இமாச்சலப் பிரதேசத்தில் கடந்த நவம்பர் 12-ம் தேதி தேர்தல் நடைபெற்றது. இன்றைக்கு தற்போது வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. வாக்கு எண்ணிக்கை நடைபெற்றுவரும் தற்போதைய சூழலில், இமாச்சலப் பிரதேசத்தில் பா.ஜ.க-வைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு காங்கிரஸ் கட்சி முதலிடத்தைப் பிடித்திருக்கிறது.
இமாச்சலப் பிரதேசத்தைப் பொறுத்தவரையில், அங்கு கடந்த முப்பது ஆண்டுகளுக்கு மேலாக ஒவ்வொரு தேர்தலிலும் காங்கிரஸும் பா.ஜ.க-வும் மாறி மாறி ஆட்சியைப் பிடித்திருக்கின்றன. மொத்தம் 68 தொகுதிகளைக் கொண்ட அந்த மாநிலத்தில், 2017-ல் 44 இடங்களைப் பிடித்து ஜெய்ராம் தாகூர் தலைமையில் பா.ஜ.க ஆட்சியமைத்தது.
இமாச்சலப் பிரதேசத்தில் மோடி, அமித் ஷா உள்ளிட்ட பெரிய தலைவர்கள் தீவிரமாகப் பிரசாரம் செய்தும்கூட, அங்கு பா.ஜ.க பின்னடைவைச் சந்திப்பதற்கு, அங்கு அரசுக்கு எதிராக நிலவிய மனநிலை ஒரு முக்கியக் காரணம் என்று சொல்லப்படுகிறது
இமாச்சலப் பிரதேசம் மொத்தம் 68 சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்டது. இமாச்சலப் பிரதேசத்தில் 35 இடங்களைப் பிடித்தாலே ஆட்சியைப் பிடித்துவிடலாம் என்கிற நிலையில், தற்போது 37 இடங்களில் காங்கிரஸ் கட்சி முன்னிலை வகிக்கிறது. பா.ஜ.க 28 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. இந்த நிலையே தொடர்ந்தால், அந்த மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சியைப் பிடிக்கும்.
நாடளுமன்றத் தேர்தலில் ஆட்சியைத் தக்க வைக்க வேண்டுமென்றால், குஜராத்திலும் இமாச்சலப் பிரதேசத்திலும் வெற்றி பெற்றாக வேண்டும் என்பதில் பா.ஜ.க தலைவர்கள் கவனமாக இருந்தனர். ஆனால், இமாச்சலப்பிரதேசத்தில் பா.ஜ.க மேற்கொண்ட கடைசி நேர முயற்சிகள் பலனளிக்கவில்லை என்கிறார்கள் அரசியல் ஆர்வலர்கள். தற்போதைய நிலவரப்படி காங்கிரஸ் அதிக இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது.