புதிய நாடாளுமன்ற திறப்பு விழா: வெள்ளியால் செய்யப்பட்ட நினைவுச் சின்னத்தைப் பரிசாக வழங்கும் தருமபுரம் ஆதீனம்

புதிய நாடாளுமன்ற திறப்பு விழா: வெள்ளியால் செய்யப்பட்ட நினைவுச் சின்னத்தைப் பரிசாக வழங்கும் தருமபுரம் ஆதீனம்
Published on

தலைநகர் டெல்லியில் நாளை (மே 28) புதிய நாடாளுமன்ற கட்டடத் திறப்பு மிகப் பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது. இவ்விழாவில் பங்கேற்கத் தருமபுரம் ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த சுவாமிகள் இன்று டெல்லி புறப்பட்டுச் சென்றார்.

மறைந்த முன்னாள் பிரதமர் நரசிம்ம ராவ் காலத்திலிருந்தே அதிகரித்துவரும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப தலைநகர் டெல்லியில் புதிய நாடாளுமன்ற கட்டடம் அமைக்கவேண்டும் எனும் திட்டம் ஆலோசனையிலிருந்து வந்தது. ஆனால், பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசுதான் இந்த நீண்ட நெடுநாள் திட்டத்தை நடைமுறைப்படுத்தி உள்ளது. இதனையடுத்து நாளை டெல்லியில் ஆயிரத்து 200 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள புதிய நாடாளுமன்ற கட்டடத்தைப் பிரதமர் மோடி திறந்துவைக்கவுள்ளார். இந்நிகழ்வின்போது தமிழகத்தை ஆட்சிச் செய்த மன்னர்கள் வைத்திருந்த செங்கோல் போன்ற மாதிரி புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் இடம்பெறவுள்ளது. இதனையடுத்து தமிழ்நாட்டில் உள்ள திருவாடுதுறை, தர்மபுரி, மதுரை உட்பட 20 ஆதீனங்களுக்கு நிகழ்ச்சியில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து இன்று சென்னை விமான நிலையத்திலிருந்து தருமபுரம் ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த சுவாமிகள் புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழாவில் பங்கேற்பதற்காக டெல்லி புறப்பட்டுச் சென்றார். முன்னதாக தருமபுரம் ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த சுவாமிகள் செய்தியாளர்களிடம் பேசியதாவது, “300 ஆண்டுகளுக்கு முன்பு

தருமபுர ஆதினத்தின் சார்பில் காசியில் இருந்த ஆளுமை அதாவது அப்போது அரசாட்சி செய்துகொண்டிருந்தபோது இங்கிருந்த குமரகுருபரரை சிங்கத்தின் மீதேறி அரசவைக்கு அனுப்பி வைத்தோம். மீண்டும் இப்போது தவராஜ சிங்கமாக மோடி அவர்களை புதிய நாடாளுமன்ற கட்டத்திற்கு அனுப்புவதற்காக இன்றைய நாள் டெல்லி செல்கிறோம். அவருடைய பணியும் நாடும் மேன்மையடைந்து செம்மையாக ஒரு புண்ணிய பூமி என்பதை நிரூபிக்கும் வண்ணம் புதிய நாடாளுமன்ற கட்டம் திகழவேண்டும். அதற்கு உரிய வகையில் மக்கள் எல்லோரும் நாடாளுமன்ற கட்டடம் திறக்கப்படுவதை நினைத்துப் போற்றி பிரதமர் அவர்களுக்கு நமது நல்ல ஆசிகளைத் தெரிவிக்கச் செல்கிறோம்.

புதிய நாடாளுமன்றத்தில் இடம்பெறவுள்ள செங்கோல் மாதிரியில் இடம்பெற்றுள்ள நந்தி, தருமத்தின் அடையாளமாக இடம்பெற்றுள்ளது. அதேபோல் நிகழ்ச்சியின்போது பிரதமர் மோடிக்கு ருத்ராட்ச மாலை அணிவிக்கிறோம். மேலும், வெள்ளியால் தேசிய மலரான தாமரை மற்றும் அசோக சக்கரம் பொறிக்கப்பட்ட நினைவுச் சின்னத்தை பிரதமர் மோடிக்குப் பரிசாக வழங்க உள்ளோம்” என்றார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com