இம்ரான் கானை உயர்நீதிமன்ற வளாகத்தில் வைத்து அதிரடி கைது!

இம்ரான் கான்
இம்ரான் கான்

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் இஸ்லாமாபாத் உயர்நீதிமன்ற வளாகத்தில் வைத்து அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். ராணுவத்தினரை இழிவாக விமர்சித்த வழக்கிற்காக அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக சிறப்புப் படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இஸ்லாமாபாத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இம்ரான் கான் மீது ஊழல், பண மோசடி, வன்முறையை துண்டுதல் உள்ளிட்ட பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. இதில் ஊழல் வழக்கின் விசாரணைக்கு ஆஜராவதற்காக இன்று நீதிமன்றத்திற்கு வந்துள்ளார்.

இம்ரான் கான் கைதின் போது அதனை தடுக்க முயன்ற வழக்கறிஞர்கள் கடுமையாக தாக்கப்பட்டதாகவும், இதனை தொடர்ந்து இம்ரான் கான் கைதுக்கு எதிராக அவரது கட்சியினர் பாகிஸ்தானின் பல பகுதிகளில் போராட்டங்களை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. மேலும் சமூக வலைதளங்களிலும் இம்ரான் கான் கைதுக்கு எதிராக கண்டனம் தெரிவித்து பலர் பதிவிடப்பட்டும் வருகின்றனர்.

பாகிஸ்தானில் கடந்த 2022 ஆம் ஆண்டு இம்ரான் கான் தலைமையிலான அரசு கவிழ்ந்த பிறகு , அவருக்கு எதிராக பல்வேறு விவகாரங்களில், 100க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதில் குறிப்பாக பரிசு பொருட்கள் முறைகேடு வழக்கில் கடந்த மாதம் இம்ரான் கான் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்து வந்ததால் அவருக்கு எதிராக ஜாமீனில் வெளியில் வர முடியாத படி கைது வாரண்டு பிறப்பிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து இம்ரான் கானை கைது செய்வதற்காக லாகூரில் உள்ள அவரது வீட்டுக்கு போலீசார் சென்றபோது, அங்கு போலீசாருக்கும், தொண்டர்களுக்கும் இடையே ஏற்பட்ட கடும் மோதல் காரணமாக சட்ட ஒழுங்கு பிரச்சனை வந்துவிடக்கூடாது என நீதிமன்றம் கைது உத்தரவை நிறுத்தி வைக்குமாறு உத்தரவிட்டது. அதன் பின்னர் லாகூர் நீதிமன்றத்தில் ஆஜரான இம்ரான் கான் 8 பயங்கரவாத வழக்குகள் உட்பட அடுத்தடுத்த நாளே பல்வேறு வழக்குகளில் ஜாமீன் பெற்றார்.

மேலும், இம்ரான் கானுக்கு எதிராக தொடுக்கப்பட்ட மற்றொரு வழக்கான பாகிஸ்தான் முஸ்லிம் லீக் நவாஸ் எம்.பி மொஹ்சின் ஷாநவாஸ் ரஞ்சாவால் தொடப்பட்ட கொலை முயற்சி. இந்த வழக்கிலும் கடந்த வாரம், இம்ரான் கான் காலில் ஏற்பட்ட வீக்கத்தின் காரணமாக நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்தார்.

இதனால் அதிருப்தி அடைந்த நீதிபதிகள் ” வழக்கு விசாரணையின் போது இம்ரான் கான் கண்டிப்பாக நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும். இல்லை எனில் அவரது இடைக்கால ஜாமினை ரத்து செய்ய நேரிடும் ” என கடுமையாக பேசியிருந்ததால், இம்ரான் கான் தனக்கு காலில் வலி மற்றும் வீக்கம் இருந்தாலும் வேதனையையும், வலியையும் பொருட்படுத்தாமல் நிச்சயம் இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றத்தின் விசாரணைக்கு நான் வருவேன் என கூறியிருந்தார்.

இந்த நிலையில், இன்று இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றத்துக்கு விசாரணைக்காக வந்த இம்ரான் கானை பாகிஸ்தானின் சிறப்புப் படை பிரிவு அதிகாரிகள் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com