ஈரோடு இடைத்தேர்தலில் மும்முனைப் போட்டியா? நான்குமுனைப் போட்டியா?

ஈரோடு இடைத்தேர்தலில் மும்முனைப் போட்டியா? நான்குமுனைப் போட்டியா?

ம்மாதம் 27ம் தேதி நடைபெற உள்ள ஈரோடு இடைத்தேர்தலில் தங்களது முழு பலத்தையும் காட்டி வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற முனைப்பில் பல்வேறு கட்சிகள் செயல்பட்டு வருகின்றன. பொதுவாக, தமிழகத் தேர்தல் என்றாலே மாநிலக் கட்சிகளாக திமுக மற்றும் அதிமுகவே பிரதான கட்சிகளாகக் களம் காணும். நடந்து முடிந்த சட்டமன்ற பொதுத் தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு திமுக சந்திக்கும் முதல் தேர்தல் இதுவென்பதால், இன்னும் மக்கள் தங்கள் பக்கம்தான் உள்ளனர் என்பதை நிரூபிக்க இந்த இடைத் தேர்தலில் வெற்றி பெற்றே ஆக வேண்டும் நிலையில் உள்ளது. அதேசமயம், ஆளும் திமுக அரசின் மீது மக்கள் நம்பிக்கை குறைந்துவிட்டது என்பதை நிரூபிக்க அதிமுகவும் இந்த இடைத் தேர்தலில் வெற்றி பெற பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது.

சென்ற சில நாட்களில் எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக அறிவிக்கப்பட்டது, ஓபிஎஸ் தனது வேட்பாளரை வாபஸ் வாங்கச் செய்தது, இரட்டை இலை சின்னத்தைப் பெற்றது, பாஜகவும் தேர்தலில் போட்டியிடும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அக்கட்சி அதிமுகவுக்கு ஆதரவு தருவதாக அறிவித்ததோடு, அக்கட்சிக்காக பிரச்சாரமும் செய்வது, டிடிவி தினகரன் தனது கட்சி வேட்பாளரை வாபஸ் வாங்கச் செய்தது என அனைத்தும் அதிமுகவுக்கு பெரும் வெற்றி நம்பிக்கையைக் கொடுத்திருந்தது. ஆனாலும், தங்களது கூட்டணியில் இருந்த தேமுதிக இந்த இடைத்தேர்தலில் பிரிந்து சென்று, போட்டியில் கலந்து கொள்வது, திமுகவுக்கு கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் ஆதரவு போன்றவை அதிமுகவை சற்றே கலங்கத்தான் செய்துள்ளது. அதனால், இந்தத் தேர்தலில் ஐந்து முனைப் போட்டி அல்லது ஆறு முனைப் போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், காங்கிரஸ், அதிமுக, நாம் தமிழர் கட்சி, தேமுதிக என நான்கு முனைப் போட்டி மட்டுமே உள்ளது.

கமல்ஹாசனின் திடீர் திமுக ஆதரவால் அதிருப்தியில் சில மய்ய நிர்வாகிகள் இருப்பதாகவும், அவர்களை தம் கட்சிக்கு ஆதரவாகக் கொண்டு வரும்படியும் ஈரோடு மாவட்ட நிர்வாகிகளுக்கு ஒரு அசைன்மெண்டை செங்கோட்டையன் கொடுத்திருப்பதாகவும் கூறப்படுகிறது. ‘நீங்கள் ஒன்று செய்தால் நாங்கள் ஒன்று செய்வோம்’ என்ற பாணியில் திமுகவும் தங்கள் பங்குக்கு தேமுதிகவை வாபஸ் பெற வைத்து தங்களுக்கு ஆதரவு தரும்படியான முயற்சிகளை மேற்கொண்டிருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இதற்காக பிரேமலதாவை வைத்து சுதீஷிடம் அக்கட்சி பேசி வருவதாகக் கூறப்படுகிறது.

அடுத்து வரும் பாராளுமன்ற தேர்தலுக்கு மிகப்பெரிய திட்டங்களுடன் தேமுதிக உள்ளதாகக் கூறப்படும் நிலையில், அக்கட்சி அதிமுகவை வெளிப்படையாகவே விமர்சித்து வருகிறது. இதுபோன்ற விஷயங்களே திமுகவுடன் கூட்டணி வைக்க தேமுதிக தயாராகி வருவதற்கான அடையாளமாகக் காணப்படுகிறது. ஆகவே, இந்த இடைத்தேர்தலில் தேமுதிக போட்டியிட்டு அதிமுக ஓட்டு வங்கியைக் கலைக்குமா? அல்லது வாபஸ் வாங்கிக் கொண்டு திமுகவை ஆதரிக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஆக, இந்த இடைத்தேர்தல் நான்கு முனைப் போட்டியாக இருக்குமா? அல்லது மும்முனைப் போட்டியாக முடியுமா? என்பது அனைவரின் கேள்வியாக உள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com