‘பள்ளிகளைச் சற்று தாமதமாகத் திறந்தால் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை’ பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை!

‘பள்ளிகளைச் சற்று தாமதமாகத் திறந்தால் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை’ பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை!
கல்கி டெஸ்க்

1941 முதல் 2021 வரை வெளிவந்த கல்கி குழும அச்சுப் பதிப்புகளின் களஞ்சியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு டிஜிட்டல் வடிவில் மீள்பதிப்பிக்கப்படும் கட்டுரைகளைக் கல்கி டெஸ்க் தொகுத்து வழங்குகிறது. கல்கி குழுமத்தின் 80 ஆண்டுகால பத்திரிகை மரபில் வெளிவந்த இக்கட்டுரைகளின் அசல் உள்ளடக்கம் மாறாமல் இன்றைய வாசகர்களுக்கேற்பச் சரிபார்க்கப்பட்டு வழங்கப்படுகிறது.

Updated on

மிழகத்தில் இருக்கும் அனைத்துப் பள்ளிகளும் கோடை விடுமுறைக்குப் பிறகு வரும் ஜூன் மாதம் 1ம் தேதி திறக்கப்படும் என்று தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமோழி அறிவித்திருந்தார்.

இந்த நிலையில், பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், "தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகள் ஏற்கெனவே அறிவித்தவாறு ஜூன் 1ம் தேதி திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்திருக்கிறார். கோடை வெப்பம் மக்களை வாட்டி வரும் நிலையில், ஜூன் 1ம் தேதி அரசுப் பள்ளிகளைத் திறப்பது மாணவர்களின் நலனுக்கு உகந்ததாக இருக்காது. தமிழ்நாட்டில் அண்மைக் காலங்களில் இல்லாத அளவுக்கு கடுமையான வெப்பம் வாட்டி வதைத்து வருகிறது. வெப்பம் தணியும் வரை பொதுமக்கள் வெளியில் செல்வதைத் தவிர்க்க வேண்டும் என்று சென்னை மாநகராட்சியும், தமிழக அரசின் வருவாய்த்துறையும் அறிவித்துள்ளன. அத்துறைகளின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றி நடக்கும்படி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

தமிழ்நாட்டின் பல பகுதிகளில் 42 டிகிரி செல்சியசுக்கும் மேல் வெப்பம் வாட்டி வரும் நிலையில், பெரியவர்களையே வெளியில் செல்ல வேண்டாம் என அரசு அறிவுறுத்தும் சூழலில், அரசுப் பள்ளிகளை ஜூன் 1ம் தேதி திறப்பது எந்த வகையில் நியாயம்? மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) பாடத் திட்டத்தைப் பின்பற்றும் பள்ளிகளுக்கு 50 நாட்கள் கோடை விடுமுறை அளிக்கப்பட்டு, ஜூன் இரண்டாவது வாரத்துக்குப் பிறகுதான் திறக்கப்பட உள்ளன. தமிழக அரசுப் பள்ளிகளுக்கு ஒரு மாதம் மட்டுமே விடுமுறை அளித்து, ஜூன் முதல் நாளிலேயே திறப்பது நியாயமற்றது. மாணவர்களின் உடல் நிலையைக் கருத்தில் கொண்டு பள்ளிகள் திறப்பை தீர்மானிக்க வேண்டும்.

கோடை வெப்பத்தின் கடுமை தணியும் வரை ஒரு வாரத்துக்கோ, பத்து நாட்களுக்கோ அரசுப் பள்ளிகள் திறப்பை ஒத்தி வைப்பதால், யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படப்போவதில்லை. கல்வியை விட மாணவர்களின் உடல் நலன் மிகவும் முதன்மையானது. இதைக் கருத்தில் கொண்டு, அரசுப் பள்ளிகள் திறப்பை குறைந்தது ஒரு வாரத்துக்கு ஒத்திவைக்க வேண்டும்" எனத் அவர் தெரிவித்து இருக்கிறார்.

logo
Kalki Online
kalkionline.com