பெற்றோரை கவனிக்காவிட்டால் கொடுத்த சொத்து பறிக்கப்படும்!

பெற்றோரை கவனிக்காவிட்டால் கொடுத்த சொத்து பறிக்கப்படும்!
Published on

பெற்றோர்களின் பெயரில் சொத்து இருக்கும் வரை அவர்களை விழுந்து விழுந்து கவனித்துக்கொள்ளும் பிள்ளைகள், தங்கள் பெயருக்கு அந்த சொத்து கைமாறியவுடன் அவர்களை கவனிக்காமல் பல விதங்களிலும் அலட்சியம் செய்யும் போக்கு தற்போது அதிகரித்து வருகிறது. அதன் விளைவுதான் நாட்டில் இன்று அதிகரித்திருக்கும் முதியோர் காப்பகங்கள். இதை வெளியில் சொன்னால் வெட்கக் கேடு என்று நினைத்து பெற்றோர்களும் தங்கள் பிள்ளைகள் மேல் கொண்ட பாசத்தால் அவர்கள் செய்யும் தவறுகளை கண்டும் காணாமலும் பொறுத்துக் கொள்கின்றனர்.

இந்த நிலை இன்னும் கொஞ்சம் மேலே போய், பெற்றோர்களை அனாதை இல்லங்களில் சேர்ப்பதும் அல்லது வீட்டை விட்டு விரட்டி விடுவதும்கூட நிறைவே நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. வயதான காலத்தில் தங்களால் ஒன்றும் செய்ய முடியாத நிலையில் சில பெற்றோர்கள் தெருவோரங்களில் தஞ்சம் புகுவதும், கோயில்களில் பிச்சை எடுப்பதுமாக தங்களது கடைசிக் காலங்களை கண்ணீருடன் கழித்து வருகின்றனர்.

சமீப காலங்களில் பிள்ளைகளின் இதுபோன்ற மனசாட்சியற்ற போக்கு அதிகரித்து வருவதாக எழுந்த புகாரின் அடிப்படையில் புதுச்சேரி மாநில கலெக்டர் மணிகண்டன் அதிரடி நடவடிக்கை ஒன்றை எடுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியபோது, “சொத்துக்களை எழுதி வாங்கிய பின், பெற்றோரை முதுமைக் காலத்தில் பராமரிக்காமல், முதியோர் இல்லங்களிலும், தெருக்களிலும் விட்டுச் செல்வது வேதனைக்குரியது. சொத்துக்களை பெற்றுக் கொண்டு முறையாக அவர்களைப் பராமரிக்கவில்லை எனில், பெற்றோர் தாராளமாக மாவட்ட நிர்வாகத்தை அணுகலாம்.

பிள்ளைகள் பராமரிக்கவில்லை என்ற மனுக்களுக்கு அதிக முக்கியத்துவம் தரப்படும். அந்த மனுக்கள் மீது உடனடியாக தீர்வு ஏற்படுத்தித் தரப்படும். பெற்றோரை பராமரிப்பது பிள்ளைகளின் கடமை. ஒவ்வொரு மனிதனுக்கும் முதுமை பருவத்தில் அன்பும், ஆதரவும் கட்டாயம் தேவை. அது கிடைக்காத பெற்றோர் வீட்டை விட்டு வெளியேறுகின்றனர். சிலர் வீட்டை விட்டு விரட்டப்படுகின்றனர். இந்த அவல நிலை மாற, ஒவ்வொரு பிள்ளைகளும் சிந்திக்க வேண்டும். இன்று இவர்கள் என்றால், நாளை நீங்கள் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். பெற்றோரை பராமரிக்காதது குறித்து அதிக அளவில் புகார் வருவதால், மூத்த குடிமக்கள் நலன் பராமரிப்பு சட்டத்தின் கீழ் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பெற்றோரை பராமரிக்காத பிள்ளைகள் மீது எழுதப்பட்டுள்ள சொத்து பத்திரம் ரத்து செய்யப்படுவதுடன், அவர்கள் சிறை தண்டனை உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளுக்கும் உள்ளாவர்” என்று எச்சரித்திருக்கிறார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com