சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் செந்தில் பாலாஜியை கஷ்டடியில் எடுத்தது அமலாக்கத்துறை!

சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் செந்தில் பாலாஜியை கஷ்டடியில் எடுத்தது அமலாக்கத்துறை!

டந்த அதிமுக ஆட்சியின்போது போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, போக்குவரத்துத்துறையில் வேலை வாங்கித் தருவதாக பண மோசடியில் ஈடுபட்டதாக அவர் மீது புகார்கள் எழுந்தன. அதன் அடிப்படையில் அமலாக்கத்துறை சட்டவிரோத பணவர்த்தனையின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடந்திய நிலையில், கடந்த ஜூன் மாதம் 14ம் தேதி செந்தில் பாலாஜியை கைது செய்தது.

செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்ட நிலையில், அவரை விடுவிக்கக் கோரி அவருடைய மனைவி மேகலா சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த  இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வு மாறுபட்ட தீர்ப்பை வழங்கியது. இதைத் தொடர்ந்து, இந்த வழக்கை விசாரித்த, 3வது நீதிபதி சி.வி.கார்த்திகேயன், நீதிபதி டி.பரத சக்கரவர்த்தியின் தீர்ப்பை உறுதி செய்தார். அவர் தனது தீர்ப்பில், ‘செந்தில் பாலாஜியும் சட்டத்துக்கு உட்பட்டவர்தான் என்பதால் அவரை அமலாக்கத்துறை கைது செய்தது செல்லும் என்றும், அவர் பரிபூரணமாகக் குணமடைந்த பிறகு அவரை காவலில் எடுத்து விசாரிக்கலாம்’ என்றும் தீர்ப்பளித்தார்.

அதையடுத்து, செந்தில் பாலாஜியின் மனைவி  மற்றும் அமலாக்கத்துறையின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில்  மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்கு விசாரணையில், செந்தில் பாலாஜி தரப்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் மற்றும் அமலாக்கத்துறை தரப்பில் துஷார் மேத்தா ஆகியோர் ஆஜராகி தங்கள் தரப்பு வாதங்களை முன்வைத்தனர். ‘இந்த விவகாரத்தில் செந்தில் பாலாஜியை தனிப்பட்ட முறையில் காவலில் எடுத்து விசாரிப்பது மிகவும் முக்கியம்’ என அமலாக்கத் துறை தெரிவித்திருந்தது. இந்த வழக்கு ஆகஸ்ட் மாதம் 2ம் தேதிக்கு உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்தது.

இந்த நிலையில், இந்த வழக்கில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஏ.எஸ்.போபண்ணா மற்றும் எம்.எம். சுந்தரேஷ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று (07.08.2023) விசாரணைக்கு வந்தது. இவர்கள் செந்தில் பாலாஜி தொடர்ந்த மேல்முறையீட்டு மனுக்களை தள்ளுபடி செய்து தீர்ப்பு வழங்கினர். அதோடு, ‘அமலாக்கத்துறையினர் செந்தில் பாலாஜியை கைது செய்தது சட்டப்படி சரியான நடவடிக்கை; குற்றவியல் நடைமுறை சட்டம் 167 உட்பிரிவு (2)ன் கீழ் அமலாக்கத்துறையினர் ஒருவரை கைது செய்யும்போதே அந்த நபரை காவலில் வைக்கலாம் என கூறுகிறது’ என்றும் தெரிவித்தனர். அதன்படி, அமலாக்கத்துறையினர் அடுத்த ஐந்து தினங்களுக்கு அதாவது ஆகஸ்ட்12ம் தேதி வரை செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்து உத்தரவிட்டனர்.

இதைத் தொடர்ந்து, அமைச்சர் செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து விசாரிக்க சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதி அல்லி முன்பு இன்றே (07.08.2023) விசாரணைக்கு வந்தது. அப்போது, புழல் சிறையில் இருந்து காணொலி காட்சி மூலம் செந்தில் பாலாஜி ஆஜர்படுத்தப்பட்டார்.

‘உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில், இது தொடர்பாக எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது. அமலாக்கத் துறையினர் செந்தில் பாலாஜி உடல் நிலையை கவனித்துக்கொள்ள வேண்டும்’ என கூறி, ஆகஸ்ட் 12ம் தேதி வரை காவலில் வைத்து விசாரிக்க அமலாக்கத் துறைக்கு அனுமதி வழங்கி உத்தரவிடப்பட்டு உள்ளது. இதையடுத்து, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தின் உத்தரவு நகலை புழல் சிறை அதிகாரிகளிடம் அமலாக்கத்துறையினர் வழங்கினர். அதையடுத்து செந்தில் பாலாஜி புழல் சிறையிலிருந்து அமலாக்கத் துறையினரால் சென்னை சாஸ்திரி பவனில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com