பிரதமர் மோடி – அமெரிக்க அதிபர் ஜோ பைடன் சந்திப்பில் முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து!

பிரதமர் மோடி – அமெரிக்க அதிபர் ஜோ பைடன் சந்திப்பில் முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து!

பிரதமர் நரேந்திர மோடி வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடனை சந்தித்துப் பேசினார். அப்போது அமெரிக்காவின் ஜி.இ. ஏரோ ஸ்பேஸ் நிறுவனத்தின் போர் விமான என்ஜின்களை இந்தியாவில் தயாரிப்பது, அதிநவீன ஆளில்லா விமானங்களை வாங்குவது உள்ளிட்ட முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன.

அமெரிக்காவுக்கு மூன்று நாள் பயணமாக சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, கடந்த 21 ஆம் தேதி நியூயார்க் நகரில் உள்ள ஐ.நா. தலைமையகத்தில் நடந்த யோகா தின விழாவில் பங்கேற்றார். பின்னர் வாஷிங்டன் சென்று வெள்ளை மாளிகையில் அதிபர் ஜோ பைடனை சந்தித்தார். வெள்ளை மாளிகை சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

பிரதமர் மோடியை வரவேற்று பேசிய அதிபர் ஜோ பைடன், இன்றைய சூழலில் இந்தியாவும், அமெரிக்காவும் இணைந்து பணியாற்றுவது காலத்தின் கட்டாயம், இரு நாடுகளும் இணைந்து எடுக்கும் முடிவுகள் எதிர்காலத்தில் நல்ல பலனைத் தரும் என்று எதிர்பார்பதாகவும் கூறினார்.

பிரதமர் மோடி பேசும்போது, சாதாரண குடிமகனாக அமெரிக்கா வந்துள்ளேன். பிரதமரான பிறகும் அமெரிக்காவுக்கு வந்துள்ளேன். ஆனால், இந்த முறை வெள்ளை மாளிகையில் எனக்கு அளிக்கப்பட்ட வரவேற்பு 140 கோடி இந்திய மக்களுக்கு அளிக்கப்பட்ட வரவேற்பாகும் என்று குறிப்பிட்டார்.

இதைத் தொடர்ந்து இரு நாட்டு தலைவர்களும் தனியாக ஆலோசனை நடத்தினர். பின்னர் மூத்த அதிகாரிகளுடன் பேச்சு நடத்தினர். அப்போது அமெரிக்காவின் ஏரோ ஸ்பேஸ் நிறுவனத்தின் போர் விமான என்ஜின்களை இந்தியாவில் தயாரிப்பது, 31 ஆளில்லா விமானங்களை (ட்ரோன்) வாங்குவது தொடர்பான ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டது. பின்னர் இரு தலைவர்களும் கூட்டாக பேட்டியளித்தனர்.

இதுவரை இந்தியாவில் தயாரிக்கப்படும் தேஜஸ் போர் விமானங்களுக்கான என்ஜின்கள் அமெரிக்காவில் தயாரிக்கப்பட்டு அங்கிருந்து இந்தியாவுக்கு அனுப்பிவைக்கப்பட்டன. இனி அவை இந்தியாவிலேயே தயாரிக்கப்பட ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இனி இந்த என்ஜின்களை ஹெச்.ஏ.எல். நிறுவனமே தயாரிக்கும்.

அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையம் நட்பு நாடுகளுடன் இணைந்து ஆர்டிமிஸ் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இதில் 10 ஐரோப்பிய நாடுகள், 7 ஆசிய நாடுகள், 3 வட அமெரிக்க நாடுகள், 2 தென்னமெரிக்க நாடுகள் உள்பட மொத்தம் 25 நாடுகள் நாசாவுடன் ஒப்பந்தம் செய்துள்ளன.

இந்த வரிசையில் பிரதமரின் அமெரிக்க பயணத்தின்போது இந்தியாவின் இஸ்ரோ மற்றும் அமெரிக்காவின் நாஸா விண்வெளி ஆய்வு மையம் இடையே ஆர்டிமிஸ் ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இதன்கீழ் நிலவுக்கு மனிதர்களை அனுப்புவது தொடர்பான ஆராய்ச்சியில் இஸ்ரோவும், நாசாவும் இணைந்து செயல்படும். ஆர்டிமிஸ் திட்டத்தின் அடுத்த கட்டமாக செவ்வாய் கிரகத்துக்கு மனிதர்களை அனுப்பும் ஆராய்ச்சியும் மேற்கொள்ளப்படும் என்று நாசா வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com