
சென்னையில் இருந்து வெளியூர் செல்வோர், நெரிசலின்றி பயணிக்கும் வகையில், இன்று முதல் மூன்று நாட்களுக்கு ஐந்து இடங்களில் சிறப்பு பஸ் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
அதன்படி, மாதவரம், கே.கே. நகர் எம்.டி.சி., பஸ் நிலையம், தாம்பரம் மெப்ஸ் பஸ் நிலையம், தாம்பரம் ரயில் நிலைய பஸ் நிலையம், பூந்தமல்லி பைபாஸ் எம்.டி.சி., பஸ் நிலையம் என, ஐந்து இடங்களில் சிறப்பு பஸ் நிலையங்களில் இருந்து வெளியூர் பஸ்கள் இயக்கப்படும். சிறப்பு பஸ் நிலையங்களுக்கு கோயம்பேடில் இருந்து இணைப்பு பஸ்களும் இயக்கப்படுகின்றன.
தீபாவளிக்கு வெளியூர் செல்ல முன் பதிவு செய்வோருக்காக, இன்று முதல் நாளை மறுநாள் வரை, கோயம்பேடு பஸ் நிலையத்தில், 10 முன்பதிவு மையங்கள் செயல்படுகின்றன. அதேபோல்,தாம்பரம் மெப்ஸ் பஸ் நிலையத்திலும் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது . இவை, காலை 7:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை செயல்படும்.
மேலும், 'ஆன்லைனில்’ முன்பதிவு செய்ய விரும்புவோர், 'tnstc' எனும் மொபைல் போன் செயலியிலோ அல்லது 'www.tnstc.in' என்ற இணையதளம் வாயிலாகவோ முன் பதிவு செய்யலாம்.
அனைத்து இருக்கைகளும் நிரம்பிய பஸ்கள் மட்டும், கோயம்பேடில் இருந்து பூந்தமல்லி, நசரத்பேட்டை, வெளிவட்ட சாலை, வண்டலுார் வழியாக, ஊரப்பாக்கம் தற்காலிக பஸ் நிலையம் செல்லும். அதனால், தாம்பரம், பெருங்களத்தூரில் ஏறும் வகையில் முன்பதிவு செய்தோர், ஊரப்பாக்கம் சென்று ஏறலாம்.
கார் மற்றும் பிற வாகனங்களில் செல்வோர், நெரிசலில் சிக்காத வகையில் தாம்பரம், பெருங்களத்துார் வழியாக செல்வதைத் தவிர்த்து, திருப்போரூர், செங்கல்பட்டு அல்லது ஸ்ரீபெரும்புதுார் வழியாக செல்லலாம். மேலும், பஸ்கள் இயக்கம் குறித்த தகவல் மற்றும் புகார்களை, பஸ் நிலைய உதவி மையங்களில் தெரிவிக்கலாம்.