பனை எண்ணெய்க்கு முக்கியத்துவம்; திருச்சியில் தீவிரமடையும் சாகுபடி!

பனை எண்ணெய்க்கு முக்கியத்துவம்; திருச்சியில் தீவிரமடையும் சாகுபடி!

ந்தியாவில் எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்கும் பொருட்டு பனை எண்ணெய் உற்பத்திக்கு இந்திய அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது. இதற்காக தமிழ்நாட்டில் திருச்சி மாவட்டம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்தியா வெளிநாடுகளில் இருந்து 55 சதவீதம் பல்வேறு எண்ணெய் வகைகளை இறக்குமதி செய்து வருகிறது. குறிப்பாக ரஷ்யாவில் இருந்து 40 சதவீதம் வரை பாமாயில் இறக்குமதி செய்யப்படுகிறது. தற்போது ஏற்பட்டுள்ள போர் சூழல் காரணமாக ரஷ்யாவில் உற்பத்தி பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. அதனால் இந்தியாவில் எண்ணெய்யின் விலை மிக அதிக அளவில் உயர்ந்து வருகிறது.

மேலும், நாட்டின் பாமாயிலின் தேவையும் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்துக் கொண்டு உள்ளது. பாமாயில் பயன்படுத்துவதால் உடலுக்கு பிரச்னைகள் ஏற்படும் என்றாலும், குறைந்த விலையில் கிடைப்பதால் மக்கள் பாமாயிலையே அதிகம் பயன்படுத்துகின்றனர். கடந்த மே மாதத்தில் மட்டும் 4 லட்சத்து 41 ஆயிரம் டன் பாமாயில் இறக்குமதி செய்யப்பட்டது. குறிப்பாக, ரஷ்யா, இந்தோனேஷியா, மலேசியா, தாய்லாந்து ஆகிய நாடுகளில் இருந்து அதிக அளவில் இறக்குமதி செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

இதைத் தொடர்ந்து உள்நாட்டு எண்ணெய் உற்பத்திக்கு இந்திய அரசு அதிக முக்கியத்துவம் அளிக்கத் தொடங்கியது. இதற்காக தேசிய சமையல் எண்ணெய் இயக்கம் தொடங்கப்பட்டிருக்கிறது. எண்ணெய் பனையை அதிக அளவில் சாகுபடி செய்ய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. எண்ணெய் பனை உற்பத்தியை 10 லட்சம் ஹெக்டேராக உயர்த்தவும், 2025 - 26ம் ஆண்டில் கச்சா பாமாயில் உற்பத்தியை 11 லட்சத்து 20 ஆயிரம் டன்னாக உயர்த்திடவும் மத்திய அரசு அரசு 2021ம் ஆண்டு முடிவு செய்தது.

அதோடு, தேசிய சமையல் எண்ணெய் இயக்கத்தின் கீழ் எண்ணெய் பனை சாகுபடியை அதிகரிக்க மாநில அரசுகள் மற்றும் எண்ணெய் பதப்படுத்தும் நிறுவனங்கள் இணைந்து ஜூலை மாதம் 25ந் தேதி முதல் எண்ணெய் பனங்கன்று நடவு இயக்கம் தொடங்கப்பட்டது. 

எண்ணெய் பனை சாகுபடிக்காக ஆந்திரா, தெலங்கானா, ஓடிசா, திரிபுரா, கோவா, அசாம், மிசோரம், அருணாசல பிரதேசம், கர்நாடகா மற்றும் தமிழ்நாட்டின் திருச்சி உள்ளிட்ட டெல்டா பகுதிகள் தேர்வு செய்யப்பட்டு எண்ணெய் பனை சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.

இதற்காக தமிழகத்தில் தோட்டக் கலைதுறை மூலமாக மானியத்தில் பனை நாற்று உள்ளிட்ட அனைத்தும் வழங்கப்படுகின்றன. தமிழ்நாட்டில் இதற்கான கொள்முதல் மற்றும் தொழில்நுட்ப ஆலோசனைகளை கோத்ரெஜ் அக்ரோ வெட் நிறுவனம் வழங்கி வருகிறது. இதனால் திருச்சியில் லால்குடி உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் பனை எண்ணெய் சாகுபடிக்கு அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com