'தேசிய வாசிப்பு தினத்தைப்’ போற்றும் வகையில் சயீஃப் அலிகானின் புத்தகக் காதல் குறித்த பகிர்வு!

'தேசிய வாசிப்பு தினத்தைப்’ போற்றும் வகையில் சயீஃப் அலிகானின் புத்தகக் காதல் குறித்த பகிர்வு!

இன்று தேசிய வாசிப்பு தினம்!

உங்களுக்கு புத்தகம் வாசிக்கும் பழக்கம் உண்டா? குறைந்த  பட்சம் தினசரி செய்தித்தாளாவாது தொடர்ந்து விடாமல் வாசித்து வருகிறீர்களா?

ஆம், என்றால் உங்கள் தோளில் நீங்களே ஒரு ஷொட்டு கொடுத்துக் கொள்ளுங்கள். அது உங்கள் வாசிப்பு உங்களுக்கு அளித்திருக்கும் பெருமித உணர்வுக்கான பாராட்டு. அதை தேசிய வாசிப்பு தினமான இன்று நமக்கு நாமே கொடுத்துக் கொண்டால் தவறில்லை.

ஏனெனில், தீவிரமான ஆர்வத்துடனான ஆழ்ந்த வாசிப்பு பழக்கம் என்பது இன்றைய தலைமுறையினரிடையே வழக்கொழிந்து போய்க்கொண்டிருக்கிறதோ என்றொரு ஐயம் நம்மில் பலருக்கும் இருக்கிறது.

இப்படியான நேரங்களில் பிரபலங்கள் யாரேனும் தங்களுடைய புத்தக வாசிப்பு ஆர்வம் பற்றிப் பகிர்ந்து கொண்டால் ஆச்சர்யமாகத்தான் இருக்கிறது. அவர்களுக்கு இருக்கும் பணிச்சுமையில் புத்தக வாசிப்புக்கும் நேரம் ஒதுக்க முடிவதென்றால் நிச்சயம் அது பாராட்டத்தக்க விஷயமே!

தேசிய புத்தக வாசிப்பு தினமான இன்று, நாம் சமீபத்தில் வெளியான ‘ஆதிபுருஷ்’ திரைப்படத்தில் ராவணனாக நடித்திருந்தாரே சயீஃப் அலிகான் அவரது வாசிப்பு ஆர்வம் குறித்து தெரிந்து கொள்வோமா!

சயீஃப் அலிகானின் தாய்வழி மரபு தாஹூர் வம்சத்தைச் சார்ந்தது. தந்தை வழி நவாம் பட்டோடி வம்சம் இரண்டு பக்க உறவுமுறைகளிலும் தாத்தாக்கள் மிகச்சிறந்த புத்தக ஆர்வலர்களாக இருந்திருக்கிறார்கள். அந்த ஆர்வம்  தான் தன்னையும் தொற்றிக் கொண்டதாகச் சொல்கிறார் சயீஃப்.

சிறுவயதிலிருந்தே தீவிர வாசகராக இருந்தவரான சலீஃப் அலிகான், தேசிய வாசிப்பு தினமான இன்று, வாசிப்பின் மகிழ்ச்சியைப் பற்றியும், புத்தகங்களின் குரல் தன்னை எந்தெந்த விதங்களில் எல்லாம் கவர்ந்துள்ளது என்பதைப் பற்றியும் நம்மிடம் பகிர்ந்து கொள்கிறார்.

எனது சிறுவயதிலேயே புத்தகங்களுடனான எனது பயணம் தொடங்கி விட்டது. ஆரம்பத்தில்  ஆல்ஃபிரட் ஹிட்ச்காக் மற்றும் தி த்ரீ இன்வெஸ்டிகேட்டர்ஸ் படித்தது எனக்கு நினைவிருக்கிறது, அந்த அனுபவம் மிக அற்புதமானதாக இருந்தது. அவை எனது முதல் புத்தகங்கள், நான் முழு தொகுப்பையும் படித்தேன். மேலும், அமர் சித்ர கதா, டிடின் மற்றும் ஆர்ச்சி காமிக்ஸ் போன்ற நிறைய காமிக்ஸ்களை நான் வளரும்போது படித்தேன். அவற்றை நான் 7 அல்லது 8 வயதில் படிக்க ஆரம்பித்திருக்க வேண்டும், எனக்கு சரியாக நினைவில்லை என்றாலும், நான் எப்போதும் ஒரு தீவிர வாசகனாக இருந்தேன் என்று மட்டும் தெரிகிறது.

வி.சி.ஆர் மற்றும் தொலைக்காட்சி பார்க்கும் ஆர்வம் தொடங்கும் முன்பே புத்தகங்கள் என்னை வெகுவாக ஈர்த்துக் கொண்டன.  என் தாத்தா (என் தந்தை வழித் தாத்தா ) புத்தகங்களை மிகவும் விரும்பினார், என் தாய்வழி உறவினர்களான தாகூர் குடும்பமோ கல்வியறிவு மற்றும் வாசிப்பை மிகவும் நேசிக்கும் குடும்பமாக இருந்தது. எனவே, நான் ஒரு நூலகத்தை வைத்திருப்பதையும் அதில் நேரத்தை செலவிட விரும்புவதைப் பற்றியும் எனக்குப் பெரிய ஆச்சர்யங்கள் ஏதுமில்லை.

சொல்லப்போனால், ஒரு சில புத்தகங்களின் முதல் பதிப்பைப் பெற்று அந்தப்புத்தம் புது புத்தகத்தின் பக்கங்களை அதற்கேயுரிய வாசத்துடன் புரட்டும்போது ஒரு நல்ல கிளாஸ் ஒயின் அருந்துவது போன்று நம்பமுடியாததொரு அழகான உணர்வு தோன்றும். சமீபத்தில், தைமூர் ஒரு புத்தகத்தை எடுத்து வாசம் பிடிப்பதைப் பார்த்தேன். அது என் முகத்தில் புன்னகையைப் படரச் செய்தது. ஒரு புத்தகத்தை தொட்டு, அதன் வாசத்தை உணர முடிவது எப்போதுமே அழகானதொரு உணர்வு! - என்கிறார் புத்தகக் காதலர் சயீஃப் அலிகான்!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com