வாரணாசியில் போட்டியிட்டால் பிரியங்கா வெற்றி உறுதி: சஞ்சய் ரெளத்!

வாரணாசியில் போட்டியிட்டால் பிரியங்கா வெற்றி உறுதி: சஞ்சய் ரெளத்!

‘பிரதமர் நரேந்திர மோடி போட்டியிடும் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் பிரியங்கா போட்டியிட்டால் அவர் வெல்வது உறுதி’ என்று சிவசேனா உத்தவ் தாக்கரே பிரிவு தலைவர்களில் ஒருவரான சஞ்சய் ரெளத் தெரிவித்துள்ளார்.

‘உத்தரப் பிரதேச மாநிலம், வாரணாசியில் காங்கிரஸ் சார்பில் பிரியங்கா போட்டியிட வேண்டும் என்று அந்தப் பகுதி மக்கள் விரும்புகிறார்கள். வாரணாசி பிரதமர் மோடியின் தொகுதியாகும். பிரதமர் மோடிக்கு எதிராக பிரியங்கா போட்டியிட்டால் அவர் வெற்றி பெறுவது உறுதி. வரும் தேர்தலில் ரேபரேலி, வாராணி மற்றும் அமேதி மக்களவைத் தொகுதிகளில் பாஜகவுக்கு போட்டி கடுமையானதாக இருக்கும்’ என்றும் சஞ்சய் ரெளத் கூறினார்.

மேலும் அவரிடம், சரத் பவாரும் அஜித் பவாரும் சந்தித்துப் பேசியுள்ளது பற்றி கேட்டதற்கு, ‘பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பும் பிரதமர் நரேந்திர மோடியும் சந்திக்க முடியும் என்றால், ஏன் சரத் பவாரும், அஜித் பவாரும் சந்திக்கக்கூடாது?’ என்று ரெளத் கேள்வி எழுப்பினார்.

‘சரத் பவாரும், அஜித் பவாரும் சந்தித்த செய்தி ஊடகங்கள் மூலம்தான் தெரிய வருகிறது. ஒருவேளை இந்தியா கூட்டணிக்கு வந்துவிடுமாறு அஜித் பவாரிடம் சரத் பவார் கூறியிருக்கலாம். தற்போது மகாராஷ்டிர அரசு செயல்படும் விதத்தை பார்க்கும்போது இரண்டு துணை முதல்வர்களுமே மகிழ்ச்சியாக இல்லை என்பது தெரிகிறது. அரசியலில் எதுவும் நடக்கலாம். அஜித் பவார், தேவேந்திர பட்னவிஸ், மகாராஷ்டிர மக்கள் யாருக்குமே இந்த அரசு செயல்பாட்டின் மீது நம்பிக்கையில்லை’ என்று ரெளத் கூறினார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரை அவரது வீட்டில் அஜித் பவார் சந்தித்துப் பேசியுள்ளார். இந்த ரகசிய சந்திப்பு தொடர்பாக பதிலளித்த உறவினர்கள் ஒருவரையொருவர் சந்தித்துப் பேசுவதில் என்ன இருக்கிறது. ஏன் சந்தித்துப் பேசக்கூடாது என்று கேட்டனர்.

சரத் பவாரின் உறவினரான அஜித்பவார் மற்றும் 8 தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் மகாராஷ்டிரத்தில் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான ஆளும் பாஜக, சிவசேனா கூட்டணியில் சேர்ந்தனர். தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் பலரின் ஆதரவு தமக்கு இருப்பதாக அஜித் பவார் தெரிவித்திருந்தார். பின்னர் அஜித் பவார் துணை முதல்வராக பொறுப்பேற்றுக்கொண்டார். ஏற்கெனவே பாஜகவின் தேவேந்திர பட்னவிஸும் துணை முதல்வராக பதவி வகித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com