சிறுபான்மையினரின் உரிமைகள் மறுக்கப்பட்டால் இந்தியா சிதறுண்டு போய்விடும் – அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமாவின் பகீர் பேச்சு!

சிறுபான்மையினரின் உரிமைகள் மறுக்கப்பட்டால் இந்தியா சிதறுண்டு போய்விடும் – அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமாவின் பகீர் பேச்சு!
Published on

சிறுபான்மையினரின் மத வழிபாட்டை உரிமைகள் பாதுகாக்கப்படாவிட்டால், இந்தியா பிளவுபடுவதை தடுக்கமுடியாது என்று முன்னாள் அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா பேசியிருக்கிறார். சிஎன்என் தொலைக்காட்சிக்கு ஒபாமா அளித்த பேட்டியில் மோடியின் அமெரிக்க வருகை குறித்தும், ஜோ பைடன் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும் பேசும்போது இவ்வாறு தெரிவித்திருக்கிறார்.

சிஎன்என் தொலைக்காட்சிக்கு முன்னாள் அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா விரிவான பேட்டியென்றை அளித்துள்ளார். உலக அரசியல் குறித்தும், ஜோ பைடன் நிர்வாகம் குறித்தும் கேட்கப்பட்ட பல்வேறு கேள்விகளுக்கு ஒபாமா பதிலளித்திருக்கிறார். உலகெங்கும் ஜனநாயகம் தழைக்க ஜோ பைடன் நிர்வாகம் மேற்கொண்டு வரும் பணிகள் குறித்த கேள்விக்கு பதிலளித்த ஒபாமா, ஜோ பைடனிடம் வேண்டுகோள் ஒன்றையும் விடுத்திருக்கிறார்.

இந்திய பிரதமர் மோடியை நம்முடைய அதிபர் சந்திக்கும்போது நேர்மையான சில கேள்விகளை வெளிப்படையாக முன்வைக்கவேண்டும். இந்துக்கள் பெரும்பான்மையாக இருக்கும் இந்தியாவில் இஸ்லாமியர்களின் சிறுபான்மை உரிமைகள் குறித்து கேள்வி எழுப்ப வேண்டும். பிரதமர் மோடியை சந்தித்து பேச நேர்ந்தால், இந்தியாவில் உள்ள சிறுபான்மையினரின் உரிமைகளை பாதுகாக்க முடியாவிட்டால், இந்தியா சிதறுண்ட போக வாய்ப்பு இருப்பதாக குறிப்பிடுவேன் என்று தெரிவித்திருக்கிறார்.

மது ரீதியிலான மோதல்கள் இந்தியாவில் நிகழ்ந்தால் அது அனைவரையும் பாதிக்கும். இந்தியாவில் உள்ள இஸ்லாமியர்களை மட்டுமல்ல இந்தியாவில் உள்ள இந்துக்களையும் வெகுவாக பாதிக்கும். இது போன்ற விஷயங்களை நேர்மையாக அணுகுவதும், பேசுவதும் முக்கியமானது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் சமீபத்தில் அமெரிக்காவுக்கு சென்றிருந்த ராகுல் காந்தி, இந்திய பிரதமர் மோடியின் செயல்பாடுகளை விமர்சித்தவர், மோடி இந்தியா எனும் காரை பின்னோக்கு கண்ணாடியை மட்டும் பார்த்தே இயக்குகிறார். இதனால் ஒன்றன்பின் ஒன்றாக விபத்து ஏற்படப் போகிறது என்று பேசியிருந்தார்.

அதை கண்டித்து பேசிய இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், உள்நாட்டு விஷயங்களையும், பிரச்சனைகளையும் வெளிநாட்டிற்கு சென்று பேசி, அரசியலாக்குவது நமது தேச நலனுக்கு உகந்தது அல்ல. உலகம் நம்மை கூர்ந்து கவனிக்கிறது. வெளிநாடு செல்லும் பொழுதெல்லாம் இந்தியாவை ராகுல் காந்தி விமர்சனம் செய்வது ஒரு பழக்கமாகி விட்டது என்று விமர்சனம் செய்திருந்தார்.

இந்தியா பற்றி ஓபாமா பேசியிருப்பது டெல்லி அரசு வட்டாரங்களில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இது குறித்து விளக்கமளிக்க வெளியுறவுத்துறை அதிகாரிகள் மறுத்துவிட்டாலும், விரைவில் இது தொடர்பாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கருத்து தெரிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com