ஆசிரியர் கையில் பிரம்பு இருந்தால் மாணவர்களின் ஒழுக்கம் வளரும்... தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவர் ஐ.லியோனி

ஆசிரியர் கையில் பிரம்பு இருந்தால் மாணவர்களின் ஒழுக்கம் வளரும்... தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவர் ஐ.லியோனி

அந்தக் காலத்தில் பள்ளி பயிலும் குழந்தைகள் ஆசிரியர் கைகளில் உள்ள குச்சிக்குப் பயந்து நல்ல ஒழுக்கங்களை கடைப்பிடித்து வளர்ந்தனர் . பெற்றோரும் ஒழுக்கம் தவறினால் கைகளில் பிரம்புடன் பிள்ளைகளைத் துரத்தி சில அடிகள் தந்து நேர் வழிக்குத் திரும்ப வைப்பார்கள் . ஆனால் இன்றோ வீட்டுக்கு ஒரு பிள்ளை இருக்கும் நிலையில் ஆசிரியர் அடித்து விட்டால் அவ்வளவுதான்... ஊர் கூடி அவரை உண்டு இல்லை என்று ஆக்கிவிடும் காலம் இது. பிள்ளைகளை அடித்துத் திருத்துவதைக் குறித்து இரண்டு விதமான கருத்துகள் இருக்கும் இந்தக்காலத்தில், ஒரு பெற்றோர் தங்கள் மகனைப் பள்ளியில் கொண்டு விடும் முதல் நாளிலேயே ஆசிரியர் கையில் பிரம்பைக் கொடுத்த செய்தி அனைத்து ஊடகங்களிலும் வைரலானது.

இந்த சம்பவம் குறித்து  சேலம் நெத்திமேட்டில் உள்ள தனியார் பள்ளி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட லியோனி அவர்களின் கருத்து இது .

தனியார் பள்ளியின் 45வது ஆண்டு விழா அப்பள்ளியின் தலைமை ஆசிரியர்  சேலம் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர் உதயகுமார் மற்றும் பல முக்கியஸ்தர்களுடன் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு பாடநூல் கழக தலைவர் திண்டுக்கல் ஐ லியோனி கலந்துக்கொண்டு பல்வேறு சாதனைகளைப் படைத்த மாணவ மாணவிகளுக்கு கேடயம், சான்றிதழ்களை வழங்கினார்.

பின்னர் அவர் பேசும்போது “ சமீபத்தில் ஒரு பள்ளியில் தனது பிள்ளையை சேர்க்கச் சென்ற பெற்றோர் மூன்று பிரம்புகளை வாங்கிச் சென்று ஆசிரியரிடம் கொடுத்து எனது பிள்ளையை அடித்து நல்லொழுக்கத்தைக் கற்றுக் கொடுங்கள் என்றும், ஆனால் இந்தப் பிரம்பு  கொண்டு மற்ற பிள்ளைகளை அடிக்க வேண்டாம் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார். அந்தக் காலத்தில் படிக்கும்போது ஆசிரியர்கள் கையில் பிரம்பு இருக்கும். கண்டிப்புடன் கற்பிப்பார்கள். ஆனால், இன்றைக்கு மாணவர்களை அடிக்கக்கூடாது என்று நினைக்கிறார்கள். அது நல்ல விஷயம்தான். இருந்தாலும் , ஆசிரியர் கையில் பிரம்பு  இருந்தால் மாணவர்களிடம் சிறப்பான ஒழுக்கம் இருக்கும். ஆசிரியர்களிடம் பிரம்பு இல்லாமல் போனதால் காவல்துறையினரிடம் பிரம்பு  வந்துவிட்டது . ஒவ்வொரு மாணவரும் திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டும். பள்ளி மட்டுமின்றி  வெளியிடங்களிலும் கற்று திறமையை உருவாக்கிக்கொள்ள வேண்டும். அப்போதுதான் வாழ்வில் முன்னேற முடியும்”என்றார். விழாவில் திரளாகக் கலந்து கொண்ட ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் யாவரும் அவர் கருத்தை ஏற்று ஆமோதித்தனர்.

ஆம்... லியோனி அவர்களின் கூற்று ஏற்றுக்கொள்ள வேண்டியதுதானே ? சொல்லித் திருந்தாத பிள்ளைகள் அடிக்கு மட்டுமே திருந்துவார்கள் என்று இருந்தால் கண்டிப்பு தவறில்லை என்பதுதானே உண்மை.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com