மாநிலங்களவையில் கேள்வி கேட்காதவர்கள் பட்டியலில் இளையராஜா!

மாநிலங்களவையில் கேள்வி கேட்காதவர்கள் பட்டியலில் இளையராஜா!

அடுத்த மாதம் இதே வாரத்தில் புதிய நாடாளுமன்ற கூட்டத்தொடர் ஆரம்பமாகிவிடும். புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை பார்வையிடுவதற்காக அனைத்து உறுப்பினர்களும் வரப்போவதால் வருகைப் பதிவேட்டில் சிக்கல் இருக்கப்போவதில்லை. ஆனால், எத்தனை பேர் விவாதங்களில் கலந்து கொண்டு கேள்வி எழுப்பப் போகிறார்கள் என்கிற கேள்வி எழுகிறது.

கடந்த ஒராண்டில் சிறப்பாக செயல்பட்டுள்ள எம்.பிக்கள் பற்றிய ஆய்வறிக்கையை பிஸினெஸ் லைன் பத்திரிக்கை வெளியிட்டிருக்கிறது. கூடவே எந்த விவாதங்களிலும் பங்கேற்காமல், எந்தவொரு கேள்வியையும் எழுப்பாத எம்.பிக்கள் பற்றிய அறிக்கையையும் தந்திருக்கிறது.

அதில் தமிழ்நாட்டிலிருந்து இளையராஜாவும், அ.தி.மு.கவைச் சேர்ந்த தர்மரும் இடம் பெற்றிருக்கிறார்கள். இவர்கள் இருவரும் இதுவரை ஒரு கேள்வி கூட மாநிலங்களவை கூட்டத்தில் எழுப்பியதில்லையாம்.

தற்போதைய நிலையில் 539 மக்களவை உறுப்பினர்களும், 238 மாநிலங்களவை உறுப்பினர்களும் பொறுப்பில் இருக்கிறார்கள். ஒவ்வொருவரும் கேள்வி நேரங்களில் பத்து கேள்விகளை எழுப்ப முடியும். இது வரை 7 மாநிலங்களவை உறுப்பினர்களும், 6 மக்களவை உறுப்பினர்களும் எந்த விவாதத்திலும் பங்கேற்கவில்லை. எந்த மசோதாவையும் ஆதரித்தோ, எதிர்த்தோ பேசியதில்லை என்றும் தெரிய வந்திருக்கிறது.

இதில் மாநிலங்களவை உறுப்பினர்களில் இளையராஜா, அ.தி.மு.கவின் தர்மர், முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், ஜார்கண்ட் மாநில முதல்வராக இருந்த சிபோ சோரன் உள்ளிட்டவர்களும் மக்களைவை உறுப்பினர்களான ஹர்ஷ் வர்த்தன், சதானந்தா கௌடா, சத்ருக்கன் சின்ஹா போன்றவர்களும் விவாதத்தில் பங்கேற்பதில்லை என்பது தெரிய வந்திருக்கிறது.

கேள்வியின் நாயகன் என்றால் பா.ஜ.கவை சேர்ந்த சுகந்தா மஜீம்தார் என்று சொல்லவேண்டும். மக்களவையை பொறுத்தவரை நிறைய விவாதங்களில் பங்கேற்று 560 கேள்விகளை எழுப்பியிருக்கிறார். அதுபோல் பெண்களில் தேசியவாத கட்சி ஷரத்பவாரின் மகளால் சுப்ரியா சுரேவும் ஏறக்குறைய 500க்கும் மேற்பட்ட கேள்விகளை எழுப்பியிருக்கிறார்.

மாநிலங்களவையை பொறுத்த வரை பொறுத்தவரை ஒய்.எஸ்.ஆர் கட்சியைச் சேர்ந்த பரிமல் மத்வானியும் சிவசேனா எம்.பியான சஞ்சய் ராவுத்தும் ஆயிரத்து ஐநூறுக்கும் மேற்பட்ட கேள்விகளை எழுப்பியருக்கிறார்கள்.

மாநிலங்களவை உறுப்பினராக இருந்து இதுவரை ஒரு கேள்வி கூட கேட்காதவர்கள் பட்டியலில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு இடமுண்டு. விவாதங்களில் பங்கேற்றாலும் கேள்வி நேரத்தில் எந்தவொரு கேள்வியையும் எழுப்பியதில்லையாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com