மறுபடியும் கரூர் நகரத்தில் வருமான வரித்துறையினர் சோதனை இன்று ஆரம்பமாகியுள்ளது. மூன்றாவது முறையாக கரூரை மையப்படுத்தி சோதனையை ஆரம்பித்துள்ள வருமான வரித்துறையினர், இம்முறையும் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமான நண்பர்கள் வீட்டில் சோதனை மேற்கொண்டு வருகிறார்கள்.
இரண்டு மாதங்களுக்கு முன்னர் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் மற்றும் அவரது நெருங்கிய உறவினர்கள் வீடுகளில் தொடர் வருமான வரி சோதனை நடைபெற்றது. சென்னை, கரூர், கோவை, ஈரோடு ஆகிய இடங்களில் உள்ள பல்வேறு இடங்களில் சோதனை ஒரு வாரத்திற்கும் மேலாக தொடர்ந்தது. கரூரில் மட்டுமே வருமான வரித்துறையினரின் சோதனை எட்டு நாட்கள் நீடித்தன.
மே மாதம் கடந்த மாதம் கரூர் பகுதிகளில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமான வட்டாரங்களில் நடத்தப்பட்ட வருமான வரிசோதனையின்போது ஏகப்பட்ட பரபரப்பு ஏற்பட்டது. அமைச்சரின் ஆதரவாளர்கள் அவரது வீட்டின் முன் குவிந்துவிட்டதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் வருமான வரித்துறை அதிகாரிகள் தாக்கப்பட்டதாகவும் சர்ச்சை எழுந்தது.
இத்தகைய சர்ச்சைகளை தவிர்ப்பதற்காக மத்திய துணை ராணுவப்படையின் உதவியோடு தமிழ்நாட்டில் வருமான வரித்துறை மற்றும் அமலாக்கத்துறை சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சென்ற மாதம் தலைமைச்செயலகத்திலும் துணை ராணுவப்படையின் உதவியோடு சோதனைகள் ஆரம்பமாகின. ஆனால், தலைமைச்செயலகத்திற்குள் நுழைந்த மத்திய துணை ராணுவப்படைக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
சென்னையில் செந்தில் பாலாஜியின் நெருங்கிய வட்டாரங்களில் வருமானவரித்துறையினரின் சோதனை ஆரம்பமானது. முன்னதாக சம்பந்தப்பட்ட இடங்களில் துணை ராணுவப்படையினர் குவிக்கப்பட்டார்கள். கரூரிலும் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பராக உள்ள ராயனூர் பகுதியில் உள்ள கொங்கு மெஸ் மணி வீடு உள்ளிட்ட 5 இடங்களில் சோதனை ஆரம்பமாகியிருக்கிறது.
கொங்கு மெஸ் மணி வீட்டில் காலை முதல் சோதனை தொடர்ந்து வருகிறது, ஏற்கனவே 8 நாட்கள் கொங்கு மெஸ் மணி வீட்டில் சோதனை நடைபெற்றுள்ள நிலையில் மீண்டும் அவரது வீட்டை குறிவைத்து வருமானவரித் துறை சோதனைகளை ஆரம்பிக்கப்பட்டுள்ளதால் கரூர் வட்டாரமே பரபரப்பில் உள்ளது.
சோதனை குறித்து மேலதிக விபரங்கள் இன்னும் தெரிய வரவில்லை. வருமான வரித்துறை சோதனையை தொடர்ந்து அமலாக்கத்துறை நடவடிக்கைகள் தொடருமா என்கிற எதிர்பார்ப்பும் எழுந்திருக்கிறது.