அரசு பள்ளிகளில் இருந்து இந்தியாவின் முதன்மை உயர்க்கல்வி நிறுவனங்களுக்குச் செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து இருப்பதாக பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. தமிழ்நாட்டைச் சேர்ந்த அரசு பள்ளி மாணவர்கள் இந்தியாவின் முதன்மை கல்வி நிறுவனங்களில் உயர்க்கல்வி பெறுவதற்கான வாய்ப்பை அதிகரிக்கச் செய்ய, தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
இதன் விளைவாக இந்தியாவின் முதன்மைக் கல்வி நிறுவனங்களில் கடந்த ஆண்டுகளை ஒப்பிடும்போது, அதிகமான எண்ணிக்கையில் தற்போதைய கல்வியாண்டில் மாணவர்கள் சேர்ந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 225 மாணவர்கள் நாட்டின் முதன்மைக் கல்வி நிறுவனங்களில் உயர்க்கல்வி பெற உள்ளனர்.
ஐஐடியில் உயர்க்கல்வி பெற கடந்த ஆண்டு தமிழ்நாடு அரசுப் பள்ளியை சேர்ந்த ஒரு மாணவர் மட்டுமே சென்ற நிலையில் நடப்பு கல்வி ஆண்டில் 6 மாணவர்கள் சென்று உள்ளனர். என்ஐடி, ஐஐஐடி, என்ஐஎப்டிஇஎம் ஆகிய கல்வி நிறுவனங்களில் கடந்த ஆண்டு 13 மாணவர்களுக்கு வாய்ப்பு கிடைத்தது. நடப்பு கல்வியாண்டில் 55 மாணவர்கள் சேர்ந்துள்ளனர். இந்திய கடலியல் ஆராய்ச்சி பல்கலைக்கழகத்தில் கடந்த ஆண்டு யாருக்கும் வாய்ப்பு கிடைக்காத நிலையில், நடப்பு கல்வி ஆண்டில் 6 மாணவர்கள் சென்றுள்ளனர்.
மத்திய சட்டப் பல்கலைக்கழகத்தில் கடந்த ஆண்டு ஒரேயொரு மாணவர் மட்டுமே சேர்ந்த நிலையில், நடப்பு கல்வியாண்டில் 7 மாணவர்கள் சேர்ந்துள்ளனர். மேலும், ஃபேஷன் தொழில்நுட்பம் படிப்பில் சேர கடந்தாண்டு எந்த மாணவருக்கும் வாய்ப்பு கிடைக்காத நிலையில், நடப்பாண்டில் 27 மாணவர்கள் இதில் சேர்ந்துள்ளனர். மத்திய பல்கலைக்கழகத்தில் கடந்த ஆண்டு 6 மாணவர்களும், நடப்பாண்டில் 20 மாணவர்களும், கட்டடக்கலை படிப்பில் சேர கடந்த ஆண்டு ஒரு மாணவரும், நடப்பு ஆண்டில் 69 மாணவர்களுக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
அறிவியல் கல்வி ஆராய்ச்சிக் கழகத்தில் கடந்த ஆண்டு ஒரு மாணவரும் சேர்ந்து படிக்க முடியாத நிலையில், நடப்பு கல்வியாண்டில் 10 மாணவர்கள் இணைந்துள்ளனர். இவ்வாறு கடந்த ஆண்டை ஒப்பிடும்பொழுது, நடப்புக் கல்வியாண்டில் இந்தியாவின் பல்வேறு முதன்மை உயர்க்கல்வி நிறுவனங்களில் தமிழ்நாட்டின் அரசு பள்ளி மாணவர்களின் சேர்க்கை அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.