’ஓபிஎஸ்க்கு ஓகே என்றால் காங்கிரஸ் வெற்றிக்கு வேலை செய்யத் தயார்’: புகழேந்தி பரபரப்புப் பேச்சு!

’ஓபிஎஸ்க்கு ஓகே என்றால் காங்கிரஸ் வெற்றிக்கு வேலை செய்யத் தயார்’: புகழேந்தி பரபரப்புப் பேச்சு!
Published on

ண்ணா திமுகவில் கடந்த சில மாதங்களாகவே ஓபிஎஸ் - ஈபிஎஸ் இடையே தலைமைக்கான மோதல் நடைபெற்று வருகிறது. இந்த மோதலுக்கிடையே, பாஜக தலைமையின் ஆதரவைப் பெறப்போவது யார் என்பதில் இரு தரப்பினர் இடையேயும் பெரும் போட்டியே நடைபெற்றது. அதையடுத்து மோடி, அமித்ஷா இருவரையும் சந்தித்துப் பேச ஓபிஎஸ் - ஈபிஎஸ் இருவருக்கும் இடையே பெரிய போட்டா போட்டியே இருந்தது.

இந்த நிலையில் எடப்பாடி பழனிச்சாமிக்கு சாதகமாக நீதிமன்றங்களில் பல்வேறு வழக்குகளில் தீர்ப்பு வந்தது. அதைத் தொடர்ந்து இந்தியத் தேர்தல் ஆணையமும் அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமியையே அங்கீகரித்தது. அதையடுத்து எடப்பாடி பழனிச்சாமி தரப்பின் கை ஓங்கியதால், அண்மையில் டெல்லி சென்ற எடப்பாடி, அமித் ஷாவை சந்தித்து ஆலோசனை செய்தார். இந்த ஆலோசனையில் 2024 நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பாகவும் பேசப்பட்டதாகத் தகவல்கள் வெளியாயின. பாஜக தலைமை எடப்பாடி அணியுடன் மட்டும் கூட்டணி பற்றியும், தொகுதி பங்கீடு குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தி இருப்பது ஓ.பன்னீர்செல்வம் தரப்பை மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாக்கி இருக்கிறது.

இந்த நிலையில்தான், ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர் பெங்களூர் புகழேந்தி, கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், ’’அதிமுகவின் பொதுக்குழு செல்லாது என்று ஓபிஎஸ் அறிவித்திருப்பது மகிழ்ச்சியான செய்தி. திருச்சியில் நடந்த மாநாடு, தென் தமிழ்நாட்டினர் மட்டுமே பங்கேற்ற பெருங்கூட்டம். சேலத்திலும் இதுபோன்ற மாபெரும் மாநாட்டை நடத்த வேண்டும் என்று ஓபிஎஸ்ஸை கேட்டுக்கொள்கிறேன். கர்நாடக சட்டமன்றத் தேர்தலைப் பொறுத்தவரை, காங்கிரஸ், பாஜக, மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகள் எங்களிடம் ஆதரவு கேட்டு வருகின்றன. ஓபிஎஸ் மட்டும் சம்மதித்தால் காங்கிரஸ் கட்சிக்கு அதிமுக ஆதரவு வழங்கத் தயார்” என்று தெரிவித்து இருக்கிறார்.

ஓ.பன்னீர்செல்வம் பாஜகவுக்கு எதிராக இதுவரை ஒரு வார்த்தை கூடப் பேசாத நிலையில், அவரது ஆதரவாளர்கள் பலரும் பாஜகவை சீண்டி வருகின்றனர். தனது ஆதரவாளர்கள் மூலம் ஓபிஎஸ் பாஜகவுக்கு எதிரான முதல் அடியை எடுத்து வைக்கத் தொடங்கி உள்ளாரோ என்ற கேள்வி பலருக்கும் எழுந்துள்ளது. மேலும், புகழேந்தியின் இந்தப் பேச்சு அதிமுக - பாஜகவினர் மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com