ஜிஸ்கொயர் சபரீசன் மற்றும் திமுக எம்எல்ஏ வீட்டில் வருமான வரித்துறை ரெய்ட்!

ஜிஸ்கொயர் சபரீசன் மற்றும் திமுக எம்எல்ஏ வீட்டில் வருமான வரித்துறை ரெய்ட்!

மிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மருமகன் சபரீசன் நடத்தும் முன்னணி கட்டுமான நிறுவனமான ஜிஸ்கொயர் நிறுவனத்துக்கு சொந்தமான ஐம்பதுக்கும் மேற்பட்ட இடங்களில் இன்று திங்கள்கிழமை அதிகாலை முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். ஜி ஸ்கொயர் கட்டுமான நிறுவனம் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகவும், பல கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்து இருப்பதாகவும் புகார்கள் எழுந்தன.

அதன் அடிப்படையில்  இன்று திங்கள்கிழமை (ஏப்ரல் 24) அதிகாலை முதல் சபரீசனுக்கு சொந்தமான சென்னை, கர்நாடகா மற்றும் தெலங்கானா உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். தமிழ்நாட்டில் சென்னை, திருச்சி, கோவை உள்பட 50க்கும் மேற்பட்ட இடங்களில் உள்ள ஜிஸ்கொயர் நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் இந்த ரெய்டு நடைபெற்று வருகிறது. சென்னையில் நுங்கம்பாக்கம், ஆழ்வார்பேட்டை, சேத்துப்பட்டு ஹாரிங்டன் சாலை உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித் துறை சோதனை நடக்கிறது. அதேபோல் சென்னை நீலாங்கரையில் ஜிஸ்கொயர் நிறுவனத்தின் நிர்வாகி வீட்டிலும் சோதனை நடைபெறுகிறது. அதுபோல், திருச்சி, கோவை பகுதிகளில் இந்த நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களிலும் வருமான வரித் துறை சோதனை நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், சென்னை அண்ணாநகர் தொகுதி திமுக சட்டப்பேரவை உறுப்பினராக இருக்கும் மோகன் மற்றும் அவருடைய மகன் கார்த்திக் ஆகியோரது வீடுகளிலும் வருமான வரித் துறை சோதனை நடத்தப்பட்டு வருகிறது. அதேபோல், சென்னை நீலாங்கரையில் உள்ள ஜிஸ்கொயர் நிறுவனத்தின் இயக்குநர் பாலாவின் வீட்டிலும் வருமான வரித் துறை அதிகாரிகள் அதிகாலை முதலே சோதனை நடத்தி வருகிறார்கள்.

முன்னதாக, ‘2017ம் ஆண்டு முதல் 2021ம் ஆண்டு வரை ஜிஸ்கொயர் நிறுவனம் நஷ்டத்தில் இயங்கி வந்ததாகவும், 2020ல் 7 கோடி ரூபாயும், 2021ல் எட்டு கோடி ரூபாயும் நஷ்டம் ஏற்பட்டதாகக் கணக்குக் காட்டப்பட்டுள்ளது. அப்படியிருக்கும்போது கடந்த இரண்டுஆண்டுகளில் திடீர் முதலீடுகளுக்கு எங்கிருந்து பணம் வந்தது? பல ஆயிரம் கோடி லாபம் ஈட்டியது எப்படி? இந்த நிறுவனத்துக்கும் அரசியல்வாதிகளுக்கும் தொடர்பிருக்கிறதா? வாடிக்கையாளர்களிடம் பெறப்படும் பணத்துக்கு உரிய வரி செலுத்தப்படுகிறதா‘ என்றும் வருமான வரித் துறை அதிகாரிகள் கேள்வி எழுப்பியுள்ளதாக ஊடகங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன.

முன்னதாக, சில தினங்களுக்கு முன்பு தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை திமுக அமைச்சர்கள் சில பேர் மீது ஊழல் மற்றும் அளவுக்கு அதிகமாக சொத்து சேர்த்து இருக்கும் பட்டிலை வெளியிட்டிருந்தார். அதன் எதிரொலியாக தற்போது, வருமான வரித்துறை அதிகாரிகள் இந்த சோதனையில் ஈடுபட்டிருப்பது அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com