

சமீபகாலமாக ஓடும் ரெயிலில் செல்போன் திருடுபோகும் சம்பவங்களும் அதிகரித்து வருகிறது. இன்று மொபைல் போன் அத்தியாவசியப் பொருட்களில் ஒன்றாக மாறிவிட்டது. சில நிமிடங்கள் மொபைல் போன் காணாமல் போய்விட்டாலே நாம் பதட்டமாகி விடுகிறோம். அதுவும் ரெயிலில் பயணிக்கும்போது மொபைல் போன் தொலைந்து போவது பீதியை ஏற்படுத்தக்கூடும்.
குறிப்பாக ரெயில் கதவின் அருகில் நின்று பேசுதல், ஜன்னல் அருகில் இருந்து செல்போனை பயன்படுத்துதல், சார்ஜ் போட்டுவிட்டு கவனிக்காமல் விடுதல் போன்ற செயல்கள் திடுட்டுக்கு வழிவகுக்கின்றன. இதுபோன்ற சம்பவங்கள் நிகழும் போது பயணிகள் அமைதியாக இருக்கவும், அவசரப்பட்டு நடவடிக்கை எடுப்பதற்குப் பதிலாக சரியான நடைமுறைகளைப் பின்பற்றவும் ரயில்வே அதிகாரிகள் அறிவுறுத்துகிறார்கள்.
அந்த வகையில் ரெயிலில் பயணிக்கும் போது செல்போன் காணாமல் போனால் எவ்வாறு புகார் அளிக்க வேண்டும்? என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து தெற்கு ரெயில்வே விளக்கம் அளித்துள்ளது.
உலகின் நான்காவது பெரிய ரெயில்வே வலையமைப்பைக் கொண்ட இந்தியாவில், நீண்ட தூர ரெயில் பயணங்களில் தினமும் இதுபோன்ற சம்பவங்கள் அடிக்கடி நடந்து கொண்டு தான் இருக்கிறது.
ஓடும் ரெயிலில் செல்போன் தொலைந்தால் வழக்குப்பதிவு செய்ய வேண்டிய அவசியம் இல்லை. செல்போனை தொலைத்தவர்கள் குடும்பத்தினருடன் வந்திருந்தால் ‘ரெயில் மதாத்’ (RailMadad) என்ற செயலியை பதிவிறக்கம் செய்து புகார் தெரிவிக்கலாம். 139 என்ற எண் அல்லது சிஇஐஆர் (Central Equipment Identity Register - CEIR) ceir.gov.in அல்லது https://railmadad.indianrailways.gov.in/ என்ற இணையதளத்தில் தங்கள் புகார்களை பதிவு செய்யலாம்.
ரெயில் மதாத் (RailMadad)என்பது இந்திய ரயில்வே பயணிகளின் புகார்கள், ஆலோசனைகள் மற்றும் உதவிகளை விரைவாகத் தீர்க்கும் ஒரு ஒருங்கிணைந்த டிஜிட்டல் தளமாகும் (செயலி மற்றும் இணையதளம்).
இந்த புகார்கள் உடனடியாக ரெயில்வே பாதுகாப்பு படை சைபர் பிரிவிற்கு செல்லும். அவர்கள் தொலைந்த அல்லது திருடு போன செல்போன் செயல்படாதவாறு (பிலாக்) முடக்குவார்கள். அதனை தொடர்ந்து அந்த செல்போன் எந்த இடத்தில் இருக்கிறது? என்பதை கண்டறிந்து செல்போனை மீட்பார்கள். தொலைந்து போன செல்போன் குறித்து பயணிகள் புகார் தெரிவிக்கும் போது அதன் 15 இலக்க ‘ஐஎம்இஐ’ எண் விவரம் உள்ளிட வேண்டும். அதன் மூலம் தான் அந்த செல்போனை கண்டறிய முடியும்.
எனவே ரெயில் பயணிகள் அனைவருமே தங்களின் செல்போனில் ஐஎம்இஐ எண்ணை டைரி அல்லது வேறேதும் வழியில் ஞாபகம் வைத்திருக்க வேண்டியது மிகவும் அவசியமாகும்.
