கடந்த 5 மாதங்களில் மட்டும் 2 லட்சம் பேர் பணிநீக்கம். அச்சத்தில் ஐடி ஊழியர்கள்.

கடந்த 5 மாதங்களில் மட்டும் 2 லட்சம் பேர் பணிநீக்கம். அச்சத்தில் ஐடி ஊழியர்கள்.

ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்தால் மகிழ்ச்சியாக இருக்கலாம் என எண்ணி, அந்நிறுவனங்களில் வேலைக்கு சேர அதற்கான படிப்புகளுக்கு பல லட்சம் இளைஞர்கள் விண்ணப்பித்து வருகின்றனர். இந்நிலையில் 2023ன் தொடக்கத்திலேயே பல ஐடி ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டிருப்பது, அதில் பணிபுரிய விரும்பும் நபர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 

சில மாதங்களாகவே உலகின் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களில், நாம் நினைத்துப் பார்க்காத வகையில் பணிநீக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. ஐந்து முதல் பத்து ஆண்டுகள் வரை அனுபவிக்க ஊழியர்களே, ஒரே நாளில் வீட்டுக்கு அனுப்பப்படுகிறார்கள். இது எந்த அளவுக்கு மோசமாக இருக்கிறதென்றால், காலையில் எழுந்து பணிக்கு செல்ல புறப்படும் ஆயிரக்கணக்கான ஊழியர்களுக்கு, அவர்களின் அலுவலகத்திற்குச் செல்லும் முன்பே பணிநீக்க நோட்டீஸ் வந்து சேர்கிறது. 

இதனாலேயே ஒவ்வொரு நாளும் யாரை பணியிலிருந்து நீக்கப் போகிறார்கள் என தொழில்நுட்பத்துறை ஊழியர்கள் பயத்தில் இருக்கின்றனர். மெட்டா, கூகுள், அமேசான், ட்விட்டர் போன்ற வெளிநாட்டு நிறுவனங்கள் முதல் ஷேர்சாட், டன்சோ போன்ற இந்திய நிறுவனங்கள் வரை பணிநீக்க நடவடிக்கை அதிகரித்து வருகிறது. இதில் குறிப்பிடத்தக்கது என்னவென்றால் என்னதான் பல்லாயிரக்கணக்கான ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டிருந்தாலும், அந்த நிறுவனத்தின் ஆண்டு வருமானம் அதிகரித்து தான் வருகிறதே தவிர குறைவதில்லை. 

சமீபத்தில் வெளியான ஒரு அறிக்கையின் படி, 2023ன் முதல் ஐந்து மாதங்களில் மட்டும், சுமார் 2 லட்சம் தொழில்நுட்பத்துறை ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. சுமார் 696 நிறுவனங்களில், ஜனவரி 1ஆம் தேதி முதல், மே 18ஆம் தேதி வரை இந்த பணிநீக்க சம்பவம் நடந்துள்ளது என layoff நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரியவந்துள்ளது. இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது 30 சதவீதம் அதிகமாகும். வரும் காலங்களில் இந்த எண்ணிக்கை அதிகரிக்கும் என வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர். 

இதில் மெட்டா, அமேசான், கூகுள் போன்ற முன்னணி நிறுவனங்களே அதிகப்படியான ஊழியர்களைப் பணிநீக்கம் செய்து முன்னணியில் இருக்கிறது. இதற்கு பல்வேறு விதமான காரணங்கள் சொல்லப்பட்டாலும், AI தொழில்நுட்பத்தின் வருகைதான் இதற்கு முக்கியக் காரணமாக சொல்லப்படுகிறது. மனிதர்கள் செய்யும் பெரும்பாலான வேலைகளை AI செய்து முடித்து விடுவதால், இனி இந்த நிலை மோசமாகும் என கணிக்கப்பட்டுள்ளது. 

இந்த உண்மையை பல நிறுவனங்கள் வெளிப்படையாக ஏற்றுக் கொண்டாலும், சில நிறுவனங்கள் எந்த அறிவிப்பும் இல்லாமல் பணிநீக்கத்தை செயல்படுத்தி வருகிறது. இதனால் தொழில்நுட்பத்துறை ஊழியர்களின் நிலை கேள்விக்குறியாக இருக்கிறது.

Related Stories

No stories found.
logo
Kalki Online
kalkionline.com