மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர்களின் தற்கொலை கடந்த ஐந்து ஆண்டுகளில் ஒப்பிடும் பொழுது நடப்பு ஆண்டில் அதிகரித்து இருப்பதாக ஒன்றிய கல்வி இணைய சுபாஷ் சர்க்கார் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசின் பல்கலைக்கழகங்களில் தற்கொலை செய்யும் மாணவர்களின் விகிதம் அதிகரித்து வருகிறது. கல்வி கற்று அறிஞராக திரும்பி வருவான் என்று எதிர்பார்ப்போடு மத்திய அரசின் உயர் கல்வி நிறுவனங்களுக்கு அனுப்பும் பெற்றோரில் எதிர்பார்ப்புகளை பொய்யாக்கி மாணவர்கள் வீடுகளுக்கு சடலமாக வரும் நிலை அதிகரித்துள்ளது. இது மாணவர்களுக்கும் கல்வி நிலையங்களுக்கும் இடையே காணப்படும் முரண்பாடுகளின் வெளிப்பாடாக இருக்கிறது. டெல்லி ஜே என் யு வில் படித்தத் தமிழ்நாட்டைச் சேர்ந்த முத்துகிருஷ்ணன் சில ஆண்டுகளுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டார். அதேபோல், சென்னை ஐஐடியில் படித்த கேரளாவை சேர்ந்த பாத்திமா லத்தீப் சில ஆண்டுகளுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. மேலும் டெல்லி ஜேஎன்யுவில் படித்துக் கொண்டிருந்த நஜீப் என்ற மாணவர் இன்றுவரை எங்கு இருக்கிறார் என்றே தெரியவில்லை.
இந்த நிலையில் கேரளாவைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் டாக்டர் வி.சிவதாசன் நாடாளுமன்றத்தில் கேள்வி ஒன்றே எழுப்பி இருந்தார். அதற்கு மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் கடந்த ஐந்து ஆண்டுகளில் தற்கொலை செய்து கொண்ட இறந்த மாணவர்களின் எண்ணிக்கை மற்றும் அவர்களுடைய சமூக பிரிவு, பொருளாதாரப் பிரிவு ஆகியவற்றை தனித்தனியாக அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
இதை அடுத்து ஒன்றிய கல்வி இணையமைச்சர் சுபாஷ் சர்க்கார் நாடாளுமன்றத்தில் தெரிவித்த பதிலில். 2023 ஆம் ஆண்டின் தற்போதைய 7 மாதங்களில் மட்டும் 20 தற்கொலை வழக்குகள் மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு மத்திய பல்கலைக்கழகங்கள், ஐஐடி-கள், எம்ஐடி-கள், ஐஐஐடி-கள், ஐ ஐஎம்-கள், ஐஐஎஸ்இஆர்-கள் பயின்று வந்த மாணவர்களில் 98 பேர் கடந்த 5 ஆண்டுகளில் தற்கொலை செய்து கொண்டிருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
2018 ஆம் ஆண்டு 21 மாணவர் தற்கொலை செய்து இருக்கிறார். 2019 ஆம் ஆண்டு 19 மாணவர் தற்கொலை செய்து இருக்கிறார், 2020 கொரோனா உச்சத்தில் இருந்த காலத்தில் கூட 7 மாணவர் தற்கொலை செய்து இருக்கிறார், 2021 ஆம் ஆண்டு 7 மாணவர் தற்கொலை, 2022 ஆம் ஆண்டு 24 மாணவர்கள், 2023 ஆம் ஆண்டு தற்போதைய 7 மாதங்கள் வரை 20 மாணவர்கள் தற்கொலை செய்திருப்பதாக வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது என்று கூறினார்.
ஐஐடிகளில் 2018 - 2019 ஆம் ஆண்டுகளில் 8 பேர் தற்கொலை செய்து கொண்டனர். 2020- 2021 ஆம் ஆண்டுகளில் அது நான்காக குறைந்தது, 2022 ஆம் ஆண்டில் அது 9 ஆக அதிகரித்துள்ளது.
மத்திய பல்கலைக்கழகத்தில் 2018 ஆம் ஆண்டு 8 தற்கொலை செய்துள்ளனர், 2019 - 20 ஆம் ஆண்டுகளில் 2 தற்கொலை, 2021 ஆம் ஆண்டு தற்கொலை ஏதும் நடைபெறவில்லை, 2022 ஆம் ஆண்டு 4 தற்கொலைகள், 2023 ஆம் ஆண்டு தற்போது வரை 9 தற்கொலைகள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.
மேலும் மத்திய பல்கலைக்கழகங்களில் படித்து வரும் மாணவர்கள் இறந்ததற்கான காரணங்களாக தேசிய குற்றப் பதிவு ஆணையத்தின் ஆய்வின்படி. வறுமை, தொழில், வேலைவாய்ப்பு, தனித்தன்மை, துஷ்பிரயோகம், வன்முறை, குடும்பப் பிரச்சனை, கல்வி நிலையங்களில் மோதல் மற்றும் மனநல குறைவு ஆகிய காரணத்தினால் மாணவர்கள் இறந்திருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.