இதேபோல் ரெயிலில் தனியாக பயணம் செய்யும் பயணிகள் செல்போன் காணாமல் போனால் உடனடியாக அங்கிருக்கும் டிக்கெட் பரிசோதகர், ரெயில்வே பாதுகாப்பு படையினர் அல்லது நம்பத்தகுந்த சக பயணிகள் உதவியோடு இந்த நடைமுறையை பின்பற்ற வேண்டும் என தெற்கு ரெயில்வே சார்பில் சமூக வலைதள பக்கத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
அதேபோல் ஓடும் ரெயிலில் பயணிக்கும் போது உங்கள் செல்போன், பர்ஸ் அல்லது வேறு ஏதேனும் பொருள் கீழே விழுந்தால், பதட்டப்படாமல், நீங்கள் மேற்கொள்ள வேண்டிய முக்கியமான வழிமுறைகளை ரெயில்வே அதிகாரிகள் பரிந்துரைத்துள்ளனர்.
உங்கள் பொருள் எந்த இடத்தில் கீழே விழுந்ததோ, அந்த இடத்திற்கு மிக அருகில் உள்ள ரெயில்வே தண்டவாளத்தின் ஓரத்தில் நிறுவப்பட்டிருக்கும் கம்பத்தில் (Electrical Pole/ Kilometer Stone) மஞ்சள் மற்றும் கருப்பு வண்ணத்தில் எழுதப்பட்டிருக்கும் எண் மற்றும் குறியீட்டை (உதாரணமாக: 47/12) உடனடியாக குறித்துக் கொள்ளுங்கள். இந்த எண், உங்கள் பொருள் விழுந்த இடத்தைத் துல்லியமாகக் கண்டறிய அதிகாரிகளுக்கு உதவும் மிக முக்கிய ஆதாரம்.
நீங்கள் குறித்து வைத்த கம்ப எண்ணை உடனடியாக ரெயில்வே அதிகாரிகளுக்குத் தெரிவிக்கவும். TTE (டிக்கெட் பரிசோதகர்) அல்லது ரெயில்வே பாதுகாப்புப் படை (RPF) அதிகாரியை அணுகி, விழுந்த பொருளின் விவரம் (மாடல், நிறம்) மற்றும் நீங்கள் குறித்துக்கொண்ட கம்ப எண்ணை ஒப்படைக்கவும். அல்லது ரெயில்வே ஹெல்ப்லைன் 139 அல்லது RPF உதவி எண் 182 ஆகியவற்றுக்கு அழைத்துத் தகவல் தெரிவிக்கலாம். இது 24 மணி நேரமும் செயல்படும்.
ரெயில் அடுத்த நிலையத்தை அடைந்தவுடன், அங்குள்ள ரெயில்வே காவல் படை (RPF) அல்லது அரசு ரெயில்வே போலீஸ் (GRP) அலுவலகத்திற்குச் சென்று முறையான புகார் (FIR) பதிவு செய்ய வேண்டும். புகாரை பதிவு செய்யும்போது, ரெயில் எண், இருக்கை எண், கம்ப எண் மற்றும் உங்கள் அடையாளச் சான்றுகளைச் சமர்ப்பிக்க வேண்டியது மிகவும் அவசியம்.
பதிவு செய்யப்பட்ட புகாரின் அடிப்படையில், ரெயில்வே பாதுகாப்புப் படையினர் அந்தப் பகுதிக்குச் சென்று தேடுவார்கள். உங்கள் பொருட்கள் மீட்கப்பட்டவுடன், உரிய அடையாளச் சான்று மற்றும் உரிமையை நிரூபிக்கும் தகவல்களைச் சரிபார்த்த பிறகு, உங்களிடம் ஒப்படைக்கப்படும்.
இதுபோன்ற சூழ்நிலைகளில் சரியான நேரத்தில் புகார் தெரிவிப்பதும் துல்லியமான தகவல்கள் தருவதும் மிக முக்கியம் என்பதை ரெயில்வே வலியுறுத்துகிறது.
செல்போன் விழுந்ததற்காக அவசரமாக சங்கிலியை (Alarm Chain) இழுப்பது சட்டப்படி தண்டனைக்குரிய குற்றமாகும். இதனால் ரூ.5 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படலாம் என்பதை மறந்துவிட வேண்டாம்.
கடந்த ஜனவரி 2024 முதல் பிப்ரவரி 2025 வரை, ரெயில்வே பாதுகாப்பு படை மட்டும் மொபைல் போன்கள் உட்பட ரூ.84 கோடிக்கு மேல் மதிப்புள்ள பொருட்களை உரியவர்களிடம் கொடுத்துள்ளது. வடகிழக்கு எல்லைப்புற ரெயில்வேயின் கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் முன்னோடி திட்டத்தில், 1.15 லட்சத்திற்கும் மேற்பட்ட தொலைந்த மொபைல் போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு பயணிகளிடம் ஒப்படைக்கப்பட்டன.