

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள வேளையில் , வருமானவரித்துறை அதிகாரிகள் ஆளும் திமுக கட்சியின் அமைச்சரின் மகன் நிறுவனங்களில் ரெய்டு நடத்திக் கொண்டிருப்பது பரபரப்பை கிளப்பி உள்ளது.
இந்து அறநிலையத்துறையில் அமைச்சராக இருப்பவர் சேகர்பாபு. திமுகவின் முக்கிய அமைச்சர்களில் ஒருவரான இவர், தற்போது சட்டமன்றத் தேர்தலில் துறைமுகம் தொகுதியில் போட்டியிட உள்ளார். இந்த நிலையில் வருமானவரித்துறை அதிகாரிகள் , சேகர் பாபுவின் மகனது சாலை கட்டுமான நிறுவனங்களில் தீவிரமாக ரெய்டு நடத்திக் கொண்டிருக்கின்றனர்.
இந்த ரெய்டின் போது மத்தியப் பாதுகாப்பு படையினரும் , தேர்தல் பறக்கும் படையினரும் இணைந்துள்ளனர். சட்டசபை தேர்தல் பணிகள் தீவிரமாகியுள்ள நிலையில் , இந்த ரெய்டு அரசியல் வட்டாரத்தில் புகைச்சலை கிளப்பியுள்ளது.
இந்த நிறுவனங்களில் ஏதேனும் பணமோ, பொருளோ கைப்பற்றப்பட்டதாக, இதுவரை வருமானவரித்துறை அதிகாரிகள் அதிகாரப்பூர்வமாக தகவல்களை அறிவிக்கவில்லை.