தான்சான்யாவில் தொடங்கப்படவுள்ள சென்னை ஐஐடி வளாகம்.

தான்சான்யாவில் தொடங்கப்படவுள்ள சென்னை ஐஐடி வளாகம்.

முதல் முறையாக இந்தியாவுக்கு வெளியே தான்சானியாவில் சென்னை ஐஐடி வளாகம் தொடங்க திட்டமிட்டிருப்பதாகவும், வரும் அக்டோபர் மாதம் முதல் அங்கே படிப்புகள் தொடங்கப்படும் என  இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

இந்தியாவில் மொத்தம் 23 ஐஐடி நிறுவனங்கள் இயங்கி வருகிறது. சமீபத்தில் தேசியக் கல்வி மைய தரவரிசைக் கட்டமைப்பின் தரவரிசை பட்டியலை மத்திய அமைச்சகம் வெளியிட்டது. இதில் சென்னையில் இருக்கும் ஐஐடி முதலிடம் பிடித்தது. எனவே தென் ஆப்பிரிக்காவில் உள்ள தான்சான்யா நாட்டில் சென்னை ஐஐடியின் புதிய கிளை தொடங்கப்படும் என சென்னை ஐஐடியின் இயக்குனர் அறிவித்திருந்தார். இந்தியாவுக்கு வெளியே தொடங்கப்படும் முதல் ஐஐடி கிளை இதுவாகும். 

தான்சான்யா நாட்டில் தற்போது சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், "இது தெற்கு இந்தியாவின் பொறுப்புணர்வை பிரதிபலிக்கும் வரலாற்று சிறப்பம்சம் வாய்ந்த நடவடிக்கை" எனக் கூறியிருந்தார். இதுகுறித்து அறிக்கை வெளியிட்டிருந்த வெளியுறவுத் துறை அமைச்சகம், 

"வளர்ந்து வரும் சர்வதேச தேவைகளுக்கு ஏற்ப திறன்களை மேம்படுத்திக் கொள்ளும் நோக்கில், உலகத் தரத்திலான உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சியை ஊக்குவிக்கும் விதமாக தான்சானியாவில் சென்னை ஐஐடி வளாகத்தை தொடங்க, அந்நாட்டுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

அங்கே நடைபெற்ற நிகழ்வு ஒன்றில், அந்நாட்டு அதிபர் உசேன் அலி மற்றும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோர் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது. இது இரு நாடுகளுக்கு இடையே உள்ள நட்புறவை பிரதிபலிக்கும் வகையில் திகழும். மேலும் உயர்தரமான கல்வியை வழங்கும் இந்திய பல்கலைக்கழகங்கள் தங்களின் கிளை வளாகங்களை வெளிநாட்டில் தொடங்க ஊக்குவிக்கும் முயற்சிலேயே இது மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

இந்த வளாகத்தை உருவாக்குவதற்கான மூலதனம் மற்றும் எல்லா செலவினங்களையும் ஜான்ஜிபார் அரசே முழுமையாக ஏற்றுக் கொள்ளும். அனைத்து வேலைகளும் பூர்த்தியடைந்து அக்டோபர் மாதம் முதல் படிப்புகள் தொடங்கப்படும். இந்த வளாகத்தில் புதிய கலப்புத்துறை சார்ந்த படிப்புகளும் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதில் சேர்வதற்கு இந்திய மாணவர்களும் விண்ணப்பிக்கலாம். இந்த வளாகத்தில் படிப்பை நிறைவு செய்யும் மாணவர்களுக்கு சென்னை ஐஐடியின் சான்றிதழ் வழங்கப்படும்" என வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

இது சென்னை ஐஐடி வளாகத்திற்குக் கிடைத்த மிகப்பெரிய பெருமையாக அனைவரும் கருதுகின்றனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com