‘அறுவை சிகிச்சைக்கு செல்கிறேன்… இனி காத்திருக்க மாட்டேன்’ புற்றுநோய் பாதித்த நவ்ஜோத் சித்து மனைவி உருக்கமான பதிவு!

‘அறுவை சிகிச்சைக்கு செல்கிறேன்… இனி காத்திருக்க மாட்டேன்’ புற்றுநோய் பாதித்த நவ்ஜோத் சித்து மனைவி உருக்கமான பதிவு!
Published on

சென்ற 1988ம் ஆண்டு, நவ்ஜோத் சிங் சித்து மற்றும் அவரது நண்பர் ரூபீந்தர் சாந்து இருவரும் பாட்டியாலாவைச் சேர்ந்த குர்மான் சிங் என்பவருடன் கார் பார்க்கிங் விஷயத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வாக்குவாதம் கைமீறிப்போய் சித்து, குர்மான் சிங்கை காரிலிருந்து வெளியே தள்ளி தாக்கியதால் குர்மான் சிங் படுகாயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உயிரிழந்தார். சிறிய விவாதம் ஒன்று கைகலப்பாக மாறி இறுதியில் உயிர்ப் பலியில் முடிந்தது. இது தொடர்பாக காவல் துறை நவ்ஜோத் சிங் சித்து மற்றும் ரூபீந்தர் சாந்து இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தது. அதைத் தொடர்ந்து தொடரப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்றம் சித்துவுக்கு ஓராண்டு கடுங்காவல் தண்டனை விதித்தது. இதனால் அவர் தற்போது சிறையில் உள்ளார்.

பஞ்சாப் மாநில முன்னாள் காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்து என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், நவ்ஜோத் சிங் சித்துவின் மனைவி நவ்ஜோத் கவுருக்கு புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து, சிறையில் இருக்கும் தனது கணவர் சித்துவுக்கு தனது நோய் குறித்த உருக்கமான பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.

ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்யப்பட்ட அந்த செய்தியில், "ஒவ்வொரு நாளும் உங்களுக்காக நான் காத்திருப்பது உங்களை விட அதிகமாக என்னைத் துன்பப்பட வைக்கிறது. வழக்கம் போல் உங்கள் வலியைப் போக்கும் முயற்சியாக இதைப் பகிர்ந்துகொள்கிறேன். இது மோசமானது என்று தெரியும். மீண்டும் மீண்டும் நீதி மறுக்கப்படுவதைக் கண்டு உங்களுக்காகக் காத்திருந்தேன். உண்மை மிகவும் சக்தி வாய்ந்தது, ஆனால், அது உங்களை மீண்டும் மீண்டும் சோதிக்கும். மன்னிக்கவும், உங்களுக்காக காத்திருக்க முடியாது. ஏனெனில், எனக்குப் புற்றுநோய் இருப்பது உறுதியாகி உள்ளது. இன்று நான் அறுவை சிகிச்சைக்குச் செல்கிறேன். யாரையும் குறை சொல்ல வேண்டியதில்லை. ஏனென்றால், இது கடவுளின் திட்டம். அது சரியானதாகத்தான் இருக்கும்" என்று உருக்கமாக அந்தப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

நவ்ஜோத் கவுருக்கு புற்றுநோய் இரண்டாம் கட்ட நிலையில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் அவர் உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com