மணிப்பூர் மாநிலத்தில் கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக பெரும் கலவரங்கள் நடைபெற்று வருகின்றன. இந்தக் கலவரத்தின் உச்சமாக அம்மாநில குகி பழங்குடியின பெண்கள் இருவரை மைதேயி சமூகத்தைச் சேர்ந்த ஆண்கள் கும்பல் ஒன்று சேர்ந்து நிர்வாணப்படுத்தி வீதியில் ஊர்வலமாக அழைத்து சென்ற அநாகரிக வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அந்த இரு பெண்களில் ஒருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கும் ஆளாகி இருக்கிறார். இது தொடர்பாக பல்வேறு தரப்பினர் தங்களது கண்டனங்களையும் தெரிவித்து வருகின்றனர்.
இந்த அநாகரிக சம்பவத்தினை கருத்தில் கொண்டு உச்ச நீதிமன்றம் இந்த விவகாரத்தை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக்கொண்டதோடு, இது குறித்து கருத்தையும் தெரிவித்து இருக்கிறது. உச்ச நீதிமன்ற விசாரணையின்போது இந்த சம்பவத்தை குறித்துப் பேசிய தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், “இந்த சம்பவத்தை ஏற்றுக்கொள்ளவே முடியாது. வகுப்புவாத கலவரம் நடக்கும் பகுதியில் பெண்களை வன்முறைக்கான கருவிகளாகப் பயன்படுத்தி இருக்கிறார்கள். அரசியலமைப்பு முற்றிலும் தோல்வி அடைந்ததற்கு இதுவே சாட்சி. வெளிவந்திருக்கும் இந்த காணொளிகளால் நாங்கள் மிகவும் கவலை அடைந்து இருக்கிறோம். இந்தப் பிரச்னையில் அரசு தலையிடவில்லை என்றால், நாங்களே தலையிட்டு நடவடிக்கை எடுக்க நேரிடும்” என்று பேசி இருக்கிறார்.
மேலும் அவர், "இதுபோன்ற வன்முறையில் ஈடுபடுபவர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய அரசு எடுத்த நடவடிக்கைகள் குறித்து நீதிமன்றத்துக்குத் தெரியப்படுத்த வேண்டும். வன்முறைக் கருவிகளாகப் பெண்களைப் பயன்படுத்தியிருப்பது அரசியலமைப்பு மீறல். மனித உரிமை மீறல். அரசியலமைப்பு ஜனநாயகத்துக்கு எதிரானது. வன்முறையில் ஈடுபடுபவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து மத்திய, மாநில அரசுகள் நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும்" என்றும் கூறி இருக்கிறார். இதைத் தொடர்ந்து, இந்த வழக்கு விசாரணை வரும் 28ம் தேதி ஒத்திவைக்கப்பட்டு இருக்கிறது.