பாண்டியன்னு சொன்னா அது வீ.கே பாண்டியன்! ஓடிசாவை கலக்கும் தமிழ்நாட்டு ஐ.ஏ.எஸ் அதிகாரி.

பாண்டியன்னு சொன்னா அது வீ.கே பாண்டியன்! ஓடிசாவை கலக்கும் தமிழ்நாட்டு ஐ.ஏ.எஸ் அதிகாரி.

ட்டாக் நகரத்தில் இருந்த எஸ்.சி.பி மருத்துவமனை பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது.  ஒடிசாவில் நடந்த அந்த கோர ரயில் விபத்தில் படுகாயமடைந்த பயணிகளுக்கு அங்குதான் தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வந்தது.  பாதிக்கப்பட்ட பயணிகளை நேரில் சந்தித்து குறைகளைக் கேட்பதற்காக ஓடிசா முதல்வர் அங்கு வரவிருப்பதாக செய்தி வெளியானது.

மருத்துவமனை வளாகமே காவல்துறையின் பாதுகாப்பில் கொண்டு வரப்பட்டது. தேசிய ஊடகங்கள் எந்த கேள்வியும் கேட்கக்கூடாது என்றும் மாலையில் அதிகாரப்பூர்வ அறிக்கை  வெளியிடப்படும் என்றும் பத்திரிக்கையாளர்களிடம் தெரிவிக்கப்பட்டது. ரயில் விபத்தை பார்வையிட வந்த ஒடிசா முதல்வரிடம் கேட்க முடியாத கேள்விகளை மருத்துவமனையில் கேட்கலாம் என்று காத்திருந்த ஊடகவியலாளர்களுக்கு பெருத்த ஏமாற்றமாக இருந்தது.

நான்கு அரசு வாகனங்கள் புடைசூழ ஒரு வி.ஐ.பி கார் வந்திறங்கியதும் பத்திரிக்கையாளர்கள் ஓடிப்போய் புகைப்படமெடுக்க ஆரம்பித்தார்கள். வந்தது, ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் அல்ல. அவரது தனிச் செயலாளரான வீ.கே. பாண்டியன். தமிழகத்தைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ் அதிகாரி.

அதிகாரிகள் புடைசூழ மருத்துவமனைக்குள் வந்தவர், நோயாளிகளை பார்த்து அரசியல்வாதிகளைப் போல் கும்பிட்டு நலன் விசாரித்தார். அவர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை குறித்தும் கேட்டறிந்தார்.  மருத்துவர்களோடு ஆலோசனையில் ஈடுபட்டவர், பின்னர் பயணிகளுக்காக ரத்த தானம் செய்ய முன் வந்தவர்களையும் பாராட்டினார்.  முதல்வர் வராதது குறித்து ஏமாற்றமாக இருந்தாலும் அவரது தனிச்செயலாளர் அக்கறையோடு விசாரித்தது அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியது.

வீ.கே. பாண்டியன்தான் இன்று ஒடிசாவின் டாக் ஆப் த டவுண்.  முதல்வர் நவீன் பட்நாயக்கிற்கு நெருக்கமான, அவரது உடன்பிறவா சகோதரராக ஊடகங்கள் வர்ணிக்குமளவுக்கு செல்வாக்குள்ள அதிகாரி. தமிழ்நாட்டைச் சேர்ந்த வீ.கே பாண்டியன், 2000 ஆண்டு ஐ.ஏ.எஸ் தேர்வில் தேர்ச்சி பெற்றவர். ஒடிசாவின் கஞ்சம் மாவட்டத்தில் ஆட்சியராக பணிபுரிந்து வந்த வீ.கே. பாண்டியனுக்கு 2011ல் முதல்வர் நவீன் பட்நாயக் உடன் தொடர்பு ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து முதல்வருக்கு நெருக்கமான வட்டாரத்திற்குள் கொண்டு வரப்பட்டார்.

கடந்த 12 ஆண்டுகாலமாக முதல்வரின் தனிச் செயலாளராக இருந்து வரும் வீ.கே. பாண்டியனை முக்கியமான நிகழ்ச்சிகளில் முதல்வருக்கு பின்னால் பார்க்க முடியும்.  முதல்வரின் இல்லத்தில் எடுக்கப்படும் புகைப்படங்களில் கூட பின்னணியில் வீ.கே பாண்டியன் இருப்பார் என்பதுதான்  வேடிக்கை.

கடந்த மாதம் ஒடிசாவில் உள்ள எட்டு மாவட்டங்களுக்கு சூறாவளி சுற்றுப்பயணம் செய்திருக்கும் வீ.கே. பாண்டியன், அங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சிப் பணிகளை மேற்பார்வையிட்டிருக்கிறார். பல்வேறு கூட்டங்களில் கலந்து கொண்டிருக்கிறார். அவரது கூட்டத்திற்கு ஏராளமான கட்சித் தொண்டர்கள் வரவழைக்கப்பட்டிருக்கிறார்கள். அனைத்தும் ஊடகங்களில் தனிக்கவனமெடுத்து செய்தியாக வெளியாகியிருக்கிறது.

ஹெலிகாப்டர், அரசு வாகனங்களை பயன்படுத்தி ஒரு அரசு அதிகாரி சுற்றுப்பயணம் மேற்கொள்வதோடு, முதல்வர் போல் புதிய அரசுத் திட்டங்களையும் அறிவிக்கிறார். ஒரு அரசியல்வாதி போல், அமைச்சர் போல் நடந்து கொள்வது எப்படி சரியாக இருக்க முடியும் என்று உள்ளூர் பா.ஜ.க தலைவர்கள் கேள்வியெழுப்பி வருகிறார்கள்.

வீ.கே பாண்டியனுக்கு தரப்படும் அதீத முக்கியத்துவம் குறித்து காங்கிரஸ் கட்சி தலைவர்களும் கேள்வி எழுப்புகிறார்கள். பணியில் உள்ள எந்தவொரு அரசு அதிகாரியும், அரசியல் கட்சி பிரநிதி போல் நடந்து கொள்ளக்கூடாது. முதல்வர், அமைச்சர்களுக்கு தரப்படும் முக்கியத்துவம் ஒரு அரசு அதிகாரிக்கு ஏன் தரப்படுகிறது என்று கேள்வி எழுப்புகிறார்கள்.

இன்றைய நிலையில் வீ.கே பாண்டியன் அனுமதி கிடைத்தால் மட்டுமே யாரும் முதல்வர் நவீன் பட்நாயக்கை சந்திக்க முடியும். அரசு விஷயங்கள் மட்டுமல்ல கட்சி தொடர்பான விஷயங்களையும் அவர் மூலமாகவே முதல்வர் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டிய நிலை  இருக்கிறது. ஓடிசாவின் ஆளுங்கட்சியில் நவீன் பட்நாயக் தவிர பிரபலமான முகங்கள் இல்லை. இரண்டாம் கட்டத் தலைவர்களும் இல்லை. அதுவரை அதிகாரிகளின் கொடிதான் பறக்கும் என்பதில் சந்தேகமில்லை!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com