
இது தொடர்பாக, பாதுகாப்புத் துறை அமைச்சர் கவாஜா ஆசிஃப், பத்திரிகையாளர் மெஹ்தி ஹசன் உடனான நேர்காணலில், தனது முரண்பட்ட கருத்துகளால் தர்மசங்கடமான நிலைக்குத் தள்ளப்பட்டார்.
இம்ரான் கான் தனது எக்ஸ் கணக்கை அடியாலா சிறைக்குள்ளே இருந்து இயக்குகிறார் என்று அமைச்சர் கவாஜா ஆசிஃப் முதலில் குற்றம் சாட்டினார்.
உடனே குறுக்கிட்ட மெஹ்தி ஹசன், "சில நாட்களுக்கு முன், இம்ரான் கானின் கணக்கை இந்தியா தான் கட்டுப்படுத்துகிறது என்று நீங்கள் சொன்னீர்களே... அப்படியானால், இப்போது சிறையில் உள்ள இம்ரானா? அல்லது இந்தியாவா? யார் இயக்குகிறார்கள்?" என்று கேள்வியால் துளைத்தார்.
பதிலளிக்கத் திணறிய அமைச்சர் ஆசிஃப், "ஒன்று அவர் சிறையில் இருந்து இயக்க வேண்டும் அல்லது சிறையில் அந்த கணக்கை இயக்குவது யார் என்பதை அவர் குறைந்தபட்சம் அடையாளம் காட்ட வேண்டும்," என்று தடுமாறினார்.
தனது குற்றச்சாட்டுகளுக்கான ஆதாரங்களைக் காட்டும்படி ஹசன் வற்புறுத்தியபோது, "உளவுத்துறை மூலங்களை" (Intelligence Sources) மேற்கோள் காட்டிய அமைச்சர், அதற்கான ஆதாரங்களை வெளிப்படையாகச் சொல்ல முடியாது என்று மறுத்துவிட்டார்.
ஊழல் வழக்கில் மூன்று ஆண்டுகள் தண்டனை பெற்று, ஆகஸ்ட் 2023 முதல் சிறையில் இருக்கும் இம்ரான் கானை அரசாங்கம் கையாளும் விதம் குறித்தும் ஹசன் கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்த ஆசிஃப், இம்ரான் கான் "தனது கைகள் சுத்தமானவை என்று நிரூபிக்க வேண்டும்" என்று கூறி கேள்வியைத் தவிர்த்தார்.
அவர் அமெரிக்காவுடனான உறவு குறித்துப் பேசியபோது, "அமெரிக்காவுடன் நெருங்குவதால் சீனாவுடனான உறவு பாதிக்கப்படுமா என்று நாங்கள் கவலைப்படவில்லை.
ஏனெனில் சீனாவுடன் எங்கள் உறவு காலத்தால் நிரூபிக்கப்பட்ட ஒன்று" என்று குறிப்பிட்டார்.
ஒட்டுமொத்த நேர்காணலும், இம்ரான் கானின் டிஜிட்டல் செயல்பாடு குறித்த பாகிஸ்தான் அரசின் முரண்பட்ட நிலைப்பாட்டை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்துள்ளது.