‘என்ன வேணா நடக்கட்டும் நான் சந்தோசமா இருப்பேன்’ பாணியில் ஓபிஎஸ்!

‘என்ன வேணா நடக்கட்டும் நான் சந்தோசமா இருப்பேன்’ பாணியில் ஓபிஎஸ்!

திமுகவிலிருந்து ஓ.பன்னீர்செல்வம் நீக்கப்பட்டு சுமார் எட்டு மாதங்கள் ஆகி விட்டன. ஆனால், அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் நான்தான் என்று கூறிக்கொண்டு அக்கட்சியின் நிர்வாகிகளை நியமித்து வருகிறார் ஓபிஎஸ். அதிமுகவில் ஒற்றைத் தலைமை பிரச்னை எழுந்து ஏறக்குறைய ஒன்பது மாதங்கள் ஆகிவிட்ட நிலையில், அந்தக் கட்சியின் பொதுக்குழு கூட்டம் இரண்டு முறை நடத்தப்பட்டுவிட்டது. பொதுக்குழு தொடர்பான வழக்குகள் உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் என அடுத்தடுத்து சென்றன. இந்த வழக்குகளின் தீர்ப்பு இபிஎஸ்க்கு சாதகமாகச் சென்ற நிலையில், அதனை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பு தொடர்ந்துள்ள வழக்கு நாளை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது.

அதிமுகவின் பொதுச்செயலாளர் பதவிக்கான தேர்தல் வரும் 26ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டு, அதற்கான வேட்பு மனு தாக்கலும் நிறைவடைந்துள்ளது. எடப்பாடி பழனிசாமி சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். பொதுச் செயலாளர் தேர்தலை எதிர்த்து ஓபிஎஸ் ஆதரவாளர்கள் மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம், ஜேசிடி பிரபாகர் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளனர். இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் அவசர வழக்காக நேற்று முன்தினம் விசாரிக்கப்பட்டது. விசாரணையின் முடிவில் அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலை நடத்த அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால், பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிரான வழக்கில் தீர்ப்பு வரும் வரை தேர்தல் முடிவுகளை வெளியிட அக்கட்சிக்குத் தடை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஒருபக்கம் நீதிமன்றங்களில் எடப்பாடி பழனிசாமிக்கு சாதகமான தீர்ப்புகள் தொடர்ச்சியாக வந்துகொண்டிருக்க, கட்சி ஏறக்குறைய அவரது கைக்குச் சென்றுவிட்ட சூழலில், ‘என்ன வேணா நடக்கட்டும் நான் யோசிக்கவே மாட்டேன்’ என்பது போல, அதிமுகவுக்கு புதிய நிர்வாகிகளை நியமித்து வருகிறார் ஓ.பன்னீர்செல்வம். அதன்படி, கரூர் மேற்கு மாவட்ட செயலாளராக ரமேஷ் என்பவரையும், கரூர் மேற்கு மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளராக வி.சி.இளங்கோவையும், மாவட்ட புரட்சித் தலைவி அம்மா பேரவைச் செயலாளராக செந்தில் குமாரையும் நியமித்து ஓபிஎஸ் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

‘கட்சியில் இருந்து ஓபிஎஸ்ஸை நீக்கி எட்டு மாதங்கள் ஆகிவிட்டது. கட்சியின் பொதுச்செயலாளர் வழக்கு சம்பந்தமாக வழக்குத் தொடர அவருக்கு உரிமையே இல்லை’ என இபிஎஸ் தரப்பு கூறி வருகிறது. ஆனாலும், புதிய நிர்வாகிகளை ஓபிஎஸ் நியமித்து வருவது அந்தக் கட்சியினரிடையே குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறது. தொடர்ந்து நீதிமன்றங்களில் தோல்வியையே சந்தித்து வரும் ஓபிஎஸ்சுக்கு நாளை வெளியாகும் பொதுக்குழு தீர்மான வழக்கு விசாரணை சாதகமாக இருக்குமா அல்லது வழக்கம்போல் பாதகமாக இருக்குமா என்பது அனைவரின் அதிகபட்ச எதிர்பார்ப்பாக உள்ளது.

இந்த வழக்கு விசாரணை ஓபிஎஸ்ஸுக்கு சாதகமாக வந்தால், அதாவது பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லாது என்று தீர்ப்பு வந்தால், ஓ.பன்னீர்செல்வம் கட்சியில் இருந்து நீக்கப்பட்டதும் செல்லாது என்றாகி விடும். அதனால் ஓபிஎஸ் அணியும் மீண்டும் பலம் பெறும். மாறாக, ஓபிஎஸ்சுக்கு எதிராக வந்தால் இனி அதிமுகவில் அவருக்கு எதிர்காலமே இல்லை என்றாகி விடும். அதிமுகாவில் ஓபிஎஸ்ஸின் நிலை என்னவென்பதை நாளை வரை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com