மக்கள் தொகை அதிகரிக்க காங்கிரஸே காரணம்! மத்திய அமைச்சர் பேச்சால் சர்ச்சை.

மக்கள் தொகை அதிகரிக்க
காங்கிரஸே காரணம்! மத்திய அமைச்சர் பேச்சால் சர்ச்சை.
Published on

ந்தியாவில் மக்கள் தொகை அதிகரிக்க காங்கிரஸே காரணம் என்று கூறி மத்திய நாடாளுமன்ற விவகாரங்கள்துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.

கர்நாடக மாநிலம், ஹஸ்ஸன் மாவட்டத்தில் பா.ஜ.க. சார்பில் நடைபெற்ற விஜய சங்கல்ப யாத்திரை நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் பிரஹலாத் ஜோஷி, காங்கிரஸ் ஆட்சி காலத்தில்தான் மக்கள் தொகை அதிகரித்தது. ஏனெனில் அப்போது மின்சார வசதி போதுமானதாக இல்லை. குறைந்த அளவிலேயே கிராமங்களில் அவர்களால் மின்வசதி செய்துதரப்பட்டது என்று தெரிவித்துள்ளார்.

இரண்டு நாட்கள் முன்புதான் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக அவர் கருத்து வெளியிட்டிருந்தார். நீண்டநாள் ஆட்சியில் இல்லாததால் காங்கிரஸ் கட்சி மனத்தடுமாற்றத்தில் இருக்கிறது. நாடாளுமன்றத்தில் பேசுவதற்கு அனுமதிக்கப்படுவதில்லை என்று ராகுல் காந்தி குற்றஞ்சாட்டுகிறார். உண்மை என்னவென்று தெரியாமல் அவர் பொய்யான தகவல்களை கூறிவருகிறார். பேச அனுமதிக்கப்படவில்லை என்பதற்கு ஆதாரம் காட்டமுடியுமா என்று கேட்டால் அதற்கு அவரிடமிருந்து பதில் இல்லை. நாடாளுமன்ற அவைத்தலைவர் மீது இப்படி அபாண்டமாக குற்றம் சுமத்துவது சரியல்ல என்று ஜோஷி கூறியிருந்தார்.

காங்கிரஸ் கட்சி ஊழல் பற்றி அடிக்கடி பேசி வருகிறது. ஊழல் பற்றி பேசுவதற்கு காங்கிரசுக்கு எந்த தார்மிக உரிமையும் இல்லை. ஜவாஹர்லால் நேரு காலத்திலிருந்து மன்மோகன் சிங் காலம் வரை காங்கிரஸ் ஊழலில் திளைத்தது அனைவருக்கும் தெரியும்.

கர்நாடகத்தில் எம்.எல்.ஏ. மகன் வீட்டில் சமீபத்தில் லோக் ஆயுக்தா அமைப்பினர் அதிரடி சோதனை நடத்தினர். மத்தியிலும், மாநிலத்திலும் பா.ஜ.க.தான் ஆட்சியில் இருக்கிறது. நாங்கள் நினைத்தால் சோதனை நடக்கமால் தடுத்திருக்க முடியும். ஆனால், நாங்கள் அதைச் செய்யவில்லை. ஏனெனில் தவறு செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது. காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் லோக் ஆயுக்தா முறையாக செயல்படவில்லை என்றும் ஜோஷி குற்றஞ்சாட்டினார்.

முன்னதாக கடந்த சில தினங்களுக்கு முன்பு கர்நாடக பா.ஜ.க. மாநிலத் தலைவர் நளின் குமார், ராகுல் காந்தி ஏன் திருமணம் செய்துகொள்ளவில்லை தெரியுமா? அவர் ஆண்மையற்றவர். தனக்கு குழந்தைகள் பிறக்காது என்பது ராகுலுக்கு நன்றாகத் தெரியும். அதனால்தான் அவர் திருமணம் செய்துகொள்வதில் ஆர்வம் காட்டாமல் இருக்கிறார் என்று கூறி சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com