ஜூலை மாதத்தில் ஒரு லட்சத்து 65 ஆயிரம் கோடி ரூபாய் ஜிஎஸ்டி வசூலாகியிருப்பதாக மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக மத்திய அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2017-ஆம் ஆண்டு ஜூலை மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர், சரக்கு மற்றும் சேவை வரி வசூல் 5-வது முறையாக ஒரு லட்சத்து 65 ஆயிரம் கோடி ரூபாயை கடந்துள்ளது. இது கடந்த ஆண்டு ஜூலை மாதத்தைவிட 11 சதவீதம் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
மாநில ஜிஎஸ்டியாக 37 ஆயிரத்து 623 கோடி ரூபாயும், மத்திய ஜிஎஸ்டியாக 29 ஆயிரத்து 773 கோடி ரூபாயும் வசூலாகியுள்ளது. ஒருங்கிணைந்த சரக்கு மற்றும் சேவை வரியாக 85 ஆயிரத்து 930 கோடி ரூபாயும், செஸ் வரியாக 11 ஆயிரத்து 779 கோடி ரூபாயும் ஜூலை மாதத்தில் பெறப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.
கடந்த ஆண்டு ஜூலை மாதத்துடன் ஒப்பிடும் போது, உள்நாட்டு பரிவர்த்தனைகள் 15 சதவீதம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிகபட்சமாக டெல்லியின் ஜிஎஸ்டி வருவாய் வசூல் 25 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும், உத்தரப்பிரதேசத்தில் 24 சதவீதமும், தமிழ்நாட்டில் 19 சதவீதமும் வசூல் உயர்ந்துள்ளதாகவும் மத்திய நிதி அமைச்சகம் கூறியுள்ளது.