந்த நிலையில் கடந்த சில நாட்களாக போக்குவரத்து விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகள் மீது போக்குவரத்து காவலர்  கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இது குறித்து போக்குவரத்து காவலர் “சிலர் அதிக சப்தத்துடன் கூடிய சைலென்களை ஃப்ளிப்கார்ட், அமேசான் உள்ளிட்ட  ஆன்லைன் இணையதளங்களில் வாங்கி தங்களுடைய இருசக்கர வாகனத்தில் பொறுத்துகின்றனர். இவை இயல்பான சப்தத்தை விட மிக அதிக அளவு ஒலி எழுப்புகிறது. இது போக்குவரத்து விதிமுறைகளை மீறும்  வகையில் உள்ளதால் இத்தகைய சைலென்சர் பொருத்தியுள்ள வாகன ஓட்டிகளுக்கு ஸ்பாட் ஃபைனாக ரூபாய் பத்தாயிரம் அபராதம் விதிக்கிறோம். மேலும் சைலென்ஸர்களையும்  பறிமுதல் செய்து வருகிறோம். எனவே வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிமுறைகளை முறையாகவும் பொறுப்புடனும் பின்பற்ற வேண்டும்” என்று அறிவுறுத்தியுள்ளனர்.

 விதிகளில் உள்ள சப்த அளவை விட அதிக அளவு ஒலியோ புகையோ எதுவாக இருந்தாலும் பாதிக்கப் படப்போவது சாலையில் பயணிக்கும் அனைவரும்தான் எனும் அக்கறையுடன் இருப்பதே நமது கடமையாகும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com