இமாச்சல் பிரதேசத்தில் இடைவிடாத மழை, திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக உள்கட்டமைப்புகள் பெருமளவு சேதமடைந்துள்ளன. இதனால் சுற்றுலாத் துறை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. ஹோட்டல்கள், தங்கும் விடுதிகளில் முன்பதிவு ரத்தானதால் சுற்றுலாப் பயணிகளின் வருகை 5 சதவீதம் வரை குறைந்துள்ளது.
மலைப்பாங்கான மாநிலத்தில் மழையின் சீற்றத்தால் 1400க்கும் மேலான சாலைகள் சேதமடைந்துள்ளன. 170க்கும் மேற்பட்ட இடங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன. திடீர் வெள்ளத்தால் வாகனங்கள் அடித்துச் செல்லப்பட்டன. உள்ளூர் மற்றும் சர்வதேச சுற்றுலாப் பயணிகள் சுமார் 70,000 பேர் போக்குவரத்து வசதி இல்லாததால் சிக்கித் தவித்து வருகின்றனர். எனினும், இயற்கை பேரழிவால் பாதிக்கப்பட்ட சுற்றுலாப் பயணிகள் பத்திரமாக மாநில அரசு அதிகாரிகளால் மீட்கப்பட்டுள்ளனர்.
இயற்கையின் சீற்றத்தால் ஏற்பட்ட பேரழிவை அடுத்து நூற்றுக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் தங்களது விடுமுறைக்கால பயணத்தை ரத்து செய்துவிட்டனர். சிலர் ஹோட்டல்களில் செய்திருந்த முன்பதிவை ரத்து செய்து இருக்கின்றனர். சுற்றுலாப் பயணிகளின் வருகை குறைந்துபோனதால் சாலையோர உணவகங்களும் பாதிக்கப்பட்டுள்ளன.
‘இடைவிடாத மழை, திடீர் வெள்ளத்தால் சாலைகள் சேதமடைந்துள்ளன. இதனால் எங்களது தொழில் பாதிக்கப்பட்டுள்ளது. சுற்றுலாப் பயணிகள் வராததால் ஹோட்டல் மற்றும் உணவு விடுதிகள் பாதிக்கப்பட்டுள்ளன. வாடகைக் கொடுக்க முடியாததால் எங்களுக்கு ஹோட்டல் தொழிலை மூடும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது’ என்று மண்டி பகுதியில் சிறிய ஹோட்டல் நடத்தி வரும் மகேஷ்குமார் தாகூர் என்பவர் தெரிவித்தார்.
ராஜ்குமார் என்ற மற்றொரு ஹோட்டல் உரிமையாளர் கூறுகையில், ‘மண்டியில் நாங்கள் 25 அறைகள் கொண்ட தங்குமிடத்துடன் ஹோட்டல் நடத்தி வருகிறோம். கடந்த ஒரு மாதமாகவே சுற்றுலாப் பயணிகளின் வருகை குறைந்துவிட்டது. கடந்த காலங்களில் இதுபோன்ற மழை, வெள்ளத்தை நாங்கள் பார்த்ததில்லை. வெள்ளம், நிலச்சரிவு காரணமாக சாலைகள் மோசமாக உள்ளதால், சுற்றுலாப் பயணிகள் இங்கு வருவதற்கே பயப்படுகிறார்கள்’ என்று கூறி உள்ளார்.
‘வருமான வரி, ஜி.எஸ்.டி. போன்றவற்றிலிருந்து விலக்கு வேண்டும். கடன் தவணைகளை 6 மாதத்துக்கு நிறுத்திவைக்க வேண்டும்’ என்று ஹோட்டல் உரிமையாளர்கள் அரசை வலியுறுத்தி கேட்டுக் கொண்டுள்ளனர்.
கடந்த 6 வருடங்களில் இல்லாத அளவு இந்த ஆண்டு சுற்றுலாப் பயணிகளின் வருகை குறைந்துள்ளது. இந்த ஆண்டு ஜூன் மாதம் வரை 1.6 கோடி சுற்றுலாப் பயணிகள் இமாச்சலம் வந்துள்ளனர். இவர்களில் உள்ளூர் பயணிகள் 99.7 லட்சம் பேர், வெளிநாட்டுப் பயணிகள் 28 பேர் என மாநில சுற்றுலாத்துறை தெரிவித்துள்ளது.
சாதாரணமாக, ஜூலை மாதம் 15 தேதி வரை வெயில் காலமாகும். இந்த ஆண்டு இடைவிடாது பெய்த மழையால் வெள்ளம், நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. பருவமழை முன்கூட்டியே பெய்யாமல் இருந்திருந்தால் சுற்றுலாப் பயணிகள் வருகை மேலும் அதிகரித்திருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்து இருக்கின்றனர்.