
தமிழகத்தில் ரேஷன் கார்டு என்பது வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள மக்களுக்கு அரசு தரப்பிலிருந்து வழங்கப்படும் ஒரு அட்டை. இந்த அட்டையை வைத்து ஏழை, எளிய மக்களுக்கு பெரிதும் உதவியாக இருக்கும் ரேசன் கடைகளில் இலவசமாகவும் மலிவு விலையிலும் பொருட்களை வாங்கலாம். அந்த வகையில் அரிசி, பருப்பு, சக்கரை, கோதுமை உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.
மேலும் தமிழகத்தில் ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகைக்கு அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்புடன், இலவச வேஷ்டி, சேலை வழங்கப்பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி வெள்ள பாதிப்பு காலங்களில் நிவாரண உதவி பெறவும், மகளிர் உரிமை தொகை பெறவும் ரேசன் அட்டை முக்கிய சான்றாக உள்ளது. அந்த வகையில் தமிழகத்தில் 33,222 நியாய விலைக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. 2.2 கோடி குடும்ப அட்டைகள் மூலம் சுமார் 7 கோடி மக்கள் பயன்பெற்று வருகின்றனர்.
நாடுமுழுவதும் தீபாவளி பண்டிகை வரும் 20ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. தீபாவளி பண்டிகையை சிறப்பாக கொண்டாட பொதுமக்கள் இப்போதே தயாராகி வருகின்றனர். மக்கள் ஆர்வத்துடன் பண்டிகையை கொண்டாட புதுத்துணிமணிகள், பட்டாசு, பலகாரங்கள் என வாங்கி வருகின்றனர்.
இந்நிலையில் தான் தீபாவளியையொட்டி தமிழக அரசு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது, இந்த தீபாவளி பண்டிகைக்கு ரேசன் அட்டைத்தாரர்களுக்கு இலவச வேட்டி, சேலை வழங்கப்படும் என அறிவித்துள்ளது. இது அனைத்து ரேசன் அட்டைத்தாரர்களுக்கும் வழங்கப்படாது என்றும் முதியோர் ஓய்வூதிய திட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு மட்டும் இலவச வேஷ்டி, சேலை வழங்கப்படும் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இலவச வேட்டி, சேலை பெற ரேசன் கடையில் முதியோர்கள் விரல் ரேகை, கருவிழி ரேகை என இருவழியாகவும் சரிபார்ப்பு தோல்வியடைந்தாலும், உரிய பதிவேட்டில் அவர்களின் கையெழுத்து மற்றும் தொலைபேசி எண்ணை பெற்றுக்கொண்டு வேஷ்டி, சேலைகளை வழங்க அதிகாரிகளுக்கு தமிழக அரசு அறிவுரை வழங்கியுள்ளது. அதேபோல் இந்த இலவச வேஷ்டி, சேலைகளை அடுத்த வாரம் முதல் ரேசன் கடைகளில் முதியோர் ஓய்வூதி திட்ட குடும்ப அட்டைதாரர்கள் பெற்றுக்கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை இயக்குனர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மாவட்ட வழங்கல் அலுவலர் தங்களுக்குரிய மாவட்டத்திற்கு வழங்கப்பட்ட பட்டியலின்படி இலவச வேட்டி மற்றும் சேலைகளை கிடங்குகளில் இருந்து தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் நியாயவிலைக் கடைகளுக்கு நகர்வு செய்யப்படுவதை உறுதிப்படுத்த வேண்டும் எனவும் மாவட்ட வழங்கல் அலுவலர் தங்களுக்குரிய மாவட்டத்திற்கு வழங்கப்பட்ட பட்டியலின்படி இலவச வேட்டி மற்றும் சேலைகளை கிடங்குகளில் இருந்து தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் நியாயவிலைக் கடைகளுக்கு நகர்வு செய்யப்படுவதை உறுதிப்படுத்த வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.