

பெண்களுக்கான மாதவிடாய் விடுமுறையை சட்டரீதியாகக் கட்டாயமாக்குவது, அவர்களின் வேலைவாய்ப்புகளை மோசமாக பாதிக்கும் என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யா காந்த் கூறியுள்ளார்.
உச்சநீதிமன்றத்தில், மாணவிகள் மற்றும் பணிபுரியும் பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் விடுமுறை அளிக்க மாநில அரசுகளுக்கு உத்தரவிடக் கோரி வழக்கறிஞர் சைலேந்திர மணி திரிபாதி தாக்கல் செய்த மனு மீதான விசாரணை தலைமை நீதிபதி சூர்ய காந்த் அமர்வுக்கு வந்தது.
அப்போது பேசிய தலைமை நீதிபதி சூர்யா காந்த், மாதவிடாய் விடுமுறையை சட்டமாக கட்டாயமாக்கினால், நிறுவனங்களின் உரிமையாளர்கள் பெண்களை வேலைக்கு எடுக்கத் தயங்குவார்கள். இது பெண்களின் தொழில் வாழ்க்கையை பாதித்து, அவர்களை வீட்டிலேயே இருக்கச் சொல்லும் நிலையை உருவாக்கும்.
இத்தகைய சட்டம், அது பெண்களிடையே உளவியல்ரீதியாக தாக்கத்தை ஏற்படுத்தும். ஆண்களைவிட பெண்கள் தாழ்வானர்கள் என்ற பிம்பத்தை உருவாக்கும்.
விழிப்புணர்வை ஏற்படுத்துவது வேறு, கட்டாயமாக்கும் சட்டத்தைக் கொண்டு வருவது வேறு, சில தனியார் நிறுவனங்கள் தாமாக முன்வந்து பெண்களுக்கு மாதவிடாய் விடுப்பு அளிக்கின்றன. அது வரவேற்கத்தக்கது. ஆனால் அதை ஒரு சட்டமாகக் கட்டாயமாக்கும்போது முதலாளிகளின் மனநிலை பெண்களின் வேலைவாய்ப்பிற்கு எதிராக மாறும் என்று தெரிவித்தார். அரசியலமைப்புரீதியாக பெண்களுக்கு உரிமைகள் உள்ளன. ஆனால், சந்தை நிலவரத்தைத் தெரிந்துகொள்ள வேண்டும்.
இதுவரை இதுதொடர்பாக எந்த பெண்ணும் நீதிமன்றத்தை அணுகவில்லை என்று கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
2013-ம் ஆண்டில் கேரள அரசு நடத்தும் அனைத்து அரசு பல்கலைக்கழகங்களிலும் பெண்களுக்கு மாதவிடாய் விடுப்பு வழங்கியதாக மூத்த வழக்கறிஞர் எம்.ஆர். ஷம்ஷாத் சுட்டிக்காட்டினார். இந்த முடிவு "பாலின நீதியுள்ள சமூகத்தை உணர்ந்து கொள்வதற்கான உறுதிப்பாட்டின்" ஒரு பகுதியாகும் என்று முதல்வர் பினராயி விஜயன் அப்போது கூறியிருந்தார்.
இதே வழக்கில் கடந்த ஜனவரி மாதம், நீதிபதிகள் ஜே.பி. பர்திவாலா மற்றும் ஆர். மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு, ‘மாதவிடாய் சுகாதாரம் என்பது பெண்களின் வாழும் உரிமை, கல்வி மற்றும் ஆரோக்கியத்தின் ஒரு பகுதி’ என்று கூறியிருந்தது.
மேலும், இலவச சானிட்டரி நாப்கின்கள் மற்றும் கழிப்பறை வசதிகளை உறுதி செய்ய அரசுக்கு உத்தரவிட்டிருந்தது.
இருப்பினும், விடுமுறையை சட்டரீதியாகக் கட்டாயமாக்குவது நடைமுறைச் சிக்கல்களை உருவாக்கும் என்று தலைமை நீதிபதி தற்போது சுட்டிக்காட்டியுள்ளார்.